11 Sept 2022

இந்திய மரபில் கருவிகள்

இந்திய மரபில் கருவிகள்

இந்திய மரபில் கருவிகளுக்கு உயர்ந்த முக்கியத்துவம் உண்டு. கருவிகள் தெய்வங்களுக்கு நிகரான மதிப்பு கொண்டவை.

கைகளில் கருவிகளை ஏந்தியுள்ள இந்திய தெய்வங்கள் அதிகம். கருவிகள் இல்லாத தெய்வங்களைப் பார்க்க முடியாது. அக்கருவியானது அரிவாளாக, வாளாக, வேலாக, சூலாயுதமாக, வில்லாக, கம்பாக என்று ஏதோ ஒன்றாக இருக்கலாம்.

சரஸ்வதி பூஜைக்குக் கருவி பூஜை என்று பெயரும் உண்டு. அந்த ஒரு நாளில் கருவிகள் அனைத்தும் கொண்டாடப்படுகின்றன. அவரவர் தொழிலுக்குப் பயன்படும் கருவிகளுக்குப் படையல் இடப்பட்டுப் போற்றப்படுகின்றன.

நான் சிறு பிள்ளையாக இருந்த போது எங்கள் தாத்தா வீட்டிற்கு எதிரில் ஒரு கொத்தனார் இருந்தார். அந்தக் காலத்தில் மிதிவண்டி வைத்திருந்த மிகச் சிலரில் அவரும் ஒருவர். மிதிவண்டிகளுக்குக் கூட லைசென்ஸ் வாங்க வேண்டிய காலம் அது.

அவர் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் செய்யும் முதல் வேலை மிதிவண்டியைத் துடைப்பதுதான். அரை மணி நேரத்திற்கும் மேலாகத் துடைப்பார். துடைத்து முடித்ததும் வண்டிக்கு முன் சந்தனம் வைத்து குங்குமப் பொட்டிட்டு மிதிவண்டியின் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவார்.

தெருவில் செல்வோருக்கு அவர் அப்படி செய்வது வேடிக்கையாக இருக்கும். சில நிமிடங்கள் நின்று பார்த்து விட்டுச் செல்வர்.

அவர் ஏன் இப்படிச் செய்கிறார் என்று எல்லாரையும் போல நானும் கேட்டிருக்கிறேன். அவரிடமே ஒரு நாள் கேட்டிருக்கிறேன். தனக்கு மிதிவண்டிதான் தெய்வம் என்று சொன்னார்.

அப்படியானால் கோயிலில் இருக்கும் சாமி தெய்வம் இல்லையா என்று நான் கேட்டேன்.

அதுவும் தெய்வம், இதுவும் தெய்வம், இருந்தாலும் எனக்கு மிதிவண்டிதான் குல தெய்வம் என்று அவர் சொன்னார்.

அந்த மிதிவண்டியில்தான் அவர் பல இடங்களுக்கும் வேலைக்குச் சென்றார். வேலைக்குச் செல்லும் இடங்களில் மிதிவண்டியை மிகவும் பாதுகாப்பான நிழல் பாங்கான இடத்தில் நிறுத்தி வைத்து விட்டுதான் வேலையைத் தொடங்குவார்.

வேலையைத் தொடங்குவதற்கு முன் கொத்தனார் வேலைக்கான அத்தனை கருவிகளுக்கும் என்று சில பூசைகளைச் செய்து விட்டு அவற்றைச் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவார். உடன் வேலை பார்க்கும் பணியாட்களையும் அவ்வாறே செய்ய சொல்லுவார்.

வேலை செய்வதற்கான கருவிகள் மேல் அவர் கொண்டிருந்த மதிப்பு அபாரமானது. தொழிலில் அவருக்கு ஏகக் கிராக்கி இருந்தது. அது அவர் கருவிகளை வணங்கும் முறைக்காகவும் இருந்திருக்கலாம், வேலை நேர்த்திக்காகவும் இருந்திருக்கலாம்.

அவருடைய வேலைப் பாங்கும் கருவிகளின் மீதான பயபக்தியும் அவருக்கு ராசியான கொத்தனார் என்ற பெயரையும் வாங்கிக் கொடுத்திருந்தது.

அவர் முதுமையின் தள்ளாமையை அடையும் காலம் வரை அவருடைய மிதிவண்டியையோ, கருவிகளையும் யாரிடமும் பங்கிட்டுக் கொண்டதில்லை. அவருடைய மகன் ஒரு முறை அவருடைய மிதிவண்டியை எடுத்து ஓட்ட முயன்று அவரிடம் அடிபட்டிருக்கிறான்.

அவர் தன்னுடைய கருவிகளை அவருடைய மனைவிக்கும் மேலாக, பிள்ளைகளுக்கும் மேலாகத்தான் கருதினார் என்று சொல்ல வேண்டும். கருவிப் பித்து பிடித்த மனிதராகவும் அவர் இருந்தார்.

இந்திய மரபில் கருவிகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை அவர் மிக அதிகமாகவே ஈர்த்துக் கொண்டிருந்தார்.

தான் கட்டிய வீடு, தான் சேர்த்த சொத்து என அனைத்தும் அவருடைய கருவிகள் போட்ட பிச்சை என்றும் அவர் அடிக்கடிச் சொல்லுவார்.

தன்னுடைய வேலைத்திறனைப் பார்த்துதான் தனக்குப் பெண் கொடுத்தார்கள் என்றும் சொல்வார். அந்த வேலைத்திறனைத் தந்தது எது என்று கேள்வி கேட்டு விட்டு ஒரு சிறு இடைவெளி விட்டு கருவிகள்தான் என்று அவரது கேள்விக்கு அவரே பதிலும் சொல்வார். இப்படி கருவிகளின் மீது கர்வம் கொண்ட மனிதராகவும் அவர் இருந்தார். கருவிகளின் மீது பற்றும் மதிப்பும் கொண்ட மனிதராகவும் இருந்தார்.

இந்திய மரபில் இப்படிக் கருவிகளைத் தெய்வங்களாக்கி வாழ்ந்த பல மனிதர்களை நீங்களும் பார்த்திருக்கலாம். கருவிகளின் மீது இந்தியர்களுக்கு இருக்கும் உறவு ஒருவகையில் தெய்வீகம் கலந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...