30 Aug 2022

சராசரி மனிதரின் விருப்ப வரைபடம்

சராசரி மனிதரின் விருப்ப வரைபடம்

எப்போதும் பிரபலங்களைத்தான் உங்களுக்குப் பிடிக்கும். அவர்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று ஊடகங்கள் அவர்களை அவர்களை மட்டும்தான் கேட்கின்றன. பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் தனித்த ஆர்வமும் என்னவென்றால் பிரபலங்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து கொள்வது. இந்த ஆர்வம் என்பது அடுத்த வீட்டு ரகசியங்களை ஒட்டுக் கேட்பது போலத்தான் என்றாலும் இது போன்ற ஆர்வங்களை மனித குலம் அவ்வளவு எளிதில் விட்டு விட முடியாது என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்.

ஏன் நம் மக்கள் சராசரி மனிதர்களின் விருப்ப வரைபடங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட மாட்டேன்கிறார்கள் என்று யோசித்திருக்கிறேன். நாம் அதை ஊடகச் செய்தி போல ஆக்காதது கூட ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் சராசரி மனிதர்களின் விருப்பங்களையும் அனைவரும் அறிந்து கொள்ள ஏதேனும் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த விருப்ப வரைபடம் அந்த நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் என்று நினைக்கிறேன். இதைப் பார்த்து விட்டு நீங்களும் உங்கள் கருத்துகளைச் சொன்னால் இந்த விருப்ப வரைபடத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

பிடித்த பாடலாசிரியர் : இட்டுக்கட்டிப் பாடும் தெருமுக்கு தம்புசாமி தாத்தா

போக ஆசைப்படும் இடம் : எல்லாரையும் போல தியேட்டர் அதாவது சினிமா தியேட்டர்

போக ஆசைப்படாத இடம் : அதுவும் எல்லாரையும் போல தியேட்டர் அதாவது ஆபரேஷன் தியேட்டர்

விருப்பமான உண்பண்டம் : சரக்கும் ஊறுகாயும், அபூர்வமாக சில சமயங்களில் வாய்க்கும் தொடுகறி மற்றும் அவ்வபோது கமர்கட்டும் ஆரஞ்சு மிட்டாயும்

பிடித்த புத்தகம் : பஞ்சாங்கம், குரு பெயர்ச்சி பலன்கள், சனி பெயர்ச்சி பலன்கள் (வாங்காத வருடங்கள் இல்லை. ஏதோ புத்தக வளர்ச்சிக்கு நம்மால் ஆனது)

பிடித்த உணவு : பழைய சாதமும் பச்சை மிளகாயும், எப்போதாவது தொட்டுக்கொள்ள வாய்க்கும் கருவாட்டுக் குழம்பு.

இனிமேலாவது இந்த மானுடச் சமுத்திரம் சராசரி மனிதர்களின் விருப்பத் துளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குமா? ஓ என் சரித்திர பூகோளமோ நீதான் விடை சொல்ல வேண்டும்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...