27 Nov 2021

காய்ச்சலில் கரையும் பொழுதுகள்

காய்ச்சலில் கரையும் பொழுதுகள்

உடல் காய்கிறது என்கிறார்கள்

எனக்கோ உள்ளுக்குள் உடல் குளிர்கிறது

பனிக்காட்டில் வெடவெடப்பது போல இருக்கிறது

போர்வைகளின் போதாமைகளில்

கிடைக்கும் துணிகள் அனைத்தும்

உடல் முழுதும் சுற்றிச் சூழ்ந்திருக்கின்றன

மோரும் தயிரும் வேண்டாம் என்கிறார்கள்

அவையன்றோ நாவுக்குச் சுவையாய் இருக்கின்றன

இனிக்கும் ஜிலேபி பித்தமேறிய நாக்கில்

பாகலைப் போலவே வேம்பைப் போலவோ

தாங்க முடியாத கசப்பின் பிரதேசத்தைக் கொணர்கிறது

சில நாள் குளியல் வேண்டாம் என்கிறார்கள்

குளியல் அன்றோ தாய்மடி போல ஆறுதல் தருகிறது

கொஞ்சம் வியர்த்தால் எல்லாம் சரியாகும் என்கிறார்கள்

உடலின் நீர் பாலைவனத் தண்ணீரைப் போல மறைந்து கிடக்கின்றது

தாங்க முடியாத உடல் வலியில் சுகம் இருப்பதாக

சொல்லப் போக மருத்துவரிடம் கொண்டு செல்வது நல்லது என்கிறார்கள்

அதற்குள் பூண்டையும் மிளகையும் பொடித்த

ரசத்தின் வாசனை வீடெங்கும் நிறைகிறது

காய்ச்சல் நிற்கும் வரை ஆலோசனைகள் நிற்காமல் பெருக்கெடுக்கின்றன

படுக்கையின் சுகம் காய்ச்சலில் அன்றோ புரிபடுகிறது என்றால்

உளறத் தொடங்கி விட்டான் என்று உஷாராகத் தொடங்குகிறார்கள்

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வாகனம் வரும் ஓசை

ஒலியின் டாப்ளர் விளைவைப் போலக் கேட்கத் தொடங்குகிறது

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...