27 Apr 2018

பேரொளியா? ஆரிருளா?


குறளதிகாரம் - 13.1 - விகடபாரதி
பேரொளியா? ஆரிருளா?
            அடங்காமல் குரைக்கின்ற நாய் இருபது ஆண்டு காலம் வாழ்கிறது.
            அடக்கத்துக்குச் சான்றாய் சொல்லப்படும் ஆமை நூற்றைம்பது ஆண்டு காலம் வாழ்கிறது.
            அடக்கம் ஆயுட்காலத்தை நீட்டிக்கிறது.
            அடங்காமை ஆயுட்காலத்தைக் கத்தரிக்கிறது.
            அடக்கம் வாழ வைக்கிறது.
            அடங்காமை வீழ வைக்கிறது.
            வள்ளுவர் மொழியில் சொல்ல வேண்டும் என்றால்,
            அடக்கம் என்பது வெளிச்சம்.
            அடங்காமை என்பது இருள்.
            அதாவது அடக்கம் என்பது பிரகாசம் பொருந்திய நல்லறிவு.
            அடங்காமை என்பது இருள் செறிந்த புல்லறிவு.
            யார் அடக்கமாக இருக்க முடியும்? என்றால் யாரிடம் நல்லறிவு நிரம்பியிருக்கிறதோ அவரே அடக்கமாக இருக்க முடியும். பிரகாசம் பொருந்திய நல்லறிவால் மட்டுமே சகிப்புத்தன்மையைப் புரிந்து கொள்ளவும், கடைபிடிக்கவும் முடியும்.
            ஆத்திரம் கண்களை மறைத்தால் அறிவு இருளுக்குள் சென்று விடும்.
            அறிவு பிரகசாமாக ஒளி வீசினால் ஆத்திரம் இருளுக்குள் மறைந்து விடும்.
            அறிவுள்ளவர்கள் ஆத்திரப்பட்டு அடக்கத்தை கை விட்டு விடுவதில்லை. அவர்களுக்குத் தெரியும் அறிவே ஆயுதம், அடக்கம் பேராயுதம் என்பது.
            அறிவை அடங்காத இருளில் தள்ளி விட்டவர்களே ஆத்திரத்தையும், அடங்காமையையும் ஆயுதமாக பிரயோகிக்கிறார்கள்.
            ஆத்திரமும், அடங்காமையும் மனித சமூகத்துக்கு ஒளியைக் கொண்டு வராது, இருளில் தள்ளி விடும்.
            அடங்காமல் செயல்படுபவர்கள் அதிகப்படியானச் சக்தியை உபயோகித்து விரைவிலேயே களைத்துப் போகிறார்கள்.
            அடக்கமின்மையால் இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம், நரம்பின் செயல்பாடுகள் ஆகியவை விரைவுபட்டு படபடப்பு மிகுதியாகி வாழ்நாளும் சுருங்குகிறது.
            அடக்கம் சக்தியை அளவாக உபயோகிக்கிறது. தேவையென்றால் பயன்படுத்துகிறது. இல்லையென்றால் சேமிப்பிலேயே வைக்கிறது.
            அடக்கத்தால் இதயம் சீரற்றது துடிக்காது. இரத்த ஓட்டம் தாறுமாறாக ஓடாது. நரம்புகளின் செயல்பாடுகளில் இறுக்கமோ, நெருக்கமோ ஏற்படாது.
            அடக்கம் அமைதியாகக் காரியத்தைச் சாதிக்கும். இயல்பு எப்படியோ, இயற்கை எப்படியோ அதற்கு ஒத்திசைந்து செயல்பட அடக்கத்தால் மட்டுமே இயலும்.
            அடக்கமின்மை ஆர்பரிக்கிறது. இயல்பை மீறுகிறது. இயற்கையை மீறுவதும் அதற்கு ஒரு பொருட்டில்லை.  அது ஒத்திசைவைப் பொருட்படுத்துவதில்லை.
            அடக்கம் ஆக்கும் சக்தி என்றால், அடக்கமின்மை அழிக்கும் சக்தி.
            அடக்கமின்றி இருப்பதும், செயல்படுவதும் யார்க்கும் சாத்தியம்.
            அடக்கமாக இருப்பதே வாழ்க்கையில் கற்றறிய வேண்டிய பாக்கியம்.
            இப்பூவுலகில் அழிவை விரைவில் தேடிக் கொண்டவர்கள் எல்லாம் அடங்காமல் அதைத் தேடிக் கொண்டவர்களே. ஆக்கத்தைத் தேடித் தந்தவர்கள் எல்லாம் அடக்கமாக இருந்து அமைதியாகவும், பொறுமையாகவும் அதைச் சாதித்துத் தந்தவர்களே.
            அடக்கம் அமைதியைக் கொண்டு வருகிறது. மனதுக்குப் பொறுமையைக் கற்றுத் தருகிறது.
            இவ்வளவு அறிந்த பின்னும் மனிதச் சமூகம் ஏன் அடக்கமின்மையையே அதிகம் கைக்கொள்கிறது என்றால் அடக்கமின்மை என்பது எளிதாகவும், அடக்கமாக இருப்பது கடினமாகவும் இருப்பதே காரணம்.
            கடினமாக இருந்தாலும் கடைபிடிக்க வேண்டியது அடக்கம்.
            எளிதாக இருக்கிறது என்பதற்காக கைக்கொள்ளக் கூடாதது அடக்கமின்மை.
            ஒளி பொருந்திய நல்லறிவு அடக்கத்தையே ஆதரிக்கும்.
            இருள் பொருந்திய புல்லறிவே அடக்கமின்மையைத் தேடி ஓடும்.
            அடக்கமே ஒளி பொருந்திய அருளில் அமர்கின்ற பாக்கியத்தைத் தருகிறது. அடங்காமை எப்போதும் ஆரிருளில் தள்ளி அழிகின்ற சாத்தியத்தையேத் தருகிறது.
            சுருங்கச் சொன்னால்,
            அடக்கம் இன்பம்.
            அடங்காமை துன்பம்.
            அடக்கம் பேரொளி.
            அடங்காமை ஆரிருள்.
            அடக்கம் அமர் அருள் உய்க்கும் அடங்காமை ஆர் இருள் உய்த்து விடும்.
*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...