28 Apr 2018

காக்க காக்க!


குறளதிகாரம் - 13.2 - விகடபாரதி
காக்க காக்க!
            பொன்னும், மணியும், பணமும், நகைகளும் உலகின் சிறந்த பொருள்களாகக் கருதிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
            விலையுயர்ந்த பொருட்களுக்கு செய்யப்படும் காத்தலே தனி.
            முக்கியப் பிரமுகர்கள் என்று சொல்லப்படுபவர்களுக்காக செய்யப்படும் காத்தல் பணியும் தனி.
            இருப்பவர்களைச் செல்வம் காக்கிறது. அவர்கள் செல்வத்தைக் காக்கிறார்கள். ஒரு கட்டத்தில் யாருக்கு யார் காவல் என்று தெரியாமல் செல்வத்தின் காவலர்களாக ஆகி விடும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
            இல்லாதவர்களை அவர்களின் இல்லாமையே காக்கிறது. அவர்கள் பறவைகளைப் போல சிறகடிக்கிறார்கள். மடியில் கனமில்லாத போது வழியில் பயம் கொள்வது ஏது?
            வங்கிகளின் 'லாக்கர்கள்' நகைகள், பணத்தோடு ஒவ்வொருவரின் ரகசியத்தையும் காத்தல் செய்து கொண்டிருக்கின்றன.
            ஒவ்வொரு ஏ.டி.எம்.முக்கும், ஒவ்வொரு நிறுவனத்துக்கும், ஒவ்வொரு மாளிகைக்கும் வாயிற்காவலர் என்ற பெயரில் ஒருவர் காத்தல் செய்து கொண்டிருக்கிறார்.
            காத்தல் இல்லாத இடம் இது?
            இராணுவ வீரர்கள் எல்லைகளைக் காத்தல் செய்கிறார்கள் என்றால், காவல் துறையினர் சட்டம் ஒழுங்கைக் காத்தல் செய்கிறார்கள்.
            எல்லாவற்றிலும் ஒரு காத்தல் வேண்டப்படுகிறது.
            எதிலும் காத்தல் தேவைப்படுகிறது.
            ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்தமானதைக் காத்தல் செய்கிறார்கள். தாம் ஆசைப்பட்டதைக் காத்தல் செய்கிறார்கள். வருவாய்க்காக காத்தல் செய்கிறார்கள்.
            பிடித்தம் இல்லாததை யாரும் காத்தல் செய்ய மாட்டார்கள். ஆசை இல்லாத ஒன்றை எவரும் காத்தல் புரிய மாட்டார்கள். வருவாய் இல்லாதவைகளில் காத்தல் நிகழ்வது கிடையாது.
            ஒவ்வொருவரின் காத்தலும் அவரவரின் பிடித்தம், விருப்பம், ஆசை சார்ந்து, வருவாய் சார்ந்து வேறுபடுகிறது.
            பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ ஆனால் காத்தல் செய்ய வேண்டிய ஒன்று இவ்வுலகில் இருக்கின்றது.
            விருப்பம் இருக்கிறதோ, இல்லையோ ஆனால் காத்தல் செய்ய வேண்டிய ஒன்று கணக்கில் இருக்கின்றது.
            இருப்பவரோ, இல்லாதவரோ அனைவரும் காத்தல் செய்ய வேண்டியது ஒன்று வழக்கில் இருக்கிறது.
            இந்நாடோ, வெளிநாடோ, எந்நாட்டவரும் காத்தல் செய்ய வேண்டிய ஒன்று பொதுவில் இருக்கிறது.
            அதுதான் அடக்கம்.
            ஒரு பொருளை எப்படிப் பாதுகாக்கிறோமோ, அப்படியே அடக்கத்தையும் ஒரு பொருளாக கருதிப் பாதுகாக்க வேண்டும்.
            அடக்கத்தைப் ஒரு பொருட்டாகக் கருதாமல், அதை ஒரு பொருளாகப் பாதுகாக்காதவர்களுக்கு ஆக்கம் கிடையாது.
            உலகின் விலையுயர்ந்த பொருள் அடக்கமே. அதைக் காத்தல் செய்யாமல் உலகின் எந்த விலையுயர்ந்த பொருளையும் காத்தல் செய்ய முடியாது.
            ஏழையாகப் பிறந்து விட்டோம் என்று கவலை கொள்ளத் தேவையில்லை. அடக்கத்தை ஒரு பொருளாகக் கருதிக் காத்தல் செய்தால் பொருட்செல்வம் தேடி வரும்.
            எவர் துணையும் இல்லாமல் தவிக்கிறோமோ என கலங்கத் தேவையில்லை. அடக்கத்தைத் துணையாகக் கொண்டால் எல்லாருடையத் துணையும் தேடி வரும்.
            அடக்கமுள்ளவர்களை அனைவரும் விரும்புவர்.
            அடக்கமுள்ளவர்கள் அனைவராலும் மிக மிக மிக உயர்வாகப் போற்றப்படுவர். மிக மிக மிக உயர்வாக என்றால்... எப்படி என்றால்... இந்தப் பூமியில் இருப்பவைகளில் மிக உயரமானது மலைகளே. அம்மலையை விடவும் உயர்வாகப் பெரிதாக மதிக்கப்படுவர்.
            நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது என்று வள்ளுவர் சொல்லுவாரே, அப்படி போற்றப்படுவர்.
            பள்ளமான இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்பது போல, செல்வமும் அடக்கம் உள்ளவர்களிடமே கை கட்டி நிற்கிறது. அடக்கமில்லாதவர்களிடம் சேரும் செல்வம் ஒரு கட்டத்தில் தலை தெறிக்க ஓடத் துவங்கி விடுகிறது.
            நலம், வளம், பலம் எல்லாம் அடக்கமுள்ளவர்களிடமே அடங்கி நிலைக்கின்றன. அடக்கமில்லாதவர்களை விட்டு ஒதுங்கி மறைகின்றன.
            அடக்கத்தைக் காத்தல் செய்வதில் கவனம் செலுத்தினால் வேறு எதையும் காத்தல் செய்ய வேண்டியதில்லை. அனைத்தும் அடக்கத்தினைக் காத்தல் செய்யும் அச்சிறப்புக்குள் வந்து விடும்.
            அடக்கத்தைப் போல உலக உயிர்களுக்கு பொக்கிஷம் எதுவும் இல்லை.
            அடக்கத்தைப் போல உலக உயிர்களுக்கு ஆக்கம் தருவது எதுவும் இல்லை.
            அடக்கத்தைப் போல உலக உயிர்களுக்கு அதிர்ஷ்டம் தருவதும் எதுவும் இல்லை.
            அடக்கத்தைப் போல உலக உயிர்களுக்கு வளமை தருவது எதுவும் இல்லை.
            அடக்கத்தைப் போல உலக உயிர்களுக்கு வல்லமை தருவது எதுவும் இல்லை.
            அடக்கத்தைப் போல உலக உயிர்களுக்கு சக்தி தருவதும், ஆற்றல் தருவதும், திறன் தருவதுமான ஒன்று வேறு எதுவும் இந்த உலகில் இல்லவே இல்லை.
            அடக்கமே ஆக்கம். அடக்கமே யாவும். அடக்கமே மேலான தவம். அடக்கமே அகலாத செல்வம்.
            வேறு எதையும் காக்க முடியாவிட்டாலும் மனிதர்கள் மட்டுமல்லாத உலக உயிர்கள் எதுவாயினும் அவைகள் அடக்கத்தை மட்டும் காத்தல் செய்தால் போதும். அடக்கம் அனைத்தையும் காத்தல் செய்யும்.
            காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு.
            அடக்கத்தைக் காத்தால், அடக்கம் காத்தல் செய்தவரைக் காத்தல் செய்யும்.
            தர்மம் தலை காக்கும். அடக்கம் தலை உட்பட உடல் முழுவதையும் காக்கும்.
            ஆம்!
            தர்மம் தலை காக்கும்.
            அடக்கம் முழுதாய் உனை காக்கும்.
*****

பின் தொடரும் நிழலின் துரோகங்கள்

பின் தொடரும் நிழலின் துரோகங்கள்
காலையில் ஒரு பக்கமாகவும்
மாலையில் ஒரு பக்கமாகவும்
விழும் இந்த நிழல்களை
நம்ப முடியவில்லை
போலிப் போராளிகள் போல்
இரவில் இரவோடு இரவாக
ஒன்றி விடும் அவைகளை
வெளிச்சத்தைக் கொணர்ந்து
தேட வேண்டியதாக இருக்கிறது
வாழ்வோடு ஒன்றக் கலந்து விட்ட
துரோகத்தையும்
நிழலையும்
விலக்க முடியவில்லை
பின் தொடரும் நிழலின் துரோகங்கள்
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றன
துரோகங்களின் நிழல்கள்
*****

27 Apr 2018

பேரொளியா? ஆரிருளா?


குறளதிகாரம் - 13.1 - விகடபாரதி
பேரொளியா? ஆரிருளா?
            அடங்காமல் குரைக்கின்ற நாய் இருபது ஆண்டு காலம் வாழ்கிறது.
            அடக்கத்துக்குச் சான்றாய் சொல்லப்படும் ஆமை நூற்றைம்பது ஆண்டு காலம் வாழ்கிறது.
            அடக்கம் ஆயுட்காலத்தை நீட்டிக்கிறது.
            அடங்காமை ஆயுட்காலத்தைக் கத்தரிக்கிறது.
            அடக்கம் வாழ வைக்கிறது.
            அடங்காமை வீழ வைக்கிறது.
            வள்ளுவர் மொழியில் சொல்ல வேண்டும் என்றால்,
            அடக்கம் என்பது வெளிச்சம்.
            அடங்காமை என்பது இருள்.
            அதாவது அடக்கம் என்பது பிரகாசம் பொருந்திய நல்லறிவு.
            அடங்காமை என்பது இருள் செறிந்த புல்லறிவு.
            யார் அடக்கமாக இருக்க முடியும்? என்றால் யாரிடம் நல்லறிவு நிரம்பியிருக்கிறதோ அவரே அடக்கமாக இருக்க முடியும். பிரகாசம் பொருந்திய நல்லறிவால் மட்டுமே சகிப்புத்தன்மையைப் புரிந்து கொள்ளவும், கடைபிடிக்கவும் முடியும்.
            ஆத்திரம் கண்களை மறைத்தால் அறிவு இருளுக்குள் சென்று விடும்.
            அறிவு பிரகசாமாக ஒளி வீசினால் ஆத்திரம் இருளுக்குள் மறைந்து விடும்.
            அறிவுள்ளவர்கள் ஆத்திரப்பட்டு அடக்கத்தை கை விட்டு விடுவதில்லை. அவர்களுக்குத் தெரியும் அறிவே ஆயுதம், அடக்கம் பேராயுதம் என்பது.
            அறிவை அடங்காத இருளில் தள்ளி விட்டவர்களே ஆத்திரத்தையும், அடங்காமையையும் ஆயுதமாக பிரயோகிக்கிறார்கள்.
            ஆத்திரமும், அடங்காமையும் மனித சமூகத்துக்கு ஒளியைக் கொண்டு வராது, இருளில் தள்ளி விடும்.
            அடங்காமல் செயல்படுபவர்கள் அதிகப்படியானச் சக்தியை உபயோகித்து விரைவிலேயே களைத்துப் போகிறார்கள்.
            அடக்கமின்மையால் இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம், நரம்பின் செயல்பாடுகள் ஆகியவை விரைவுபட்டு படபடப்பு மிகுதியாகி வாழ்நாளும் சுருங்குகிறது.
            அடக்கம் சக்தியை அளவாக உபயோகிக்கிறது. தேவையென்றால் பயன்படுத்துகிறது. இல்லையென்றால் சேமிப்பிலேயே வைக்கிறது.
            அடக்கத்தால் இதயம் சீரற்றது துடிக்காது. இரத்த ஓட்டம் தாறுமாறாக ஓடாது. நரம்புகளின் செயல்பாடுகளில் இறுக்கமோ, நெருக்கமோ ஏற்படாது.
            அடக்கம் அமைதியாகக் காரியத்தைச் சாதிக்கும். இயல்பு எப்படியோ, இயற்கை எப்படியோ அதற்கு ஒத்திசைந்து செயல்பட அடக்கத்தால் மட்டுமே இயலும்.
            அடக்கமின்மை ஆர்பரிக்கிறது. இயல்பை மீறுகிறது. இயற்கையை மீறுவதும் அதற்கு ஒரு பொருட்டில்லை.  அது ஒத்திசைவைப் பொருட்படுத்துவதில்லை.
            அடக்கம் ஆக்கும் சக்தி என்றால், அடக்கமின்மை அழிக்கும் சக்தி.
            அடக்கமின்றி இருப்பதும், செயல்படுவதும் யார்க்கும் சாத்தியம்.
            அடக்கமாக இருப்பதே வாழ்க்கையில் கற்றறிய வேண்டிய பாக்கியம்.
            இப்பூவுலகில் அழிவை விரைவில் தேடிக் கொண்டவர்கள் எல்லாம் அடங்காமல் அதைத் தேடிக் கொண்டவர்களே. ஆக்கத்தைத் தேடித் தந்தவர்கள் எல்லாம் அடக்கமாக இருந்து அமைதியாகவும், பொறுமையாகவும் அதைச் சாதித்துத் தந்தவர்களே.
            அடக்கம் அமைதியைக் கொண்டு வருகிறது. மனதுக்குப் பொறுமையைக் கற்றுத் தருகிறது.
            இவ்வளவு அறிந்த பின்னும் மனிதச் சமூகம் ஏன் அடக்கமின்மையையே அதிகம் கைக்கொள்கிறது என்றால் அடக்கமின்மை என்பது எளிதாகவும், அடக்கமாக இருப்பது கடினமாகவும் இருப்பதே காரணம்.
            கடினமாக இருந்தாலும் கடைபிடிக்க வேண்டியது அடக்கம்.
            எளிதாக இருக்கிறது என்பதற்காக கைக்கொள்ளக் கூடாதது அடக்கமின்மை.
            ஒளி பொருந்திய நல்லறிவு அடக்கத்தையே ஆதரிக்கும்.
            இருள் பொருந்திய புல்லறிவே அடக்கமின்மையைத் தேடி ஓடும்.
            அடக்கமே ஒளி பொருந்திய அருளில் அமர்கின்ற பாக்கியத்தைத் தருகிறது. அடங்காமை எப்போதும் ஆரிருளில் தள்ளி அழிகின்ற சாத்தியத்தையேத் தருகிறது.
            சுருங்கச் சொன்னால்,
            அடக்கம் இன்பம்.
            அடங்காமை துன்பம்.
            அடக்கம் பேரொளி.
            அடங்காமை ஆரிருள்.
            அடக்கம் அமர் அருள் உய்க்கும் அடங்காமை ஆர் இருள் உய்த்து விடும்.
*****

பின்னுள்ள தத்துவம்


பின்னுள்ள தத்துவம்
ஒரு பூச்சிக்கொல்லி மருந்தின்
பின்னுள்ள தத்துவம் தெரியாமல்
வாங்கி வந்தான் விவசாயி ஒருத்தன்
முடிந்தால் பூச்சிகளை அழி
முடியாவிட்டால் நீயே குடித்து
உன்னை நீயே அழி
கார்ப்பரேட் சிரிப்புச் சிரித்தது
கருவாகி உருவாகி வந்த
பூச்சிக்கொல்லி மருந்து.
*****

26 Apr 2018

இரத்தம் தக்காளிச் சட்னி அன்று!


குறளதிகாரம் - 12.10 - விகடபாரதி
இரத்தம் தக்காளிச் சட்னி அன்று!
            பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதையே நாமும் பிறருக்கும் செய்வதே ஒழுக்கம் என்பார் பெரியார்.
            தன்னைப் போல பிறரை நேசிக்க வேண்டும் என்பார் இயேசு பிரான்.
            யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதே தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் நோக்கு.
            எல்லாரும் இன்புற்றிருக்க என்பார் தாயுமானவர்.
            யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பார் பூங்குன்றனார்.
            இப்படி தம்மையும், பிறரையும் வேறுபடுத்தாமல் தாமே பிறராகவும், பிறரே தாமகவும் கருதும் மனப்பான்மையை வளர்க்கவே இலக்கியம் விரும்புகிறது.
            தம்மையும், பிறரையும் வேறுபடுத்திப் பார்க்காத நோக்கு நிலை மானுடத்தின் உச்சநிலை.
            நடுவுநிலைமையின் மூலம் அடையப்பட வேண்டிய இறுதி நிலையும் அதுவேயாகும்.
            தமக்கும் பிறருக்கும் வேறுபாடு இருப்பதாகக் கருதுவதாயின் தமக்கு ஓர் உயர் நிலையும், பிறருக்குச் சற்றே தாழ்வான ஒரு நிலையும் தோன்றி நடுவுநிலைமை பாழ்பட்டுப் போய் விடும்.
            யாவரும் சமம் என்பதே சரியான நடுவுநிலைமைக் கொள்கை. அதை சமத்துவம் என்போம் நாம்.
            சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சட்டம் உயர்த்திப்பிடிப்பதும் யாருக்கும் பாகுபாடில்லாத நடுவுநிலைமைக் கொள்கையையே.
            எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் என்று இராமலிங்க அடிகள் கூற விழைவதும் எவ்வுயிர்க்கும் வேறுபாடு கருதாத நடுவுநிலைமைக் கொள்கையையே.
            இன்று உலகம் வணிகமயமாகி விட்டது. இதை அன்றே உணர்ந்தவர் வள்ளுவர். அவர் காலத்திலும் வணிகம் இருந்திருக்கும். இவ்வளவு கோர முகத்தோடோ, கோரப் பிடிகள் கொண்டதாகவோ இருந்திருக்காது. இருந்தாலும் அவர் வருங்காலத்துக்கும் சேர்த்தே சிந்தித்திக்கிறார்.
            சமூகத்தின் பரிமாற்றப் பொருளாதார முயற்சியாக வணிகமே அமைவதால் வணிகத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய நடுவுநிலைமை குறித்து வள்ளுவர் அதிக அக்கறை காட்டுகிறார்.
            தமக்கு ஒன்றை எப்படிச் செய்து கொள்வோமோ அப்படியே பிறருக்கும் செய்ய விழைய வேண்டும் என்கிறார்.
            நாம் எப்படிப்பட்ட பொருட்களை வாங்க நினைக்கிறோமோ அப்படிப்பட்ட பொருட்களையேப் பிறருக்கும் விற்க வேண்டும்.
            நாம் அழுகியப் பழங்களை வாங்க மாட்டோம் என்றால், நாமும் அழுகியப் பழங்களை விற்கக் கூடாது.
            தரம் குறைந்தப் பொருட்களை வாங்க விழைய மாட்டோம் என்றால் தரம் குறைந்தப் பொருட்களை விற்க விழையக் கூடாது.
            தமக்குப் பாதிப்பு தரும் பொருட்களை வாங்க மாட்டோம் என்றால் பிறருக்குப் பாதிப்பு தரும் பொருட்களை விற்கக் கூடாது.
            ஒரு வீட்டை வாங்கும் போது தமக்கெனக் கருதியே வாங்குகிறோம். தமக்கெனக் கருதியே பராமரிக்கிறோம்.
            அப்படியே பிறரது பொருட்களை வாங்கும் போதும் தமக்கெனக் கருதி வாங்குவது போல் வாங்கி, தம்முடையதைப் பராமரிப்பதைப் போல் பராமரித்து வணிகம் செய்ய வேண்டும்.
            தமக்கென வாங்கும் போது தரத்தை உறுதிபடுத்திக் கொள்வது போலத்தான் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுக்கு விற்பதற்காகப் பொருட்களை வாங்கினாலும் அவைகளைத் தமக்கென வாங்குவது போல தரமாகப் பார்த்து வாங்க வேண்டும்.
            தாம் வாங்கும் பொருட்கள் தரமாக இருப்பதை அறிந்து மகிழ்வதைப் போல தம்மிடமிருந்து பொருட்களை வாங்குபவர்களும் அப்பொருள் தரமாக இருப்பதை அறிந்து மகிழ வேண்டும். அதுதான் வணிகத்திற்கான சரியான நடுவுநிலைமை.
            இரசாயானப் பொருட்களால் பாதிப்பு என்று தெரிந்து தாம் அதை உபயோகிக்காமல், லாபம் வருகிறது என்பதற்காக மற்றவர்களுக்கு அதை விற்பதன்று வணிகம்.
            தமக்குப் பாதிப்பு தரும் பொருட்களைப் பிறரிடம் வணிகமாகச் செயயாமல் இருப்பதே சரியான வணிகம். அச்சரியான வணிகமே நடுவுநிலைமையான வணிகம்.
            வணிகம் செய்யும் போது வணிகத்தின் நடுவுநிலைமையைக் கருத்தில் கொண்டு வணிகம் செய்ய வேண்டும். பிறரிடமிருந்து பெறப்பட்டப் பொருளாயினும் அப்பொருட்கள் தமக்காகப் பெறப்பட்டால் எவ்வளவு அக்கறையோடும், கவனத்தோடும், விழிப்போடும் இருந்து பெறப்பட்டு இருக்குமோ அவ்வளவு அக்கறையோடும், கவனத்தோடும், விழிப்போடும் இருந்து பெறப்பட்டப் பொருளாக இருந்து அவைகள் வாடிக்கையாளர்களின் கைகளை அடைய வேண்டும்.
            தாம் ஒரு பொருளை வாங்கும் போது பொருளின் எடை சரியாக இருக்க வேண்டும் என்பதை எந்த அளவுக்கு விரும்புகிறோமோ, அதே அளவு பிறருக்கு ஒரு பொருளை விற்கும் போது சரியான அளவில் கொடுக்க வேண்டும்.
            தமக்காக ஒரு பொருளைக் கொள்ளும் போது கூடுதலாகக் கொள்வதோ, பிறருக்கு ஒரு பொருளைக் கொடுக்கும் போது குறைத்துக் கொடுப்பதோ நடுவுநிலைமை ஆகாது. அப்படிச் செய்வது நியாயத் தராசில் சமமாக நிற்காது.
            நியாயத் தராசில் எது சமமாக நிற்குமோ அதுவே நடுவுநிலைமை.
            தமக்கென ஓர் அளவும், பிறருக்கென ஓர் அளவும் கொண்டால் நியாயத் தராசு சமமாக நிற்காது. வணிகத்தின் நடுவுநிலைமை அங்குக் கேள்விகுறியாகி விடும்.
            தமக்கு எப்படிச் செய்யப்பட வேண்டும் என்று நினைக்கிறோமோ அப்படியே பிறருக்கும் செய்யப்பட வேண்டும் என்பதே வணிகத்தின் தார்மீகமான நடுவுநிலைமையான விதி.
            நடுவுநிலைமையற்ற வணிகம் மனிதத்தைத் தரம் குன்றச் செய்து விடும். உலகத்தை கலகப் பொருளாக்கி விடும்.
            மனிதரின் கடைசிப் பொருளாதார நடவடிக்கையாக பண்டமாற்றோ, வணிகமோ இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, அதில் ஏற்படும் பிரச்சனையே வருங்காலப் பிரச்சனையாக இருக்கும் என்பதை வள்ளுவர் அறுதியிடுகிறார்.
            அப்படிப் பிரச்சனை நேரிடின் அதற்கு என்ன தீர்வு என்பதை யோசிக்கும் வள்ளுவர், அப்பிரச்சனைக்கு மட்டுமல்லாது எப்பிரச்சனைக்கும் தீர்வாக அமைவது நடுவுநிலைமை என்பதை முன் வைக்கிறார்.
            வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின் என்கிறார்.
            உம் நாட்டுக்கு அணு மின்சாரம் ஆபத்து என்றால் அதை பிற நாட்டுக்கு விற்காதே!
            உம் நாட்டை ரசாயன வேளாண்மை அழித்து விடும் என்றால் உன் நாட்டை அழிக்கும் அதை பிற நாட்டுக்கு வணிக நோக்கில் பரப்பாதே!
            உம் நாட்டுச் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு என்றால் உம் நாட்டில் விற்க விரும்பாத அப்பொருட்களைப் பிற நாட்டில் விற்க முயலாதே!
                        ... என்று வல்லரசுகளுக்குப் பாடம் எடுக்கும் வணிக நடுவுநிலைமையும் இக்குறட்பாவில் உண்டு.
            நல்லதையே வாங்க வேண்டும், நல்லதையே விற்க வேண்டும்.
            சரியான அளவோடு வாங்க வேண்டும். சரியான அளவோடு விற்க வேண்டும்.
            போலிகளை எப்படி வாங்க மாட்டோமோ, அப்படியே போலிகளை விற்க மாட்டோம்.
            கலப்படங்களை எப்படி கைக்கொள்ள மாட்டோமோ, அப்படியே கலப்படங்களை கைமாற்ற மாட்டோம்.
            தரமற்றவைகளையும், பாதிப்புக்கு உட்படுத்துபவைகளையும் எப்படி விலக்க வற்புறுத்துவோமோ அப்படியே, அவைகளை பிறருக்கு விற்காமல் விலக்கி வைப்போம்.
            நன்மைகளையே கொள்வோம்! நன்மைகளையே கொடுப்போம்! என்ற எளிமையான அதே நேரத்தில் வலிமையான நடுவுநிலைமைக்கானக் குரலே வணிகத்திற்கான நடுவுநிலைமைக் கோட்பாடு ஆகும்.
            அதையே வள்ளுவர் பிறவும் தமபோல் செயின் என்ற அறத்தினின்று பிறழாத வணிகமாக முன்னிறுத்துகிறார்.
            இரத்தம் யாருக்கு வடிந்தாலும் ரத்தமே. அது தமக்கு வடிந்தால் ரத்தமாகவும், பறிருக்கு வடிந்தால் அது தக்காளிச் சட்னியாகவும் மாறுவதில்லை.
            தாம் ஒரு வாடிக்கையாளராக ஒரு வணிகர் எதை முன் வைப்பாரோ, அதையே ஒரு வணிகராகவும் அவர் முன் வைக்க வேண்டும்.
*****

மிரண்டுப் போகும் கடவுள்

மிரண்டுப் போகும் கடவுள்
ஆதி காலத்தில் போராட்டம் இருந்தது
அதன் முனையை நசுக்கினார் கடவுள்
பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடினான் மனிதன்
மார்க்ஸ் எனும் ராட்சசன் தோன்றி
நசுக்கப்பட்ட முனையில்
இரத்தப் பசை தடவி
இழப்பதற்கு எதுவுமில்லை என்ற
சிறகுகளை ஒட்ட வைத்தான்
பறக்கும் போராளிகளை எதிர்கொள்ள முடியாமல்
சில நூற்றாண்டுகள் பதுங்கிக் கிடந்த கடவுள்
போராளிகள் உள்ள உலகை
தனியார் மயமாக்குவதாக ஆணை போட்டு
தேசநலத்தை இன்னும் ஒரு படி மேலே உயர்த்தி
உலக மயமாக்குவதாக அறிவித்து
மார்க்ஸ் மாண்டு விட்டான் எனப்
பிரகடனம் செய்தார்
கடவுள்கள் இல்லாத உலகில்
மார்க்ஸ்கள் பிறப்பதில்லை
கடவுள்கள் உள்ள உலகில்
மார்க்ஸ்கள் முளை விடாமல் இருப்பதில்லை
மூலதனத்தின் இறுதியில்
சில வார்த்தைகள் சேர்வதைப் பார்த்து
மறுபடியும் மிரண்டுப் போனார் கடவுள்
*****

25 Apr 2018

உங்கள் சொற்கள் எப்படி?


குறளதிகாரம் - 12.9 - விகடபாரதி
உங்கள் சொற்கள் எப்படி?
            மனம் நினைப்பதை வாய் பேசுகிறது.
            தொடக்கம் மனம். முடிவு வாய்.
            வார்த்தை மனதிலிருந்து ஊற்றெடுப்பதால் வாக்குமூலம் என்பது மனதின் உறுதிப்பத்திரமாக கொள்ளப்படுகிறது.
            மனம் எப்படி நினைக்கிறதோ, அதையே வாய் பேசுகிறது.
            மனம் எப்படிக் கருதுகிறதோ, அதையே வாய் சொல்கிறது.
            மனம் எப்படி உணர்கிறதோ, அதையே வாய் வார்த்தைகளாக்குகிறது.
            மனம் கோபமாக உணர்ந்தால், வார்த்தைகளில் சூடு பறக்கிறது.
            மனம் சாந்தமாக உணர்ந்தால், வார்த்தைகளில் குளிர்ச்சி பரவுகிறது.
            மனம் சரியாக நினைத்தால், வார்த்தைகளும் சரியாக வெளிப்படுகின்றன.
            மனம் தவறாக நினைத்தால், வார்த்தைகளும் தவறாக வெளிப்படுகின்றன.
            மனம் அன்பாகக் கருதினால், நேசத்திற்குரிய வார்த்தைகள் வெளிப்படுகின்றன.
            மனம் பகையாகக் கருதினால், வெறுப்புக்குரிய வார்த்தைகள் வெளிப்படுகின்றன.
            நிலத்தின் இயல்புபடி நீர் திரிவது போலத்தான், மனத்தின் இயல்புபடி வார்த்தைகளும் திரிகின்றன.
            உவர் நிலத்து நீர் உப்பு நீராகி விடுவது போல, கசந்த மனத்தின் வார்த்தைகள் கசக்கத் தொடங்கி விடுகின்றன, கனிந்த மனத்தின் வார்த்தைகள் இனிக்கத் தொடங்கி விடுகின்றன.
            மனத்தில் துணிவு இருந்தால் வார்த்தைகளில் தைரியம் கொப்புளிக்கிறது.
            மனத்தில் பயம் இருந்தால் வார்த்தைகளில் அச்சம் புரையோடுகிறது.
            ஒருவர் மனம் எப்படி இருக்கிறதோ, அப்படியே அவரது வார்த்தைகளும் வெளிப்படுகின்றன.
            கறைபடிந்த மனதிலிருந்து தூய்மையானச் சொற்களை எதிர்பார்க்க முடியாது.
            எதிர்மறையான மனதிலிருந்து நேர்மறையானச் சொற்கள் பிறக்க முடியாது.
            கோழைத்தனமான மனதிலிருந்து வீரமான சொற்கள் தோன்ற முடியாது.
            பலகீனமான மனதிலிருந்து உறுதியானச் சொற்கள் உருவாக முடியாது.
            அலைபாயும் மனதிலிருந்து தெளிவானச் சொற்கள் தோன்ற முடியாது.
            அல்பதனமான மனதிலிருந்து பெருந்தன்மையானச் சொற்கள் வர முடியாது.
            முகம் மனத்தின் கண்ணாடி என்றால், வார்த்தைகள் மனத்தின் அளவுகோல்.
            நேர்மையான வார்த்தைகள் தூய்மையான மனத்தின் அளவுகோல்.
            சாந்தமான வார்த்தைகள் பொறுமையான மனத்தின் அளவுகோல்.
            நேசமான வார்த்தைகள் அன்பான மனத்தின் அளவுகோல்.
            மெய்யான வார்த்தைகள் வாய்மையான மனத்தின் அளவுகோல்.
            இதே அளவுகோல் எதிர்மறையான அளவுகோலுக்கும் பொருந்தும்.
            பொய்மையான மனதிலிருந்து பொய்யும், புரட்டுகளுமே வார்த்தைகளாக வெளியாகின்றன.
            கபடமான மனதிலிருந்து ஏமாற்றுகளும், போலித்தனங்களுமே சொற்களாகப் பிறக்கின்றன.
            வஞ்சகமான மனதிலிருந்து சூழ்ச்சிகளும், தந்திரங்களுமே வார்த்தைகளாக வழிகின்றன.
            மனம் கோணியிருந்தால் வார்த்தைகளும் கோணுகின்றன.
            மனம் பிறழ்ந்திருந்தால் வார்த்தைகளும் பிறழ்கின்றன.
            மனம் சாய்ந்திருந்தால் வார்த்தைகளும் சாய்கின்றன.
            மனம் சோர்ந்திருந்தால் வார்த்தைகளும் சோர்ந்து விழுகின்றன.
            மனம் நடுவுநிலைமையிலிருந்து தவறியிருந்தால் வார்த்தைகளும் நடுவுநிலைமையிலிருந்து தடுமாறி விழுகின்றன.
            முடிவைத் தீர்மானிக்கும் முன்,
            தீர்ப்பை வழங்கும் முன்,
            நீதியை உரைக்கும் முன்
            மனம் எப்படி இருக்கிறதோ, அப்படியே முடிவைத் தீர்மானிக்கும், தீர்ப்பை வழங்கும், நீதியை நிலைநாட்டும் சொற்களும் வந்து விழுகின்றன.
            ஒருதலைபட்சமான மனத்திலிருந்து ஒருதலைபட்சமான தீர்ப்பே முடிவாக நீதி என்று வழங்கப்படுகிறது.
            வண்டிச் சக்கரத்தில் கோட்டம் விழுந்திருந்தால், ஓட்டம் குறைபடுவதைப் போலத்தான், மனத்தில் கோட்டம் விழுந்திருந்ததால் சொற்களின் நடுவுநிலைமை குறைவு படுகிறது.
            மனத்தில் ஒருதலைபட்சமான கோணல் இல்லையென்றால், சொற்களிலும் ஒருதலைபட்சமான ஒருசார்புத் தன்மையற்ற செப்பம் உண்டாகிறது, நன்றாகிறது.
            நடுவுநிலைமையானச் சொற்கள் நடுவுநிலைமையான மனதிலிருந்தே பிரசவமாகின்றன.
            விதை எப்படியோ, முளைப்பும் அப்படியே.
            மனம் எப்படியோ, வார்த்தைகளும் அப்படியே.
            ஒருவர் நடுவுநிலைமைத் தவறிப் பேசுவாரானால், அவரது மனம் நடுவுநிலைமையில் இல்லை என்பதற்கு அதுவே அறிகுறியும், அளவுகோலும் ஆகும்.
            சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒரு தலையா உட்கோட்டம் இன்மை பெறின்.
            நல்ல மனம் கெட்டச் சொற்களை உரைப்பதில்லை.
            நடுவுநிலைமையான மனம் நீதி பிறழ்ந்தச் சொற்களை உதிர்ப்பதில்லை.
*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...