3 Dec 2021

ஆதி நிலத்தில் தெய்வங்களாய் இருந்தவர்கள்

ஆதி நிலத்தில் தெய்வங்களாய் இருந்தவர்கள்

நீங்கள் வந்து சேராத போது

சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தோம்

எந்த விதிகளுக்கும் கட்டுப்படாமல் அலைந்தோம்

எந்த சிக்னல் விளக்கும்

எங்கும் எங்களைத் தடுத்து நிறுத்தவில்லை

எங்கள் நிலங்களுக்கு விலையேதும் இல்லை

விரும்பிய இடத்தில் அவரவர் இருந்தோம்

விரும்பாத இடத்தில் விலங்குகள் இருந்தன

யாரும் நட்டு வளர்க்காமல் மரங்கள் நிறைந்திருந்தன

பறவைகள் எங்கள் வானல் பறந்து சென்றன

நீங்கள் வந்தீர்கள் ஒருவர் பின் ஒருவராக

எங்கள் இடத்தை முதலில் நகரம் என்றீர்

பிறகு மாநகரம் என்றீர்

ஒவ்வொரு அங்குல நிலத்துக்கும் விலை பேசி

எங்கள் நிலம் முழுதையும் ஆக்கிரமித்து

எங்களைச் சாலையோரம் தள்ளினீர்கள்

எங்கள் நிலத்தில் எங்களுக்கு இல்லாத உரிமை

உங்களுக்கு வந்ததாகப் பிரகடனம் செய்கிறீர்கள்

உங்கள் நிலமான பின் ஓரமாகச் செல்லும்

எங்கள் நாய் அடிபட்டுச் சாகிறது

குடி போதையோடு வரும் உங்கள் வாகனம்

எங்கள் மேல் ஏறிச் செல்கிறது

அணில் பிள்ளைகள் விவரம் புரியாமல்

உங்கள் மின் கம்பிகளில் கருகுகின்றன

நீங்கள் கட்டியிருக்கும் அதி நவீன உணவகங்கள் முன்

எங்கள் பிள்ளைகள் பிச்சைத் தட்டு ஏந்தி நிற்கிறார்கள்

நாகரிகமாக வாழ கல்வி கற்க வேண்டும் என்கிறீர்கள்

நாகரிகமின்றிச் செத்த எங்கள் முன்னோர்களை நினைந்து

நாங்கள் விடாது பெய்யும் அடைமழையென அழுகிறோம்

வீடில்லாத எங்களை ஒரு நாள் கைது செய்து

வீடு போன்றிருக்கும் சிறையில் அடைக்கிறீர்கள்

வீடு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் போது

சிறையிலிருந்து அடித்துத் துரத்துகிறீர்கள்

நீங்கள் பறித்துக் கொண்ட எங்கள் நிலத்தில்

உங்களுக்கான சட்டங்களை அமல் படுத்துகிறீர்கள்

நாங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு

உங்கள் சட்டத்தின் முன் அடிபணிந்து

அடிமை போல வாழ சம்மதிக்கிறோம்

எங்கள் மேல் கரிசனம் காட்டுவதாய்

உங்களில் சிலரைச் சேவகராய் அனுப்பி வைக்கிறீர்கள்

அவர்களை நாங்கள் ரட்சகராய் வழிபடுகிறோம்

ஆதி நிலத்தில் நாங்கள் தெய்வங்களாய் இருந்ததை மறந்து விட்டு

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...