15 Mar 2024

சித்தார்த்தனின் ‘நிறப்பிரிகை’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

சித்தார்த்தனின் ‘நிறப்பிரிகை’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

இந்த வலைப்பூவைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு சித்தார்த்தன் பற்றிய அறிமுகம் தேவையில்லை. இவ்வலைப்பூவை முதன் முதலாகப் படிப்பவர்களுக்காகச் சித்தார்த்தனைப் பற்றிய சிறிய அறிமுகம் தேவைதான்.

சித்தார்த்தன் எனக்கு இலக்கிய அண்ணன் முறை. எங்கள் இருவரது கிராமங்களும் அருகருகே ஐந்து கிலோ மீட்டர்களுக்குள் உள்ளடக்கம். ஒரே பள்ளியில் படித்தோம். அவர் எனக்கு மூத்தவராகப் படித்தவர். இரண்டு பேருக்குமே சற்றேறக்குறைய ஒரே மாதிரியான குடும்பப் பின்னணிதான். இருவரின் தந்தைமார்களும் ஆசிரியர்கள். இருவரது குடும்பங்களும் பழக்க வழக்கத்திலும் அணுக்கமான குடும்பங்கள்தான்.

இருவருக்குமே வாசிப்பு மீதும் எழுத்தின் மீதும் தீராத ஆர்வம். எல்லா ஆசிரியர்களின் பிள்ளைகள் போலவே அவர் மருத்துவராக அல்லது பொறியாளராக இருந்த வாய்ப்பில் அவர் பொறியாளராக ஆனார். நான் அந்தச் சாத்தியங்களை அடித்து நொறுக்குவது போல ஆசிரியராக ஆனேன். இந்த ஒரு வித்தியாசம்தான் எங்கள் இருவருக்குள்ளும்.

சித்தார்த்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘ஒரு நாளின் வெற்றி’. அவரே சுய முயற்சியெடுத்துப் போட்டத் தொகுப்பு.

இரண்டாவது தொகுப்பு ‘வாழ்க்கை நதியின் திணர்த்த வண்டல்கள்’.

மூன்றாவது தொகுப்பு ‘இதயத்துடிப்பின் பேச்சு’.

நான்காவது தொகுப்பு தற்போது வெளியாகியிருக்கும் ‘நிறப்பிரிகை’. முதல் தொகுப்பு தவிர மற்ற மூன்று தொகுப்புகளும் வானவில் புத்தகாலய வெளியீடு.

ஒவ்வொரு தொகுப்பிற்கும் இடையே இரண்டாண்டு, ஓராண்டு, மூன்றாண்டு என்று இடைவெளிகளைப் பார்க்கலாம். சீரான இடைவெளியில் குழந்தைகளைப் பிரசவித்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறையை ஒத்த பொறுப்புணர்வு சித்தார்த்தனுக்குச் சிறுகதைகளை எழுதுவதிலும் உண்டு. ஒரு கதையை எழுதுவற்கு இரண்டு மூன்று மாதங்கள், சில கதைகளுக்கு ஓராண்டு காலம் வரை எடுத்துக் கொள்ளும் பிரயத்தனமும் அவரிடமும் உண்டு.

‘நிறப்பிரிகை’ தொகுப்புக்கு முந்தைய தொகுப்புகளைப் படித்தவர்களுக்கு அவருடைய சிறுகதை அடையாளம் புதுமைப்பித்தனிலிருந்து புறப்பட்டது என்பதை அனுமானிப்பதில் சிரமம் இருக்காது. அவ்வபோது அவரது சிறுகதைகளுக்குள் சுஜாதாவின் முகமும் பளிச்சிடும் என்றாலும் சுஜாதாவின் தளம் வேறு, இவர் தளம் வேறு.

சில நேரங்களில் ஜெயகாந்தனைப் போல உக்கிரமாக எழுதுகிறாரா என்றால் அப்படியும் சொல்ல முடியாது. சில சிறுகதைகளின் வெளிப்பாடுகளில் ஜெயகாந்தனும் வந்து போகிறார். வாழ்க்கையையும் மனிதர்களையும் உற்றுக் கவனித்து எழுதும் போது அந்த வாழ்க்கையும் மனிதர்களும் கதைகளுக்குள் அப்படியே வந்து போவது போல வாசிப்பில் உள்வாங்கிய அளவில் ஜெயகாந்தனும் வந்து போகிறார்.

அப்படி இல்லையென்றாலும் அப்படி இருப்பதாக இருக்கும் ஒரு வாசக கட்டுமானத்தைத் தகர்த்து இந்த நான்காவது தொகுப்பு புதுமைப்பித்தன் – சுஜாதா – ஜெயகாந்தன் என்கிற வட்டத்தை விட்டு வெளியே வந்து தனக்கென புதிய பரிமாணத்தைத் தேடும் அவரது ஆர்வத்தைக் காட்டுகிறது.

இத்தொகுப்பின் கதைகளில் வாழ்க்கை நிகழ்வுகளோடு மனிதர்கள் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் எதார்த்தத்தோடு தன் படைப்பு மனத்தை முன் வைக்கிறார். அப்படி எதிர்கொள்ளுதல்களில் எவ்வித சமாளிப்புகளோ, தாட்சண்யங்களோ, கழிவிரக்கங்களோ இல்லை என்பதுதான் இத்தொகுப்பைத் தனித்துவமாக்குகிறது.

கதைப் பாத்திரங்களின் எந்தப் பக்கமும் நின்று சித்தார்த்தன் நியாயம் பேசாதது இத்தொகுப்பின் பலம் எனலாம். பாத்திரங்களுக்கான நியாயத்தைக் கதையே பேசுகிறது. அதை ஒரு கதையாசிரியர் பிரச்சாரக் குரல் கொடுத்துப் பேச வேண்டிய அவசியம் இல்லை. கதைப் பேசும் போக்கில் வாசகர்களைப் பேச வைக்கும் சுதந்திரம் ஒரு சிறுகதைக்கு முக்கியம். அந்த முக்கியத்துவத்தை உணர்ந்து இத்தொகுப்பைப் படைத்திருக்கிறார் சித்தார்த்தன்.

நிறப்பிரிகையின் வண்ணங்கள் ஏழு என்றாலும் இத்தொகுப்பில் எட்டு சிறுகதைகள் இருக்கின்றன. எட்டாவது சிறுகதை நிறப்பிரிகையைத் தாண்டி எட்டாவது வண்ணத்தைப் பிரசவிப்பது போலத் தனிமுத்திரையைப் பதிப்பதாகவும் உள்ளது.

இத்தொகுப்பின் எட்டாவது கதையை மட்டும் இத்தொகுப்பு வெளியே வருவதற்கு முன்பே நான் வாசித்திருக்கிறேன். அப்போது வாசித்ததற்கும், தொகுப்பில் தற்போது வாசிப்பதற்கும் இடையே ஒரு கனக்கச்சிதத்தை உணர்கிறேன். இக்கனகச்சிதத்திற்காக சித்தார்த்தன் மீண்டும் மீண்டும் எழுதி முயற்சித்திருக்க வேண்டும்.

இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள நிறப்பிரிகை, செக்சன் 67(b), வியாபார வியூகம், சின்னச் சின்ன சொர்க்கங்கள், புதிய கண்ணிகள் போன்ற கதைகளின் களத்தையும் பாத்திரங்களையும் எங்கேனும் நீங்கள் பாத்திருக்கலாம், அனுபவித்தும் இருக்கலாம், வாசித்தும் இருக்கலாம். கதைகளை வாசிக்க வாசிக்க அதன் போக்குகளையும் நீங்கள் அனுமானிக்கலாம். அக்கதைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி நடையும் உரையாடல்களும் மட்டுமே அக்கதைகளுக்கு தனித்த அடையாளத்தைத் தருகின்றன. ஒரு படைப்பு மனமானது நன்கறிந்த கதைப்போக்குகளையும், கால மாற்றத்தால் உண்டாகும் சம்பவங்களையும் புதிய கோணத்தில் எழுதி பார்க்கவும் முயல்கிறது. அப்படியான கதைகள் என்று அவற்றை ஒரு வகைமைக்குள் கொண்டு வரலாம்.

அரசாங்க காரியம், மானுட கம்போரா ஆகிய இரு கதைகளும் காட்டும் கதைக்களமும் பாத்திரங்களும் இதுவரை வெளிவந்த சிறுகதைகளில் நீங்கள் பார்த்திருக்க முடியாதவை. அரசாங்க காரியத்தில் வெளிப்பட்டிருக்கும் உரையாடல்களும் பாத்திரப் படைப்புகளும் ஒரு சிறுகதைக்கான முழுமையான நியாயத்தைச் செய்திருக்கின்றன.

வாழ்க்கையும் புனைவும் கலந்து வெளிப்படும் படைப்புகளில் மனிதர்களின் எந்தக் குணத்தையும் மறைத்தோ, ஒளித்தோ, நயமாக வெளிப்படுத்தியோ படைப்பில் எந்தக் குந்தகத்தைச் செய்ய வேண்டியதில்லை. ஒரு பாத்திரத்தின் படைப்பையும் உரையாடல்களையும் வெளிப்படுத்தும் போது புனைவு என்பது இல்லாமல் இருக்காது என்ற போதிலும் புனைவுக்கான நியாயத்தை எதார்த்தத்தோடு எடுத்து வைக்கும் விழிப்பு மனம் எப்போதும் எழுத்தாளர்களுக்குத் தேவையாக இருக்கிறது. அந்த விழிப்பு மனத்தோடு இக்கதையைச் சித்தார்த்தன் சொல்லியிருக்கிறார்.

உண்மையை அப்படியே புனைவாக்குவதில் இருக்கும் சிரமம் சாதாரணமானதல்ல. அதற்கான மனத்தயாரிப்பும் வெளிப்படுத்துவதற்கான படைப்பு முயற்சியும் அவ்வளவு எளிதில் சாத்தியமாகக் கூடியதும் கிடையாது. அது சட்டென்று கருத்தரித்து பிரசவமாகி விடும் என்று சொன்னாலும் அதற்கான கருத்தரிப்புக்கும் பிரசவத்துக்கும் ஒரு படைப்பு மனம் மிக நீண்ட காலம் தவமிருந்திருக்கும் என்பதை வாசகர்கள் படிக்கும் போதே புரிந்து கொள்ள முடியும். சித்தார்த்தனின் இத்தொகுப்பை வாசிப்பவர்கள் அதைப் புரிந்து கொள்வார்கள்.

மனிதன் இவ்வளவு சல்லித்தனமானவனா? அல்லது அவ்வளவு மகத்தானவனா? – இந்த இரண்டு கேள்விக்குமான பதிலையும் ஒரு சிறுகதை ஒரு பாத்திரத்தை சல்லித்தனமாகப் படைத்தும் சொல்லி விடும், மகத்தானவனாகப் படைத்தும் சொல்லி விடும். இரண்டிலும் ஒரு சிறுகதை உணர்த்த விரும்பும் மாற்றம் ஒன்றேதான். சல்லித்தனத்தைச் சொல்லி மனிதர்களை மகத்துவமானவர்களாக மாற்றுவதும் அல்லது மகத்தானதைச் சொல்லி மகத்துவமானவர்களாக மாற்றுவதும்தான் அந்த ஒரே வித மாற்றம்.

அரசாங்க காரியத்தில் யார் நல்லவர், கெட்டவர் என்ற அபிப்ராய பேதங்களை வாசகர்கள்தான் உருவாக்கிக் கொள்ள முடியும். சமூக, பொருளாதார சூழல்கள் மனிதர்களை எப்படி இறுகிப் போக வைக்கிறது, அவர்களின் ஆளுமையை எப்படி உறைய வைத்து விடுகிறது என்பதை அக்கதை காட்டுகிறது.

கம்போரா கோழிகளுக்கு வரும் ஒரு நோய். கம்போரா போல எந்த நோய் வந்து எந்தக் கோழி சாகும் என்றெல்லாம் கணிக்க முடியாது. மனிதர்கள் தங்களால் முடிந்த அளவுக்குத் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டிருந்தாலும் சீக்கு வந்துச் சாகும் கோழிகளை எந்தத் தடுப்பூசியாலும் காப்பாற்ற முடியாமல் போகும் அபத்தம்தான் இந்த சிறுகதையின் முடிச்சு. இந்த முடிச்சைப் பிள்ளை வளர்ப்போடு இணைத்து ஓர் உருவக்கூடிய சுருக்காகப் போட்டுப் பார்க்க நினைக்கிறார் சித்தார்த்தன். ஒழுக்கம், கட்டுபாடு என்பதெல்லாம் உயர்ந்த தடுப்பூசிகள்தான். தடுப்பூசிகளைத் தாண்டி நோய் வந்து தாக்கும் அபத்தத்தை அல்லது ஆபத்தை யார்தான் என்ன செய்து விட முடியும்? கொரோனா தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டதால் இறந்தவர்களும் இருக்கிறார்கள் இல்லையா?

வாழ்க்கையின் போக்கில் எப்போதும் ஓர் அபத்தம் நிழலாடிக் கொண்டே இருக்கிறது. அதை முரண் என்று முறையான சொல்லால் சொல்வதை விடவும் அபத்தம் என்று குறிப்பிடுவது வாழ்வியலோடு இணையும் படைப்புகளுக்குப் பொருத்தமாக இருக்கும். ஒழுக்கமுள்ள தந்தைக்கு ஓர் ஒழுக்கமில்லாத மகன் என்பதுதான் மானுட கம்போரா கதையின் அடிப்படையான முரண். கதை அதுதான் என்று சட்டமிட்டுக் கொண்டால் அதுவும் ஒரு வழக்கமான சிறுகதையாக வெளிப்பட்டிருக்கும்.

அபத்தம் என்ற பார்வையில் பார்க்கும் போது அச்சிறுகதை ஏற்படுத்தும் தாக்கம் பல கேள்விகளை விரிய விடுகிறது. அபத்தம் எப்போது யாரைத் தாக்கும்? எப்படித் தாக்கும் என்றெல்லாம் சொல்ல முடியுமா என்ன? மானுட கம்போராவில் தாக்கும் அபத்தமும் அதுதான். குடிநோய் ஒரு வகை மானுட கம்போராதான்.

எல்லாரும் குடிப்பதில்லை. எல்லா கோழிகளும் கம்போரா வந்து இறந்து விடுவதில்லை. வாழ்வின் அபத்தத்தை எடுத்துக் காட்டி அந்த அபத்தத்தையே நுட்பமாகக் கேள்வி கேட்கும் உள்ளுணர்வை ஒரு நேர்மையான படைப்பு செய்து விடுகிறது. நன்றாக வளர்க்க நினைக்கும் கோழி கம்போரா வந்து சாவதும், குடும்பத்தைத் தாங்க வேண்டிய பிள்ளை குடிநோயில் வீழ்வதும் வாழ்வின் அபத்தங்கள் என்று மட்டும் குறுக்கி விட முடியாது. அங்கிருந்துதான் வாழ்வின் கதையாடல் தொடங்குகிறது. எவ்வளவுதான் எழுதித் தீர்த்தாலும் எழுத வேண்டிய எழுத்துகள் அங்கிருந்துதான் பிறக்கின்றன. அதை தன்னுடைய கதைகளில் நிறைவாகச் செய்திருக்கிறார் சித்தார்த்தன்.

ஒரு முப்பட்டகம் போல வாழ்க்கையானது ஏழு நிறங்களை மட்டும் காட்டுவதில்லை. அது காட்டும் நிறங்களுக்கு அளவேயில்லை. இன்னும் அது புதிய புதிய வண்ணங்களைக் காட்டிக் கொண்டுதான் இருக்கும். அந்த வண்ணங்களை உள்வாங்கி எழுத வேண்டிய தேவையும் இருக்கத்தான் செய்கின்றது. சிறுகதை புதுமைப்பித்தனோடு முடியாமல் இருப்பதற்கும், கவிதை கம்பனோடு முடியாமல் இருப்பதற்கும், நீதி போதனை வள்ளுவரோடு முற்றுபெறாமல் இருப்பதற்கும் அதுவே காரணம்.

ஒளியின் ஒரு கீற்று பல்வேறு வண்ணங்களாக நிறப்பிரிகை அடைவதைக் காட்டும் முப்பட்டகம் போலச் சித்தார்த்தனின் இத்தொகுப்பும் உள்ளது. அவர் வாழ்க்கையின் கீற்றுகளுக்காகத் தனது முப்பட்டகத்தை மாற்றி மாற்றி பல்வேறு கோணங்களில் வைத்துப் பார்க்கிறார். காணாத வண்ணங்களைக் காண வைக்கிறார். அதற்காக அவர் வாழ்க்கையின் கீற்றுகளை ஒருபோதும் மாற்றுவதில்லை. தனது கோணங்களை மற்றும்தான் மாற்றுகிறார் என்பதே அவரை எனக்கு சமரசமில்லாத எழுத்தாளராகக் காட்டுகிறது.

ஒரு வியாபாரத் தளத்தில் இயங்கும் எழுத்தாளர் வாழ்க்கையின் கீற்றை மாற்றி முப்பட்டகத்தை வியாபாரம் காட்டும் கோணத்தில் வைக்கிறார். இன்று வியாபாரம் ஆகும் ஒன்று நாளை காலாவதியாகலாம். நிறைய வியாபார எழுத்தாளர்களுக்கு அதுதான் நேர்கிறது. சித்தார்த்தனின் படைப்பு கலைத்தன்மையை வேண்டுகிறது. ஒரு பிக்காசோவின் ஓவியத்திற்கோ, வான்காவின் ஓவியத்திற்கோ இருக்கும் வியாபார மதிப்பு எக்காலத்திலும் இருக்கக் கூடியன. அவை காலாவதியாகாதவை. அதன் கலை அமைதி அப்படிப்பட்டது. அப்படிப்பட்ட கலை அமைதியை நோக்கி இத்தொகுப்பில் சித்தார்த்தன் பிரிகை அடைந்திருக்கிறார்.

அவரது அடுத்தத் தொகுப்பு இன்னும் ஒரு சில ஆண்டுகளில் வெளியாகலாம். அப்போது அவர் நிறப்பிரிகையைத் தாண்டி வேறு ஒரு பிரபஞ்ச வெளிக்குள் நுழைந்திருக்கலாம். அவரது ஓயாத படைப்பு இலக்கு என்பது அதுதான். அதைக் காண உங்களைப் போலக் காத்திருக்கிறேன்.

சித்தார்த்தனின் முந்தைய தொகுப்புகள் குறித்த அறிமுகங்களை வாசிக்க விரும்பினால், கீழே உள்ள இணைப்புகளைச் சொடுக்கிப் பாருங்கள்.

ஒரு நாளின் வெற்றி

 https://vikatabharathi.blogspot.com/2021/07/blog-post_24.html

வாழ்க்கை நதியின் திணர்த்த வண்டல்கள்

 https://vikatabharathi.blogspot.com/2021/07/blog-post_26.html

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...