சித்தார்த்தனின் ‘ஒரு நாளின் வெற்றி’ – ஓர் எளிய நூலறிமுகம்
தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத ஆளுமை சிவாஜி கணேசன்
‘சக்சஸ்’ என்ற வசனத்தோடு திரை வாழ்வைத் தொடங்கியது போல சித்தார்த்தன் ‘ஒரு நாளின் வெற்றி’
என்ற தலைப்போடு தனது முதல் சிறுகதைத் தொகுப்பைத் தொடங்கியிருக்கிறார். சிவாஜி கணேசனின்
மிகையான நடிப்பைப் போன்ற மிகையான எள்ளல் நிறைந்த சிறுகதைகளைத் தன்னுடைய பார்வையின்
வழியாகப் பதிவு செய்திருக்கிறார் சித்தார்த்தன்.
மிக நேர்மையாக ‘ஒரு
கடைக்கோடி மனிதன் உணர்ந்த அவனைப் பாதித்த, அவனுக்குப் புரியாத அல்லது புரிந்து விட்டதாய்
நினைத்துக் கொண்ட விஷயங்களின் கூட்டுப் பகிர்தல்’ என்று முன்னுரைப்பதில் தன் தொகுப்பை
வெளியிடுவதற்கான காரணத்தைப் பதிவு செய்கிறார்.
சித்தார்த்தனின் நெருங்கிய நண்பரும் அவரது எழுத்தின் ரசனையாளருமான
அ. சக்திகுமார் நூலுக்கு ஆய்வுரை போன்ற அணிந்துரையை வழங்கியிருக்கிறார்.
சித்தார்த்தன் நானும் நண்பரும் சகோதரரும் போன்ற உறவு நிலையில்
கட்டுண்டுக் கிடப்பவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரே பள்ளியில் அவர் முந்தியும் அவரைத்
தொடர்ந்து பிந்தியும் நானும் படித்திருக்கிறோம். ஆன்மீகம் ஊடாடும் கிராமத்தின் முக்கிய
குடும்பத்தின் பிள்ளைகளில் ஒருவராய் வளர்ந்த போதிலும் எளியோரின் கஷ்ட வாழ்வைக் கரிசனக்கண்
கொண்டு பார்க்கும் பார்வையோடு வளர்ந்தவர் அவர். மேம்பட்ட நடுத்தரக் குடும்பத்தின் பின்னணியில்
கிராமத்திலிருந்து தனது பொறியியல் படிப்பின் நிமித்தம் சென்னை மாநகர வாழ்வை வரித்துக்
கொண்டவர் சித்தார்த்தன்.
நூலறிமுகத்தில் இது எதற்கு
என்றால் அவரது சிறுகதைத் தொகுப்பின் பார்வையைப் புரிந்துகொள்வதற்காக எனலாம். அந்தப்
பார்வையின் பின்புலமாகத் தன்னுடைய வாசிப்பனுவத்தில் தான் கண்டடைந்த புரிதல்களோடு அவர்
தனது https://chitharthans.wordpress.com என்ற வலைப்பூவில் தொடர்ந்து
எழுதி வந்ததைத் தனது முதல் தொகுப்பாக ‘ஒரு நாளின் வெற்றி’ எனும் சிறுகதைத் தொகுப்பாகக்
கொணர்ந்திருக்கிறார்.
இத்தொகுப்பின் சிறுகதைகளில்
வெளிப்பட்டிருக்கும் பார்வையைத் தாண்டியும் அவர் கூரிய நோக்குடையவர் என்பதை நான் அலைபேசியில்
பல மணி நேரங்களில் அவரோடு பேசித் திளைத்ததில் உணர்ந்திருக்கிறேன். எழுத்து என்பது தீராத்
தவம் எனக் கொண்டால் அதற்கான வரத்தை எழுத்தில் இறக்கி வைக்கும் போது தவத்திற்குக் கிடைத்த
ஏற்புடைய வரமாக அமைவதற்குத் தவத்தைத் தாண்டிய வேறொன்றும் தேவை என்பதை அவர் உணர்ந்தும்
இருக்கிறார் என்பதை நான் அறிவேன். அவ்வகையில் தனது கூரிய பார்வையைப் பதிவதற்கு மிகவும்
மெனக்கெட்டிருக்கிறார்.
கிராமிய சூழலிலிருந்து நகரத்தை
உள்வாங்கும் இளைஞனின் கூரிய பார்வையை அவரது அநேக சிறுகதைகள் காட்டுகின்றன. நடுத்தர
வர்க்கத்திலிருந்து மேலெழும்ப எத்தனிக்கும் போராட்டத்தில் உண்டாகும் ஆற்றாமைகளையும்
இயலாமைகளையும் பெரும்பாலான சிறுகதைகள் மையமாய்க் கொண்டு சுழல்கின்றன. காவிரி கழிமுகமான
டெல்டாவின் மருத நிலத்தில் அந்நிலத்திற்கு உரிய பரத்தமையைப் பேசும் தன்மையோடு ‘வெற்றுச்
சிரிப்பு’ என்ற சிறுகதையின் போக்கு அமைவதை இத்தொகுப்பில் காண முடிகிறது. பொருளாதார
நெருக்கடியும் அந்நெருக்கடிக்குள் தனது இருப்பைத் தீர்மானித்துக் கொள்ள போராடும் மனிதர்களின்
வாழ்வின் பார்வையில் சில சிறுகதைகளை நகர்த்திக் கொண்டு செல்கிறார் சித்தார்த்தன். அவரது
இருப்பும் அவரது பின்புலமும் அது சார்ந்த அவரது பார்வையையும் அவர் உள்வாங்கிக் கொண்ட
கருத்துகளையும் பிரதிபலிப்பதாக அமைகிறது இத்தொகுப்பின் சிறுகதைகள் எனலாம்.
இயல்பாகச் சம்பவக் கோர்வையோடு
நகர்ந்து செல்லும் சிறுகதைகளோடு எள்ளல் சுவையோடு சம்பவத்தை இழுத்துக் கொண்டு நகரும்
சிறுகதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. அணிந்துரையில் அ. சக்திகுமார் மதிப்பிட்டுள்ளதைப்
போல புதுமைப்பித்தனின் தாக்கமாகவும் அது இருக்கலாம். ஒரு சில சிறுகதைகளில் இத்தகைய
எள்ளல் தன்மையை அளவுக்கதிகமாகவும் சித்தார்த்தன் கையாள்கிறார். மனதில் புனைந்து கொண்ட
கதைக்கேற்ப விவரணைகளை ஹாஸ்யமாகவும் சுவாரசியமாகவும் விளக்கி விளக்கிச் சொல்லும் முறைகளால்
சில சிறுகதைகளை அமைக்கிறார்.
இத்தொகுப்பில் 16 சிறுகதைகளைத்
தொகுத்திருக்கிறார். ‘பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!’ எனும் கிராமிய மண் சார்ந்த
வாழ்த்துகளின் குறியீடாகவும் 16 சிறுகதைகளின் தொகுப்பு இருக்கக் கூடும்.
தொகுப்பின் முதல் சிறுகதையும்
நூலின் தலைப்புமான ‘ஒரு நாளின் வெற்றி’ பாராட்டுக்குப் பின் ஒளிந்திருக்கும் நயவஞ்சக
சூழ்ச்சியைக் காட்டும் ஒரு கதை எனினும் கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கும் கிராமிய
அபிமானியின் பார்வை அது.
மறுஜென்மம் எனும் அடுத்த
சிறுகதையிலும் கிராம அனுதாபத்தின் ஒரு பார்வை இருக்கிறது. மருத்துவரைப் பார்த்து ஊசி
போட்டுக் கொள்வதைச் சாகும் வரை தவிர்த்து வாழ்ந்த கிராமத்துப் பெரியவர்களைப் பார்த்த
வகையில் அப்படிப்பட்டதான ஒரு பார்வையை மடைமாற்றிப் பதிவு செய்கிறார் சித்தார்த்தன்
எனலாம். ‘அரசு ஆஸ்பத்திரியும் ஆர்கானிக் மாடும்’ என்ற சிறுகதையில் அவர் கண்டடையும்
முடிவும் அத்தகைய மடைமாற்ற பார்வை எனலாம்.
‘மார்க்கெட்டிங் மஹாந்திலும்’,
‘மூலிகைச் சித்தரின் கஷாயமும்… காசாயமும்’ எனும் சிறுகதைகளில் வேதாந்த சித்தாந்த வியாபாரிகளைத்
தன் பார்வையில் விவரிக்க முற்பட்டு தனக்கான வேதாந்தத்தையும் சித்தாந்தத்தையும் ‘வேதாளம்
சொன்ன வேதாந்தம்’ என்ற சிறுகதையில் தேட முயல்கிறார்.
‘இறக்கி வைத்த சிலுவை’ என்ற
சிறுகதையைப் படித்த போது எனக்கு புதுமைப்பித்தனின் ‘மனித எந்திரம்’ என்ற சிறுகதையை
மறுவாசிப்பு செய்வதைப் போலிருந்தது. இரண்டு சிறுகதைகளும் ஒரு சில பார்வைகளில் ஒன்றுபடுவதைப்
போல வேறு சில கருத்தமைதிகளில் வேறுபடவும் செய்கின்றன.
‘பணயக்குதிரைகள்’ கட்டுரை
வடிவமாகி விட்ட ஒரு சிறுகதைச் சோதனை முயற்சி எனலாம். நிகழ்கால கல்வியின் மீதான தன்
விமர்சனப் பார்வையை முன் வைக்க அச்சிறுகதையைத் தோதாகக் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்
சித்தார்த்தன்.
கிராமிய மனிதர்களுக்கு உரிய
மனப்பாங்கை ‘பெற்ற கடன்’, ‘நதியின் பிழையன்று’, ‘ஞானக்குடை’ ஆகிய சிறுகதைகளில் பதிவு
செய்கிறார். ‘நதியின் பிழையன்று’ சிறுகதையில் குடியானவர்களின் பொருளாதாரத்தைப் பேசுவதோடு
விளிம்பு நிலை மக்களின் பொருளாதாரத்தைப் பேசாமல் தன்னுடைய புரிதல் அளவோடு நின்று கொள்வதான
ஒரு தோற்றத்தை அனுமானிக்க முடியலாம்.
‘மானசிக சல்லாபம்’, ‘மனுஷ
பிழைப்பு’ ஆகிய சிறுகதைகள் சித்தார்த்தன் கருதும் உணர்வின் உருவகமாக விரியும் சிறுகதைகளாகத்
தோற்றம் தருகின்றன. ‘அவனுக்காக ஒருவன்’ சாதி பேதம், மேட்டிமை பேதத்தைத் தொடர்ந்து கிராமங்களில்
தலை தூக்கும் அரசியல் பேதத்தைப் பதிவு செய்யும் சிறுகதையாக அமைகிறது.
‘மழை சிகிச்சை’ எனும் சிறுகதை நகரத்தில் இருந்து பார்க்கும்
ஒரு கிராமிய பார்வை எனலாம். கிராமம் சாதிகளால் ஒரு பாகுபாட்டை அடிமைத்தனத்தைப் பேணுகிறது
என்றால் நகரம் மேட்டிமைத் தன்மைகளால் அதைப் பேணுகிறது. அதற்கு எழுத்தாளர்கள் ஆகப் பொதுவாகக்
கையாளும் மனிதநேய சிகிச்சையைப் பயன்படுத்தி அச்சிறுகதையை முடித்து வைக்கிறார் சித்தார்த்தன்.
ஆக மொத்தத்தில் ஒரு நல்ல சிறுகதைத் தொகுப்பைத் தர வேண்டும் என்ற
எத்தனிப்பும், தமிழ் கூறு நல்லுலகில் தான் நல்லதொரு சிறுகதை எழுத்தாளராக அறியப்பட வேண்டும்
என்ற முனைப்பும் சித்தார்த்தனது முதல் சிறுகதைத் தொகுப்பில் தெரிகிறது.
இத்தொகுப்பின் மற்றொரு விளங்கிக் கொள்ள முடியாத சிறப்பம்சம்
இந்நூல் வெளியீடு குறித்த விவரங்களை அங்கதமாகச் சித்தார்த்தன் விலக்கியிருக்கிறாரோ
என்று எண்ணத் தோன்றுவது. எனினும் இத்தொகுப்பின் சிறுகதைகளை நீங்கள் அவரது வலைப்பூவில்
சென்று வாசித்துப் பார்க்கலாம். உங்களது எண்ணங்களைக் கருத்துப்பெட்டியிலும் அத்துடன்
அவரது மின்னஞ்சலுக்கும் அனுப்பிப் பகிரலாம். அவரது முதல் தொகுப்பை வாசித்துத் தீர வேண்டும்
என்று நினைப்பவர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதால் கூட அவர் நூல் விவரங்களை நூலில்
தவிர்த்து விட்டிருக்கலாம். சித்தார்த்தனின் வலைப்பூவுக்குச் சென்று அவரது சிறுகதைகளைப்
படித்துப் பார்க்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
https://chitharthans.wordpress.com
நூல் குறிப்பு
நூலாசிரியர் |
செ. சித்தார்த்தன் |
நூல்
பெயர் |
ஒரு நாளின் வெற்றி |
பதிப்பும்
ஆண்டும் |
-
|
பக்கங்கள் |
231 |
விலை |
|
நூல்
வெளியீடு |
|
No comments:
Post a Comment