17 Mar 2024

புள்ளிகள் நகரும் போது கோடுகளாகின்றன!

புள்ளிகள் நகரும் போது கோடுகளாகின்றன!

ஒரு வரைபடம் உருவாகி விட்டால் பயணித்துக் கொண்டே போகலாம். வரைபடத்தில் இருப்பவையும் கண்ணில் படுபவையும் ஒத்துப் போக வேண்டும் என்றில்லை. வரைபடம் இல்லாமல் பயணிக்க முடியாது. காண்பதற்கு முன்பு எப்படி ஒரு வரைபடத்தை உருவாக்க முடியும் என்று கேட்கலாம். உருவாக்கினாலன்றி பயணிக்க முடியாது. இந்த வரைபடத்தை மனம் வரையும். கற்பனை அதற்கு உதவும். கேள்விப்பட்ட செய்திகளும் ஊகங்களும் வரைபடத்தை விஸ்தீரமாக்கும்.

பாதி பயணத்தின் போது வரைபடம் குழப்பத்தை உண்டு பண்ணும். மீண்டும் வரைபடத்தை வரைய முயலும் போது கற்பனைத் திறன் மங்கும். முயன்று வரையப் போய் படைப்பாளுமையோடு வரையும் திறனை இழக்க நேரிடும். சில காலம் பித்துப் பிடித்து வரைபடமின்றி அலையலாம். ஒரு நாள் பித்து ஒரு நிலைப்படும். அங்கிருந்து ஒரு புதிய வரைடபம் தோன்றும்.

தோன்றும் சந்தேகங்கள் புதிது புதிதாக வரைபடங்களை வரைந்து தள்ளும். அதற்காக வேறு மாதிரியாக எல்லாம் மெனக்கெட வேண்டியிருக்கும். அந்த மெனக்கெடல்களின் அவஸ்தைகள் புரியாமல் எல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கும். பித்திற்கு அப்பாற்பட்ட மனநிலையாலன்றி அந்த மனநிலையை ஒரு மனிதரால் தாங்கவோ எதிர்கொள்ளவோ முடியாது. இப்போது வரைபடத்தை மனிதர் உருவாக்கிய நிலை மாறி வரைபடம் அந்த மனிதரை உருவாக்கத் தொடங்கும்.

அங்கே நீங்கள் நினைப்பது போல கொலம்பஸ்ஸோ, வாஸ்கோடகாமாவோ ஒரு தீவுக் கூட்டத்தை அடைந்திருக்கலாம் அல்லது நம்பிக்கை முனையைக் கடந்திருக்கலாம். ஒரு வரைபடத்தின் நோக்கம் அங்கே முடிந்து விடாது. வரைபடம் எல்லையற்றது. தென்துருவத்தைத் தேடி ஒரு சிறகடிப்பு நிகழலாம். அங்கும் வரைபடம் முடியாது. அது வான்வெளிப் பாதையைத் தேர்ந்தெடுக்கும். நிலவை நோக்கும். செவ்வாயை நோக்கும். சூரியனை நோக்கும். அது பயணிப்பதற்கு அண்ட சராசரங்கள் ஆயிரம், கோடி என எவ்வளவோ கணக்கிலடங்காமல் இருக்கின்றன.

ஒரு கூகுள் நில வரைபடம் தவறாக வழி காட்டுவதற்காக நீங்கள் அலுத்துக் கொள்ளக் கூடாது. அது அறிந்ததிலிருந்து அறியாத ஒரு திசையை நோக்கி உங்களைத் தள்ளுகிறது. உங்களுக்கான வரைபடத்தை உருவாக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. வழக்கமான வரைபடத்தில் பயணித்துப் பயணித்துத் தேய்ந்தழிய விரும்பினால் நீங்கள் கூகுள் வரைபடம் சரியாக வழிநடத்தியதற்காக அதற்கு நன்றி சொல்லுங்கள். உண்மையில் நீங்கள் அதற்கு நன்றி சொல்ல விரும்பினால் தவறாக வழிநடத்திய ஒரு நாளுக்காக நன்றி சொல்லுங்கள்.

வழக்கமான வரைபடப்பாதையில் நீங்கள் எதைப் பார்ப்பீர்கள்? எதை கூர்ந்து கவனிக்கப் போகிறீர்கள்? உங்களுக்கு அச்சம், பரபரப்பு, பரவசம், திகில், குழப்பம், கையறு நிலை என்று எந்த உணர்வு உண்டாகப் போகிறது?

திக்கு தெரியாத காட்டில், வழி தெரியாத பாலைவனத்தில் சிக்கிக் கொள்ளும் போது உங்கள் மனம் ஒரு வரைபடத்தை உருவாக்கும். அதில் பயணித்துப் பாருங்கள். சாகத்திற்கான துடுப்பு அது. நீங்கள் பிழைப்பீர்களா என்று ஐயமுற்று அழியப்  போகும் வேளையில் நீங்கள் பிழைத்து வர வேண்டும். அப்போது நீங்கள் உங்களின் வரைபடத்தை உணர்ந்திருப்பீர்கள்.

உங்கள் வரைபடத்தை உங்களையன்றி வேறு யாராலும் உருவாக்க முடியாது என்பது சாசுவதமான உண்மை. சுவர்களில் தொங்கும் வரைபடங்களையோ, உங்கள் அலைபேசியில் குறி காட்டும் வரைபடங்களையோ தயவுசெய்து அடிக்கடி பயன்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் நிறைய பாதைகளில் பயணிக்க வேண்டும், நிறைய மனிதர்களைச் சந்திக்க வேண்டும். உங்கள் வரைபடங்களை உருவாக்குங்கள். அது கடினமான ஒன்றுதான். அந்தக் கடினத்தின் மூலமாகத்தான் நீங்கள் வாழ்க்கையின் எளிமையைப் புரிந்து கொள்ள முடியும். கனத்தப் பயணச் சுமையோடும் வரைபடத் துணையோடும் செல்லும் பயணங்கள் வாழ்வை மேலும் மேலும் கடினமாக்குகின்றன. எதிர்பாராத ஒன்றை எதிர்கொள்ளும் போதுதான் வாழ்வின் எளிமையை உங்களால் உணர முடியும். நீங்கள் உங்கள் வரைபடத்தின் முதல் புள்ளியை நகர்த்தத் துவங்குங்கள். புள்ளிகள் நகரும் போது  கோடுகளாகின்றன. கோடுகள் நகரும் போது பயணங்கள் பாதைகளில் பயணிக்க ஆரம்பித்து விடுகின்றன. பயணங்களில் பயணித்துக் கொண்டிராமல் பயணங்களைப் பயணிக்க வையுங்கள்.

*****

No comments:

Post a Comment

Solutions available while changing lifestyles!

Solutions available while changing lifestyles! Samudhira used to drink only half of the water bottle she took to school. The rest of the w...