14 Mar 2024

வாசிப்பின் சுய இன்பம்

வாசிப்பின் சுய இன்பம்

ஒரு வரிசை முறையில் வாசிக்க வேண்டும் என்ற திட்டம் எப்போதும் உண்டு. அப்படி வாசிக்க முடிந்ததில்லை. திட்டங்கள் தவிடு பொடியாகி விடும். முறை மாறி வாசிக்கவே பிரியப்படுகிறது மனம்.

இரண்டு ஆண்டுகள் வரை அலமாரியில் சயனித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள் சில நாட்களில் வேசமான வாசிப்புக்கு வந்து பரபரப்பாகி விடும். ஒவ்வொரு நாளும் பத்து பக்கங்கள் வாசித்தால் ஒரு மாதத்தில் முடிந்து விடும் எனும்படியான புத்தகங்கள் ஆச்சரியப்படும்படி ஒரு நாளில் முடிந்து விடும. மனதிற்கு அப்படி ஓர் உத்வேகம் அபூர்வமாக சித்திக்கும் போதுதான் வாசிப்பு சுகப்படும்.

தினம் பத்து பக்கம் என்று எந்திரம் போல் எதையும் உள்வாங்கிக் கொள்ள முடியாமல் வாசிக்கும் வாசிப்பை விட ஆழ்ந்த உள்வாங்கலோடு ஒரே மூச்சில் வாசிக்கும் அந்த வாசிப்புத்தான் பிடித்திருக்கிறது. இந்த வாசிப்பு முறைக்காக ஆசைப்பட்டு சில நாட்கள் எதையும் படிக்காமல் உட்கார்ந்திருக்கிறேன். எப்போதாவது வாய்க்கும் அபூர்வ வாசிப்பு மனநிலை எப்போதும் வாய்த்து விடுமா என்ன?

வாசிப்பிற்கான மனநிலைக்காகவே வேறு வேலைகளை வைத்துக் கொள்வதில்லை. தகப்பனாருக்கு நான் விவசாயத்தைக் கூட எட்டிப் பார்ப்பதில்லை என்ற வருத்தமுண்டு. பிரதிவினையாக, எனக்குப் பின்னால் இவன் விவசாயத்தைப் பார்க்கப் போவதில்லை என்று வெளிப்படையாகவே சொல்லி விட்டார்.

வீட்டில் அப்படி இப்படி என்று சில வேலைகளைப் பார்க்காவிட்டால் எப்படி என்று தாயாரும் தாரமும் கூட அங்காலாய்த்திருக்கிறார்கள். எதற்கும் அசைந்து கொடுக்காமல் கல்லு பிள்ளையார் போல் உட்கார்ந்து வாசிப்புக்கான மனநிலை வாய்த்ததும் அந்தச் சுழலில் சிக்கி அப்படிச் சுழன்றுப் போய் விடுவதுண்டு.

ஒரு முறை ஒரு சிறு பிரச்சனையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது உங்களுக்கென்ன இங்கே வேலை? போய் படிக்கிற வேலையைப் பாருங்கள் என்று மகள் திட்டியிருக்கிறாள். அது, இவனுக்குப் படிப்பதைத் தவிர வேறு எதைச் செய்யத் தெரியும் என்கிற கணிப்பாக இருக்கலாம்.

ஒன்று படித்துக் கொண்டிருக்கிறேன். இல்லையென்றால் படிக்காமல் சோம்பல் பிடித்தவன் போல் உட்கார்ந்திருக்கிறேன். இது சுலபம் போலத் தோன்றும். இதற்கு மிகுந்த பொறுமை வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் ரோஷம் வரும்படி நான்கு வார்த்தைகளை விடுவார்கள். கண்டு கொள்ளாதது போல இருக்க வேண்டும். நண்பர்கள், உறவினர்கள் குறைபட்டுக் குமுறி விட்டுப் போய் விடுவார்கள். எதுவும் நடக்காதது போல, எனக்கென்ன தெரியும் என்பது போல இருக்கத் தெரிந்திருக்க வேண்டும். ரோஷங்கெட்டவரைப் போல, மானங்கெட்டவரைப் போல மனதுக்கு இருக்க தெரியுமானால் இந்த நிலைமை சுலபம். இல்லாவிட்டால் கடினம்.

இதற்கு இப்படி நிறையப் பின்புலங்கள் சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் நிறைந்திருக்கின்றன. ஒரு சில நண்பர்கள் முழு உண்மையும் தெரியாமல் நான் அதிகம் படித்துக் கொண்டிருப்பதாக வியந்திருக்கிறார்கள். அவர்களின் கற்பனைப்படி நான் நிறைய நேரம் படிக்கிறேன். ஆனால் நான் நிறைய நேரம் படிக்காமல் அமர்ந்திருக்கிறேன். அதுவும் சோம்பேறித்தனமாக. என்னவோ எதுவும் தோன்றாமல் மணிக்கணக்கில் அமர்ந்திருக்கிறேன்.

அப்போது சிந்தனைகள் எங்கே போகும்? எப்படி இப்படி இருக்கத் தோன்றுகிறது என்று நினைக்கத் தோன்றும்? நானே பிறிதொரு பொழுதில் நினைத்தாலும் அப்படி உட்காரத் தோன்றாது. அப்படி உட்கார்ந்து விடவும் முடியாது. எல்லாவற்றிலும் ‘போலச் செய்ததை’ எப்படியோ செய்து விடலாம். ஆனால் இந்தச் சோம்பேறித்தனம் – சிந்தனையற்றுப் போகும் நிலையை அப்படிச் செய்து விட முடியாது. அதுவாக வாய்த்தால் உண்டு.

சிந்திக்க வேண்டாம் என்று நினைத்தால் அப்போதுதான் ஏகப்பட்ட சிந்தனைகள் தோன்றும். ஒன்றை நிறுத்தலாம் என்று இன்னொரு விதமாகச் சிந்தித்து அந்த இன்னொரு விதத்தை நிறுத்த வேறொரு விதமாகச் சிந்தித்து இடியாப்ப சிந்தனைச் சிக்கலில் போய் கடைசியில் எல்லாம் முடியும்.

படிக்கின்ற மனநிலை வாய்த்து விடும் நேரங்களில் அத்தனை வேலைகளும் அப்படியே நின்று விடும். போட்டது போட்டபடி கிடக்கும். செய்கிறேன் என்று வாக்கு கொடுத்து விட்ட வேலைகள் நின்று போய் வாங்கிக் கட்டிக் கொள்ளவும் நேரிடும். நாளைக் கட்டாயம் வருகிறேன் என்ற சந்திப்புகள் நடைபெறாமல் போய் விடும். இதனால் பெரிய வருத்தங்கள் நேரிட்ட நிகழ்வுகள் ஏராளம்.

சொல்வதொன்றாகவும் செய்வதொன்றாகவும் இருப்பதாக விமர்சிக்கப்பட்டிருக்கிறேன். எல்லாம் படிக்கின்ற மனநிலை வாய்த்ததால் ஏற்படுவதுதான். குடிகாரனுக்குக் குடிக்கின்ற மனநிலை வந்து விட்டால் அவனை வேறு எது பண்ணியும் சரி பண்ண முடியாது என்பார்களே, அப்படித்தான் ஆகி விடுகிறது என்னுடைய நிலையும் அப்போதும். இதனால் என் மீது உருவாக்கப்பட்ட தவறான பிம்பங்கள் எக்கசக்கம் இருக்கின்றன. மனம் போன போக்கில் போய்க் கொண்டிருப்பதாக என் மீது குற்றச்சாட்டுகளும் உண்டு.

படிப்பதற்கான மனநிலையைத் தவிர வேறு எந்த மனநிலையும் முக்கியமில்லை என்ற மனநிலையே முக்கியமாக இருக்கிறது. இதனால் சில முக்கியமான காரியங்களையும் முக்கிக் கொண்டுதான் செய்து முடிக்க வேண்டியிருக்கிறது. சில பல காரியங்கள் செய்து முடிக்க முடியாமலும் போய் விடுகிறது. காரியங்களைத் தள்ளிப் போடும் மனநிலை ஏற்பட்டு விடுகிறது.

அது ஒரு காந்தம் போல் என்னை ஈர்த்து விடும் போது இரும்பாகி விட்ட என்னால் என்ன செய்ய முடியும் என்று மற்ற விசயங்களில் மரக்கட்டையாகி விடுவதுண்டு.

வாசிப்பும் வாசிப்பின் பின் செயலற்ற சிந்தனை நிலையும் பிடித்துப் போய் அதைத் தவிர வாழ்க்கையில் வேறு எதுவும் பெரிதாகத் தோன்றுவதில்லை. வேறு எதை இதை விடப் பெரிதாக நினைப்பது?

இவ்வளவு ரூபாய் கொடுத்து ஏன் புத்தகங்களை வாங்குகிறாய் என்கிறார்கள். இவ்வளவையும் வாசித்து விடுவாயா என்கிறார்கள். ரூபாய் பெரிய விசயமில்லை. டாஸ்மாக் சரக்குகளுக்கும் ரூபாய் மதிப்பு இருக்கிறது. அதை எந்தக் குடிப்பவர் பெரிது படுத்தியிருக்கிறார்? பொதுவாக எந்தச் சரக்குக்கும் அந்த மதிப்பு உண்டு. மனம் விரும்பிய சரக்கிற்கு என்ன விலையுண்டு?

வாசிக்காத புத்தகங்கள் அநேகம் இருக்கின்றனதான். வாசிக்க வேண்டும் என்று வாங்கி வாசிக்காத புத்தகங்கள்தான் அவை. அது இருந்து கொண்டேதான் இருக்கும். ஏதோ ஒரு நாளில் அது வாசிக்கப்படும் போது அது தரும் மகிழ்வையும் மோன நிலையையும் எனக்கு வாழ்க்கையில் வேறு எதுவும் தந்ததில்லை. அதற்காகவே இப்படியே இருக்கத்  தோன்றுகிறது. அப்படியே இருந்து கொண்டும் இருக்கிறது மனது.

*****

1 comment:

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...