23 Jan 2020

சோ. தர்மனின் 'தூர்வை' நாவல் - ஓர் எளிய அறிமுகம்

சோ. தர்மனின் 'தூர்வை' நாவல் - ஓர் எளிய அறிமுகம்

            சோ. தர்மன் இவ்வாண்டு (2020) சாகித்ய அகாதமி விருது பெறப் போகும் எழுத்தாளர். அவரின் 'சூல்' நாவல் சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வாகியுள்ளது.
            சோ.தர்மன் கூகை, தூர்வை, சூல் என்று மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். மற்றும் பல சிறுகதைகளுக்குச் சொந்தக்காரர்.           தூர்வை அவரின் மூன்று நாவல்களில் ஒன்று. தூர்ந்து போய்க் கொண்டிருக்கும் கரிசல் காட்டின் விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக அவரது நாவல்கள் ஒவ்வொன்றையும் பார்க்கலாம். அப்படி ஒரு நோக்கம் தன்னுடைய நாவலுக்கு இருப்பதாகச் சொல்லாமல் சொல்வதில் சோ. தர்மன் கெட்டிக்காரர்.
            ‘தூர்வை’ நாவல் இரண்டு தலைமுறைகளைப் பேசும் நாவலாக விரிகிறது. மினுத்தான் மூலமாக முதல் தலைமுறையும், மினுத்தானின் மகன் பெரியசோலை மூலமாக இரண்டாம் தலைமுறையாகவும் நாவல் களம் பரப்புகிறது. மினுத்தானுக்கு முந்தைய தலைமுறையும், பெரியசோலையின் மகனும் நாவலில் பிரவேசிக்கும் போதிலும் நாவலின் பெருங்களம் என்பது இவ்விருவரையும் சுற்றியதே. ஓர் அடையாளத்துக்காக மினுத்தான் - பெரியசோலை என்று ஆண்களின் பெயர்களைச் சொல்லி நாவலின் தலைமுறைகளைச் சுருக்கினாலும் இந்நாவலை நகர்த்துபவர்களாக பெண்களும் உள்ளனர். மினுத்தானின் மனைவிமார்களில் ஒருத்தியான மாடத்தி அப்படிப்பட்டவள். நாவலின் பல முக்கிய முடிவுகள் அவளின் மனதிலிருந்து உருவாவதுதான். ஆதிச் சமூகம் தாய்வழிச் சமூகமாகத்தான் இருந்தது என்பதற்கு மாடத்தி நல்ல உதாரணம்.
             நாவலின் கதை என்று பார்த்தால் 'பின்னடைவைச் சந்திக்கும் தலைமுறை' என்ற வகையறாவைச் சேர்ந்த கதைதான். தற்போதைய நாவல்கள் பெரும்பாலும் 'தலைமுறை மாற்றம்' என்ற மைய இழையைக் கொண்டு பின்னப்படுபவைகளாக இருக்கின்றன. சோ. தர்மனின் தூர்வை நாவலும் அதற்கு விதிவிலக்கு அன்று. ஆயினும் சோ. தர்மன் தன் தூர்வை நாவலில் வித்தியாசப்பட செய்கிறார். இயல்பான மொழிநடையில் ஒரு வாய்மொழி இலக்கிய கர்த்தாவின் பேரிலக்கியமாக புனையும் மொழியில் அவர் தூர்வை நாவலை நகர்த்திச் செல்கிறார்.
            ஒரு நிலவுடைமைச் சமூகம் தொழில் மய சமூகமாக மாற்றத்திற்கு உள்ளாக்கப்படும் போது அச்சமூகம் எப்படிப்பட்ட போராட்டங்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறது என்பதற்கான உள்ளடக்கமே தூர்வை நாவலைத் தீர்மானிக்கிறது எனலாம். இப்போராட்ட களத்தில் சோ. தர்மன் அச்சமூகத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வழக்காறுகளையும் வலுவாக நிலைநாட்டுகிறார்.
            செழுமையான ஒரு தலித்திய வாழ்வியலை தமிழ் இலக்கியத்தில் பார்ப்பது அரிது எனும் வகையில் சோ. தர்மன் தன்னுடைய தூர்வை நாவல் மூலம் காட்டுவது வளமையான மினுத்தானின் வாழ்வியலாகும். மினுத்தான் உருளக்குடி கிராமத்தின் பண்ணையாருக்கு நிகராக வாழும் சம்சாரியாக இருக்கிறான். பிற சாதிச் சமூகத்தினர் மதிப்புடன் பார்க்கக் கூடிய நிலபுலன்களையும், விவசாய நுட்பங்களையும் அறிந்த உழைப்பாளியாகவும், நேர்மையாளனாகவும் திகழ்கிறான். மினுத்தானின் மீது எவ்வித சாதிய இழிவோ, அடக்குமுறையோ நிகழ்த்தப்பட்டதாக நாவலில் சாட்சியம் இல்லை. ஒரு பரிதாபகரமான தலித்திய வாழ்வியலை முன் வைக்காத, ‍அதே நேரத்தில் அந்த வாழ்வு எப்படி நிலத்தாலும், நீராலும் பரிதாபகரமான நிலையை நோக்கிச் செல்கிறது என்பதை இந்நாவல் அப்பட்டமாக காட்டுகிறது.
            ஒரு தலித்திய நாவல் என்ற வட்டத்தில் அடைபடாமல் சூழலியல் நாவலாகவும் விரிவது 'தூர்வை' நாவலின் தனிச்சிறப்பு. தூர்வை நாவல் இரண்டு முக்கிய சூழலியல் பிரச்சனைகளைப் பேசுகிறது.
            1. நிலத்தின் மீது நிகழ்த்தப்படும் சுரண்டல்,
            2. நீர்ப் பங்கீட்டில் நிகழ்த்தப்படும் சமமற்ற தன்மை.
            ஒரு வகையில் பார்த்தால் இவ்விரு பிரச்சனைகளும் கோயில்பட்டியைச் சுற்றியுள்ள கரிசல் மண்ணுக்கு மட்டுமே உரிய பிரச்சனைகள் என்று சொல்லி விட முடியாது.
            தஞ்சையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலங்கள் ப்ளாட்டுகளாக மாறுகிறதென்றால், நாகப்பட்டினத்தைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளில் நிலங்கள் இறால் பண்ணைகளாக மாறுகிறதென்றால், சேலத்தைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகள் எட்டுவழிச் சாலைகளாக மாறுகிறதென்றால், பெருநகரங்களைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகள் தொழிற்சாலைகளாக மாறுகிறதென்றால், கரிசல் மண்ணின் நிலங்கள் தீப்பெட்டித் தொழிற்சாலைகளாகவும், சாக்குக் கம்பெனிகளாகவும் மாற்றம் பெறுகின்றன. நிலங்கள் மாறுகின்ற வடிவங்கள் வெவ்வேறாக இருந்தாலும் வடிவ மாற்றம் என்பது பொதுவாக இருக்கிறது. அது தொழில்மயச் சமூகத்தின் கோர பிடியாகவும், வளர்ச்சி என்ற முழக்கத்தின் அசுரப் பிடியாகவும் இருக்கிறது. ஒரு சிறிய கரிசல் மண் பிரதேசத்தில் நிகழும் சூழலியலின் வடிவ மாற்றம் பன்னாட்டு அளவுக்குப் பொருந்திப் போவது அந்நாவல் பேசும் அசலான குரலுக்கான அத்தாட்சி ஆகும்.
            கரிசல் மண்ணின் தொழில் முக மாற்றம் என்பது நெல் பயிரிட்ட நிலங்களை கருவேல மரங்களாக்கியதாக சென்று முடிகிறது. மழைக்குறைவு மற்றும் நீர்ப் பற்றாக்குறை எனும் இயலாமையான பொருளாதார தாகத்தை அந்நிலம் தொழில்மய மாற்றத்தில் தேடுவதாக முடிகிறது. இவ்விடயங்களை இந்நாவல் பேசாமல் பேசுவதன் மூலம் தனித்தக கவனத்தைப் பெறுகிறது.
            அத்துடன் ஆண்களுக்கு நிகராக பெண்களின் சம பங்கை, சம அதிகாரத்தை,  தன் வாழ்வைத் தானே தீர்மானித்துக் கொள்வதில் அவர்களுக்கு இருக்கின்ற சம முன்னுரிமையை காட்டுகிற வகையிலும், அசலான ஆதிச் சமூகத்தின் சிறப்பைக் காட்டுகிற வகையிலும் நாவலில் வலம் வரும் மாடத்தி, முத்தையாவின் மனைவிமார்கள், தீத்தாம்பட்டி பாப்பா, குருசாமி மறுமணம் செய்து கொள்ளும் முத்தம்மாள் என்று நாவலின் பல பெண் பாத்திரங்கள் சமூக ஆண் - பெண் சமத்துவத்தைக் காட்டும் வகையில் விரிவது நாவலின் மற்றுமொரு சிறப்பு.
            நிலத்திலும், நீரிலும் சமத்துவத்தைப் பேணாத அரச நிர்வாகங்களின் கொள்கை முடிவுகள் மனிதர்களைப் பழி வாங்கும் உணர்வில் கொண்டு போய் நிறுத்துவதையும், அதன் விளைவாக மனிதர்கள் இடுப்பில் சூரிக் கத்தியோடு திரிவதையும் சுட்டிக் காட்டியபடி நாவல் முடிவுறும் போது வீசி அடிக்கும் இரத்த கவிச்சிக்கு நாம் எந்தப் பதிலைச் சொல்வது?
            நீர் - நிலம் சார்ந்த பிரச்சனைகளே இன்றைய மனித குலம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள். நிலத்திலும், நீரிலும் பொதுவைக் காணாமல் மனித குலம் அமைதியடையப் போவதில்லை. நிலம் - நீர் இந்த இரண்டும் யாவருக்கும் பொது என்ற நிலையை நிலைபடுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அரச நிர்வாகத்திற்கு இருக்கிறது. இவ்விரண்டையும் அரச நிர்வாகமே பிடுங்குவதோ, கார்ப்பரேட்டுகளின் கைகளில் ஒப்படைப்பதோ மனிதச் சமூத்தில் அமைதியற்றத் தன்மையை உண்டாக்குவதற்கான முன்னோட்டம் என்பதாகத் தூர்வையின் குரல் ஒலிக்கிறது எனலாம். சமமான தன்மையைத் தூர்ந்து போகாமல் காக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரச நிர்வாகத்துக்கும், அரச நிர்வாகத்தை உருவாக்கம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அந்தத் திசையை நோக்கி இந்நாவல் நகர்த்துவது சோ. தர்மனின் இயல்புவாத எழுத்துக்குக் கிடைத்த வெற்றி எனலாம்.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...