26 Jul 2021

சித்தார்த்தனின் ‘வாழ்க்கை நதியின் திணர்த்த வண்டல்கள்’ – ஓர் எளிய நூலறிமுகம்

சித்தார்த்தனின் ‘வாழ்க்கை நதியின் திணர்த்த வண்டல்கள்’ – ஓர் எளிய நூலறிமுகம்

            ‘வாழ்க்கை நதியின் திணர்த்த வண்டல்கள்’ செ. சித்தார்த்தனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு என்றாலும், பதிப்பகத்தின் வழியாக வரும் முதல் சிறுகதைத் தொகுப்பு எனலாம்.

இத்தொகுப்பிற்கும் சித்தார்த்தனின் நெருங்கிய நண்பரும் அவரது எழுத்தின் நேசகரும் ஆன அ. சக்திகுமார் ஆய்வுரை போன்ற அணிந்துரையை வழங்கியிருக்கிறார். தம் ஆய்வுரையின் நிறைவில் ‘மக்கள் செல்வன்’ என்று திரை நடிகர் விஜய் சேதுபதிக்குப் பட்டம் சூட்டப்பட்டிருப்பதை ஒத்த வகையில் சித்தார்த்தனுக்கு ‘சிறுகதைச் செல்வர்’ என்ற பட்டத்தையும் சூட்டியிருக்கிறார்.

விஜய் சேதுபதியின் படத்தில் இருக்கும் பார்ப்போர் விரும்பும் எதார்த்தம் எள்ளலையொத்த அம்சம் சித்தார்த்தனின் எழுத்தில் இத்தொகுப்பில் இருக்கிறது.

சக்திகுமாரிடம் பேசிய போது அவர் சொன்ன சங்கதி புத்தகப் பதிப்புகளின் மீதான சித்தார்த்தனின் எள்ளலைக் காட்டுவதாக அமைந்தது. தனது முதல் தொகுப்பான ‘ஒரு நாளின் வெற்றி’ சிறுகதைத் தொகுப்பை வெறும் இருபது பிரதிகள் மட்டும் அச்சிட்டிருக்கிறார். அதில் ஒரு பிரதி என்னிடமும் மற்றொரு பிரதி சக்திகுமாரிடம் இருப்பது போக மீதமிருக்கும் பதினெட்டுப் பிரதிகள் யார் யாரிடம் இருக்கும் என்று யோசித்தால் அது ஒரு நாவலுக்குரிய களமாக விரியும் எனத் தோன்றியது எனக்கு. மீதமிருக்கும் பதினெட்டுப் பிரதிகளில் ஒரு பிரதியெனும் சித்தார்த்தனிடம் இருக்க வாய்ப்பில்லை. அவர் ஒரு முறை சென்னைப் பெருவெள்ளத்தில் தான் சேர்த்து வைத்திருந்த அத்தனை புத்தகங்களையும் இழந்து விட்டதாகச் சொன்னதை வைத்து இதை உறுதியாகச் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்.

இருபது பிரதிகளுக்கான சூட்சும ரகசியம் ஏனென்று கேட்ட போது அது காப்பிரைட் தொடர்பாக எழுந்த ஐயப்பாட்டினால் உருவானது என்று சக்திகுமார் விளக்கமளித்து அதற்கான அவசியமெல்லாம் தமிழ் இலக்கிய உலகில் கொஞ்சம் கூட தேவையில்லை என்ற உண்மையையும் போட்டு உடைத்தார். இதிலும் சிறுகதைக்கான ஒரு முடிச்சு இருக்கத்தானே செய்கிறது. இம்முடிச்சைக் கட்டவிழ்த்த விதமாகச் சித்தார்த்தனின் இந்த இரண்டாவது தொகுப்பு வெளிவந்திருக்கிறது எனலாம்.

என் கையில் இருக்கும் சித்தார்த்தனின் ‘வாழ்க்கை நதியின் திணர்த்த வண்டல்கள்’ தொகுப்பு அவரே கையொப்பம் இட்டு அன்புடன் என்னிடம் தந்தது. இத்தொகுப்பு அவரது அன்பான கரங்களில் இருந்து என் கைக்கு வந்து இரண்டு வருடங்களைக் கடக்க போகிறது. இந்த இரண்டு வருடங்களில் நானும் சித்தார்த்ததும் அவ்வபோது அளவுக்கதிமாகவே அளாவளாவியிருக்கிறோம். பேசிப் பேசிக் கைபேசியை சூடேற்றியிருக்கிறோம் என்றாலும் நான் இத்தொகுப்பின் கதைகள் குறித்துப் பேசியதில்லை. சித்தார்த்தும் அது குறித்து என்னிடம் கேட்டதில்லை. யார் யாருடைய சிறுகதைகளையும் நாவல்களையும் அக்குவேறு ஆணி வேராக அலசி ஆராய்ந்திருக்கிறோம். அதுவாகப் பேச்சில் வந்தால் பேசுவோம். இல்லாவிட்டால் பேச்சின் போக்கில் நீந்திக் கடந்துக் கொண்டிருப்போம். ஒருநாள் இது குறித்து எங்களையும் அறியாமல் பேசுவோம் என்பது எனக்கும் தெரியும், சித்தார்த்துக்கும் தெரியும். அந்த நாள் எந்த நாள் என்பதுதான் எங்கள் இருவருக்கும் தெரியாதது. நான் இத்தொகுப்புகள் குறித்து சித்தார்த்திடம் எதுவும் பேசாமல் முதல் தொகுப்பைப் பற்றி முந்தின நாள் எழுதியிருக்கிறேன். இரண்டாவது தொகுப்பு குறித்து இன்று எழுதுகிறேன்.

முதல் தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் ஏழினை அப்படியே வழிமொழிந்த பின் இரண்டாவது தொகுப்பிற்கான எட்டுப் புதிய சிறுகதைகளைத் இத்தொகுப்பில் சேர்த்திருக்கிறார் சித்தார்த்தன். ஆக மொத்தம் பதினைந்து சிறுகதைகள் நிரம்பியிருக்கின்றன இத்தொகுப்பில். இத்தொகுப்பின் முதல் ஏழு சிறுகதைகள் முதல் தொகுப்பில் இடம்பெற்றிருப்பது என்பதாலும் அம்முதல் தொகுப்பு குறித்த எளிய நூலறிமுகத்தைப் பார்த்திருக்கிறோம் என்பதாலும் தொகுப்பின் பின்னெட்டுச் சிறுகதைகள் குறித்த பார்வையைப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இரண்டாம் தொகுப்பின் பின்னெட்டுச் சிறுகதைகளில் ஒருவித லாவகம் கூடியிருக்கிறது சித்தார்த்தனுக்கு. அவருள் தேங்கியிருக்கும் சம்பவங்களும், விவரங்களும் அத்துடனான அவரது பலதரப்பட்ட வாசிப்பும் இக்கதைகளின் லாவகத்திற்குக் காரணமாக அமைகிறது எனலாம்.

‘தொழில்நேக்கு’ என்ற சிறுகதையில் அவர் காட்டும் சங்கீத விவரணைகள் அலாதியானது. அவரவர் தொழிலில் ஒரு நேக்கைக் கைக்கொள்ளாமல் இக்காலத்தில் தொழில் செய்ய முடியாது என்ற பேருண்மையை எதார்த்தமாகப் போட்டு உடைக்கும் அச்சிறுகதையின் போக்கில் ஒருவர் கும்பகோணத்திலிருந்து சென்னை வரைக்கும் எழுத்தின் வழியே பேருந்தில் பயணித்து விட முடியும்.

பாரதி பாடச் சொல்லி பாரதிதாசன் பாடிய பாடலின் முதல் வரி “எங்கெங்கு காணினும் சக்தியடா” எனத் தொடங்கும். பாரதிதாசனுக்குப் பாரதி வைத்த பரீட்சையின் வரியின் வழியாகக் கூட்டுக் குடும்பத்தைத் தொலைத்து இருவரும் வேலைக்குச் செல்லும் இன்றைய குடும்ப வாழ்வின் நசிவை ‘எங்கெங்கு காணினும்’ சிறுகதையில் காட்டுகிறார். கிராமங்களில் ஒரு குழந்தை பிறப்பு கொண்டாடப்படுவதும், குழந்தையின் சின்ன சின்ன அசைவுகளும் பேரதிசமாய்ப் பேசப்படுவதும், குழந்தையின் சுகவீனங்கள் அக்கறையாக விசாரிக்கப்பட்டு அதற்கான ஆற்றுப்படுத்தல்கள் வழங்குபடுவதான சூழலைக் கருத்தில் கொண்டு பார்க்கும் சித்தார்த்தனுக்கு அதன் வழியாக வெளிப்படும் ஆற்றாமையைத் தணித்துக் கொள்வதற்கான எழுத்து வடிகாலாக அச்சிறுகதை தோற்றம் தருவதைக் காணலாம்.

மாப்பிள்ளை பார்ப்பது, பெண் பார்ப்பது என்று கிராமங்களில் ஜாதகங்களை வைத்துக் கொண்டு நடக்கும் ஜகதல பிரதாபங்களைப் பார்க்கும் போது இருக்கும் இரு கண்களில் ஒரு கண்ணில் எரிச்சலும் மறுகண்ணில் பரிதாபமும் வழிந்தோடும். பெண் ஜாதகத்திற்கேற்ப ஆண் ஜாதகத்தை மாற்றி எழுதுவது, ஆண் ஜாதகத்திற்கேற்ப பெண் ஜாதகங்களை மாத்தி எழுதுவது போன்ற தில்லாலங்கடி உள்ளடி வேலைகள் எல்லாம் மௌனமாக அவற்றைக் கவனித்து வரும் நாங்கள் அறிந்தவைகள்தான். அந்த அனுபவம் சித்தார்த்தனுக்கும் அதிகம். அந்த பற்பல பல தினுசான அனுபவத்தின் ஊடாகச் சித்தார்த்தன் ‘அர்த்த சிரிப்பு’ என்ற கதையைப் படைத்திருக்கிறார். அந்தச் சிரிப்பின் பின்னால் ஒளிந்திருக்கும் மனித மனங்களின் ஆற்றாமை ஊடிய ஆசையின் குரூரத்தை வாசிக்கையில் ஒரு நேரடி அனுபவம் கண் முன் விரிகிறது. யாருக்காகவும் யாரும் பரிதாபப்படும்படி மனிதன் நேர்மையாக நடந்து கொள்வதில்லை என்ற உண்மையைச் சொல்லாமல் சொல்லி அதன் பின் என்ன நடந்திருக்கும் என்பதை வாசகரின் முடிவுக்கு விட்டு அக்கதையை முடிக்கிறார்.

தன் பார்வையில் தான் பார்த்த கோடங்கியை முகநூல் பித்தராக, சூதாட்ட விளையாட்டின் பலியாடாகச் சித்தார்த்தன் படைக்கும் சிறுகதை ‘கோடாங்கி’. பேலியோ டயட்டையும் புளுவேல் விளையாட்டையும் சோமாலியோ டயட் எனவும் புளுசூலம் எனவும் மாற்றி அவர் சொல்லி அதில் அகப்படும் கோடாங்கி ஒரு குறியீட்டின் வடிவம் என்பதை அவ்வபோது அடிபடும் உயிர் பறிக்கும் ஊடகம் குறித்த செய்திகளின் வீரியத்திலிருந்து அறிய முடியும். அக்குறியீட்டிற்குக் கோடங்கி நன்றாகப் பொருந்திப் போகிறார். பெற்றோர்களை மாடனாகவும், அவர்களைப் பூஜிக்க வேண்டிய குழந்தைகளைக் கோடாங்கியாகவும் கொண்டு ஒரு மாற்றுப் பார்வை பார்த்தால் சித்தார்த்தன் ‘கோடங்கி’ சிறுகதையின் மூலம் உணர்த்த வரும் உக்கிரமும் ஊடகங்களில் நிகழும் அக்கிரமமும் புரிய வரும்.

மதுவாங்கட்டைகளிலும், குட்டிச்சுவர்களின் வரியாகவும் வழிந்தோடும் இருபால் ஈர்ப்பின் உணர்வோடைகளைத் சாபங்கள் குறித்த இந்திய தொன்மை கதைகளின் வழியாக மீட்டுருவாக்கம் செய்து பார்க்கும் கதை ‘அமிர்தவர்ஷினியின் சாபம்’ என்ற சிறுகதை. தன் முதல் சிறுகதைத் தொகுப்பில் நாய் பிழைப்பை மனித பிழைப்பாக உருமாற்றிப் போட்டிருக்கும் சித்தார்த்தன் இச்சிறுகதையில் மனிதர்களைப் பூனைகளாக உருமாற்றிப் போட்டுப் பார்க்கிறார். அந்த உருமாற்றம் கனகச்சிதமாக மனிதர்களுக்குப் பொருந்துவதுதான் வியப்பான ஒன்று. அது சித்தார்த்தனின் எழுத்து ஜாலமாகவும் இருக்கலாம்.

இந்திய அதிகார வர்க்கத்தின் மாற்ற முடியாம வழக்கத்தைப் பேசும் சிறுகதை ‘இராஜவேலுவின் ஒரு நாள் அலுவல்’. காலங்கள் மாறினாலும் அன்றைய ராஜா காலத்திலிருந்து இன்றைய ராஜவேலு காலம்வரை தொடரும் அவலத்தின் சாட்சியம் இச்சிறுகதை.

அடிபட்டவன் உணரும் வலியையும் வேதனையையும் வேடிக்கைப் பார்ப்பவன் உணர முடியாது. அதை உணர்வதற்கும் ஒரு சாத்தியம் இருக்கவே செய்கிறது என்றால் அது எழுத்து எனலாம். அச்சாத்தியத்தை ‘நமஸ்தே ஸாப்’ சிறுகதை மூலமாகச் சித்தார்த்தன் வழங்குகிறார். இழப்பின் வலி அறிந்தவர்கள் மனித மனத்தின் மகோன்னதத்தை அறிகிறார்கள் என்பது அக்கதையின் சாரம். அத்துடன் இழந்தோருக்கு நாம் என்ன கொடுத்து விட்டோம், இன்னும் இழப்புகளைத் தருவதைத் தவிர என்ற வினாவோடு தொடரும் அச்சிறுகதை இழப்பின் வலியைச் சுமப்போரை நோக்கி ஆதரவுப் பார்வையை நீட்ட செய்கிறது.

மானசீமாக மனதோடு மொழியும் ஒரு கடிதத்தின் வழியாக தலைமுறை இடைவெளியையும் அதன் மறைபொருளாக ஆகி விட்ட பிரியங்களையும் பேச முயற்சிக்கிறார் ‘ஒரு வழிப்பாதை’ எனும் சிறுகதையில் சித்தார்த்தன்.

ஒவ்வொரு சிறுகதையிலும் சற்றே அளவுக்கதிமான கவித்துவமான உறுப்புகளையும் எள்ளலையும் கையாள்வதைத் தனக்குரிய பாணியாகக் கொண்டிருக்கிறார் சித்தார்த்தன். இக்கவித்துவ உறுப்புகளும் எள்ளல்களும் சில சிறுகதைகளில் கதைப்போக்கைத் தீர்மானிக்கின்றன. இவை ஏதுமற்ற தன்மையிலும் ஒரு சிறுகதை தனக்கான போக்கைத் தீர்மானித்துக் கொள்ளும் என்பதை அடுத்தடுத்த சித்தார்த்தனின் சிறுகதைத் தொகுப்புகளில் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

சென்னை மாநகரில் இருந்தாலும் இந்த வண்டல் பகுதியின் எழுத்தாளர் சித்தார்த்தன் என்ற வகையில் ‘வண்டல்’ இலக்கியத்தின் நடுத்தர வர்க்க குடிகளின் முக்கிய பதிவாகிறது அவரது சிறுகதைகள்.

            ‘வாழ்க்கை நதியின் திணர்த்த வண்டல்கள்’ என்ற சொல்லாடலில் ‘திணர்த்த’ என்ற சொல்லின் பொருளாக ‘செழித்த’ என்ற பொருளை வழங்கிய விதத்திலும் என்னிடம் இருக்கும் அகராதிகளில் அச்சொல்லைக் காண கிடைக்காத வகையிலும் நாலாயிரம் திவ்விய பிரபந்தத்தில் உள்ள புதியதொரு சொல்லைக் கண்டடைந்ததில் சித்தார்த்தனுக்கு நன்றியுடையன் ஆகிறேன்.

நூல் குறிப்பு

நூலாசிரியர்

செ. சித்தார்த்தன்

chitharthans@yahoo.com

நூல் பெயர்

வாழ்க்கை நதியின் திணர்த்த வண்டல்கள்

பதிப்பும் ஆண்டும்

முதல் பதிப்பு, 2019

பக்கங்கள்

120

விலை

ரூ. 110/-

நூல் வெளியீடு

வானவில் புத்தகாலயம்,

10/2 (8/2) போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை,

தி. நகர், சென்னை – 600 017

தொடர்பு எண் : 72000 50073

 

No comments:

Post a Comment

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு…

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு… எந்தத் தொந்தரவும் வேண்டாம் எந்தப் பிரச்சனையும் வேண்டாம் எந்தச் சிக்கலும் வேண்டாம் எந்த இம்ச...