7 Aug 2021

எழுத்தாளர் அறிமுகங்கள்

எழுத்தாளர் அறிமுகங்கள்

திரு எஸ்.கே.

            இவர் நமது வலைப்பூவின் மூலமாக உங்களுக்கு அறிமுகமானவர்தாம். ஆழ்மனதைச் சிக்குடைத்து எழுதுவதில் வல்லவர். இதற்கென ஈருளி இரண்டு வைத்திருக்கிறார். அவ்வபோது ஆழ்மனதை அறுவைச் சிகிச்சை செய்தும் வெளிக்காட்டுவார். அதற்கேற்ப அறுவை பிளேடுகள், பென்சில் கத்திரிகள் நிறைய வைத்திருக்கிறார். அறுவைக்கு முன் செய்ய வேண்டிய அனஸ்தீசியா பற்றி ஒரு பி.ஹெச்.டி.யும் செய்திருக்கிறர். இந்த வலைப்பூவில் மேய்ந்தால் அவரின் அநேகப் பத்திகளை நீங்கள் அசை போடலாம்.

மானஸ்தர் எம்.கே.

            இவர் எஸ்.கே.வின் நண்பர். அவ்வபோது எஸ்.கே.வின் எழுத்துகளில் தலைகாட்டுபவர். இருக்கிறாரா, இல்லையா என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. சில சமயங்களில் அண்டார்ட்டிக்காவில் இருப்பதாகச் செய்தி வரும். அதற்கேற்ப பென்குயினோடு நடைபோடும் படங்களை ஹாட்டாகத் தட்டி விடுவார். அண்டார்ட்டிக்காவில் ஏது ஹாட் எனக் கேட்க கூடாது. எம்.கே. அப்படித்தான். எதைச் செய்தாலும் ஒரு சூடு இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார். அதனால் இவரை சூடு சுரணை உள்ளவர் என்று சொன்னால் அதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைபவர். மைக்ரோ வேவ் அவன்களின் காதலர். அந்தக் காலத்து அவன்களிலிருந்து இந்தக் காலத்து அவன் வரை பல விதமாக வீட்டில் சேகரம் செய்து வைத்திருக்கிறார். அதில் என்ன ஒரு சிரமம் என்றால் அவற்றைப் பார்க்க நீங்கள் அண்டார்டிக்கா செல்ல வேண்டியிருக்கும்.

ரோபோகாந்த்

            வருங்காலத்தில் நீங்கள் அறிய வேண்டிய எழுத்தாளர்களில் ஒருவர் இவர். இதற்காகவே இருநூறு ஆண்டுகளாக டைம் மிஷினில் வசித்து வருகிறார். சமயம் ஏற்படும் போது வெளிப்பட வேண்டும் என்பது இவரது எண்ணம் மற்றும் திண்ணம். கி.பி. 3000, கி.பி. 12000 ஆண்டுகளில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து முன்கூட்டியே உலகுக்கு எழுத்தின் மூலம் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற வேட்கையோடு இருக்கிறார். கி.பி. 5000 இல் பர்க்கர் இல்லை, கி.பி. 8000 இல் பீட்ஸா இல்லை என்பன போன்ற சுவையான கவிதைத் தொகுப்புகளைக் கொணர்ந்திருக்கிறார். என்ன ஒரு துரதிர்ஷ்டம் என்றால் அவற்றை கி.பி. 2521 இல் அச்சடிக்க கொடுத்திருப்பதால் அதற்காக நாம் இன்னும் 500 ஆண்டுகள் சொச்சம் காத்திருக்க வேண்டியதாக இருக்கும்.

தனீஷரசன் கே.டி.ஆர்.

            பின் நவீனத்துவ எழுத்து, பழமைவாத எழுத்து ஆகிய இரண்டு எழுத்துகளிலும் ஒரே நேரத்தில் கலக்கக் கூடியவர். சில நேரங்களில் யாருக்கும் புரியாத அளவுக்கு எழுதிக் கொண்டிருப்பவர் அப்படியே உல்டாவாகி குழந்தைக்கும் புரியக் கூடிய அளவில் எழுதுவார். இதனால் இவர் பெரியவர்களின் எழுத்தாளரா? குழந்தைகளின் எழுத்தாளரா? என்ற குழப்பம் இயல்பாக எழுந்து விடும். கடந்து ஐந்து ஆண்டுகளாக ஐயாயிரம் பக்கங்களுக்கு நாவல் எழுதி வெளியிட்டுக் கொண்டிருந்தவர் சமீப காலமாக நூறு இருநூறு பக்கங்களுக்குச் சுருக்கிக் கொண்டு விட்டார். பாக்கெட் நாவல்களும் எழுதுகிறார். இதழ்களில் துணுக்குகள், ஜோக்குகளும் அவ்வபோது எழுதுகிறார். ஒரு எழுத்தாளருக்கு அவையும் தேவை என்பது இவரது கருத்து. அதிக அறிமுகம் இல்லாத ஒரு சில இதழ்கள் நடத்தும் குறுக்கெழுத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகள் வென்றிருக்கிறார். ஓர் எழுத்தாளர் என்பவர் சகல இதழ்களுடனும் அதன் பங்களிப்புகளுடனும் தொடர்பு கொண்டவராக இருக்க வேண்டும் என்று கருதும் இவர் இதுவரை இணைய இதழ்களில் எவ்வித பங்களிப்பையும் வழங்கவில்லை என்பது பெரிய குறை என்றாலும் வருங்காலத்தில் அதை சரி செய்து விடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

            இப்படி நாட்டில் நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். எனக்கு அறிமுகம் செய்ய நேரம் இருக்கிறது. ஆனால் உங்களுக்குப் படிக்க நேரம் இருக்கிறதா என்று தெரியவில்லை. நேரம் இருந்தால் எஸ்.கே. எழுதிய பத்தி ஒன்றைப் படித்துப் பாருங்கள். கீழே சொடுக்கிப் படிப்பதைச் செய்து கொள்ளுங்கள்.

https://vikatabharathi.blogspot.com/2021/06/blog-post_25.html

No comments:

Post a Comment

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா?

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா? தமிழகத்தில் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் கூட்டண...