18 Feb 2019

புதிய தலைமுறைப் பத்திகள்


போராட்டம் யாருக்குப் புதிது?
இந்த உலகில் எல்லாவற்றையும் போராட்டம் பண்ணித்தான் பெற வேண்டியிருக்கிறது. நிவாரணம் வேண்டும் என்று போராடும் புதிய கதைகளையெல்லாம் இப்போதுதான் கேள்விப்பட வேண்டியிருக்கிறது. இனி இதைக் கருப்பொருளாக வைத்து கதைகள், நாவல்கள் எழுத வேண்டும். பெரிய சோலி பிடித்த வேலையைத்தான் செய்ய வைக்கிறார்கள். சின்னத்தம்பி எனும் யானையையே போராட வைத்திருக்கிறார்கள். இந்த மனிதர்கள் யாரைத்தான் போராடச் செய்யாமல் விடுவார்கள் சொல்லுங்கள்!
            சொன்னால் கோபப்படுவீர்கள். தேவதைக் கதைகளிலே இந்த மனிதர்கள் மரவெட்டிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள். இப்போது அந்தத் தேவதை தங்கக் கோடரியா, வெள்ளிக் கோடரியா என்று கேட்காமல் சர்புர்ரென்று அறுக்கும் மரம் அறுக்கும் எந்திரத்தையேக் கொடுக்கிறது. மனிதர்களும் மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டு தங்கள் கடமையைச் செய்கிறார்கள்.
            அந்த எந்திரம் தப்பி எந்தக் குளத்தில் விழப் போகிறது சொல்லுங்கள். அதான் இருக்கின்ற எல்லா குளம், குட்டையையெல்லாம் தூர்த்து கட்டடம் கட்டி ஆயிடுச்சு.
            கேட்டால் சூடாகாதீர்கள்! ஆன்மீகம் என்றால் அமைதிக்குத்தானே. நீங்கள் அமைதியாக இருக்க ஏன் யானைகள் போகும் வழிகளை மறித்து ஆசிரமங்கள் கட்டுகிறீர்கள்? மலையே ஓர் அழகான சிலைதான். அங்குப் போய் ஏன் சிலையை வைக்கிறீர்கள்?
            காணும் மலை, நதி, இயற்கை எல்லாம் கடவுளின் வடிவங்கள் என்று சொல்கிறீர்கள். அவைகள் நிஜமாகக் கடவுளின் வடிவங்கள் என்றால் நதிகளை இப்படி ஏன் நாற விடுகிறீர்கள்? உங்கள் வீட்டுச் சாக்கடைகளையும் ஆலைக் கழிவுகளையும் திறந்து விட அந்தக் கடவுள்தான் கிடைத்தாரா?
            யானைகளில் ஒரு சின்னத்தம்பி உருவானது போல சிங்கம், புலி, சிறுத்தைகளில் ஏன் ஒரு சின்னத்தம்பி உருவாகவில்லை? எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது இவ்வளவு காலம் ஆகியும் உங்கள் துப்பாக்கிக்கு நீங்கள் வேலை கொடுக்காமல் இருக்கிறீர்கள் என்று. டிஷ்யூம் டிஷ்யூம் உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்று தெரியாதா? இதற்காக தூத்துகுடி போய் சாத்துகுடி வாங்க வேண்டுமா என்று கேட்டால் உங்களுக்குப் புரியாதா என்ன?
*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...