13 Sept 2022

கருவிகளும் அடையாளமும்

கருவிகளும் அடையாளமும்

ஒரு மனிதருக்கான அடையாளத்தை மனிதர் என்பதைத் தாண்டி கருவிகள்தான் தருகின்றன.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சொல்லும் திருவள்ளுவர் “சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்கிறார்.

தொழில்தான் மனிதர்களை வேறுபடுத்துகிறது, அதாவது அடையாளப்படுத்துகிறது என்கிறார் திருவள்ளுவர்.

தொழிலின் அடிப்படை கருவிகள்தான். கருவிகள்தான் தொழிலாளிகளுக்கான அடையாளத்தைத் தருகிறது.

உளியும் சுத்தியும் ஒரு தச்சரை அடையாளப்படுத்துகிறது. புத்தகமும் பேனாவும் ஓர் ஆசிரியரை அடையாளப்படுத்துகிறது. ஸ்பேனரும் திருப்புளியும் ஒரு மெக்கானிக்கை அடையாளப்படுத்துகிறது. ஸ்டெத்தாஸ்கோப்பும் ஊசியும் ஒரு மருத்துவரை அடையாளப்படுத்துகிறது.

பழைய தமிழ்த் திரைப்படங்களில் வில்லனை அடையாளப்படுத்த ஒரு பூகோள உருண்டையையும் சுழலும் நாற்காலியையும் காட்டுவார்கள், அது என்னவோ அடையாளக் கருவிகள் என்பது போல.

ஒவ்வொரு தொழிலாளிக்குமான அடையாளத்தை நாம் கருவிகளோடுதான் நினைவில் கொள்கிறோம். ஒரு எலெக்ட்ரிஷியனை ஒரு டெஸ்டர் இல்லாமல் நம்மால் அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது.

தொழிற்புரட்சி கருவிகளின் இடத்தில் இயந்திரங்களைக் கொண்டு குவித்தாலும் இயந்திரங்களும் கருவிகளே.

கருவிகளை ஒருங்கமைத்து அதை இயங்கச் செய்தால் அது ஓர் இயந்திரமாகி விடுகிறது. அதில் கருவிகளின் ஒருங்கமைப்பும் இயக்கமும் தேவைப்படுகிறது. இயந்திரங்களைக் கருவிகளின் நவீன வடிவம் எனலாம்.

தொழிற்சாலைகளுக்கு இயந்திரங்களே அடிப்படை. தொழிற்சாலைகளால் ஆலைத் தொழிலாளர்கள் உருவானாலும் அவர்கள் அங்கு கருவிகளின் தொகுப்பான இயந்திரங்களை இயக்கவே நியமிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு தொழிலாளிகள் என்ற அடையாளத்தைத் தருவது இயந்திரங்களாகி விட்ட கருவிகளே.

ஓர் அலுவலகத்தை எடுத்துக் கொண்டாலும் அதுவும் கோப்புகள், பதிவுகள், சான்றுகள் அதற்குத் தேவையான கருவிகள் மற்றும் இயந்திரங்களின் தொகுப்பிடமாகத்தான் அமைகின்றது.

அலுவலகக் கருவிகளைத் திறம்படக் கையாளும் மனிதர்களுக்கு அலுவலகக் கருவிகளே அடையாளங்களைத் தருகின்றன.

தட்டச்சர், சுருக்கெழுத்தர், எழுத்தர் என்று நாம் தரும் அலுவகப் பணியாட்களின் பெயர்கள் அனைத்தும் கருவிகளைக் கையாள்வதின் அடையாளங்களாக இருக்கின்றன.

இசைக்கருவிகளைக் கையாள்பவர்களைக் குறிப்பிடும் போது அவர்களின் கருவிகளைக் கொண்டே அவர்களை அழைப்பது கூட கருவிகளே மனிதர்களின் அடையாளங்களாக இருக்கின்றன என்பதன் அடையாளம்தான்.

கருவிகள் இப்படி தொழிலின் அடையாளமாக மனிதர்களின் அடையாளமாக மட்டுமல்ல, மனித வாழ்வாதாரத்தின் ஊற்றுக்கண்ணுமாகவும் அமைகின்றன. கருவிகளை ஆழமாக நேசிப்பதின் பின்புலத்தில் அது தரும் வாழ்வாதாரப் பலம் முக்கியக் காரணமாக அமைகின்றது.

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...