8 Aug 2021

மிகச் சிறந்த தடுப்பூசி

மிகச் சிறந்த தடுப்பூசி

            கொரோனா தாக்குதலுக்கு அலை என்று பெயர் வைத்திருப்பதால் நீங்கள் ஒன்றை அறிந்து கொள்ளலாம். அலைகள் ஓய்வதில்லை. இந்தத் தலைப்பில் பாரதிராஜா படம் ஒன்றை எடுத்திருக்கிறார். முத்துராமனின் மகனான கார்த்திக் அறிமுகமான படம். அவரின் பாஷையில் சொன்னால் இதெல்லாம் இப்படித்தான், நாம்ம பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்பதாக நினைக்க தோன்றும்.

            கொரோனா குறித்து சித்த, ஆயுர்வேத, ஓமியோ மருத்துவர்கள் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் குரல் வெளியே வரவில்லை. கொரோனாவுக்கு மருந்து கபசுர குடிநீர் என்று அறிந்து கொண்டிருந்த நிலையில் இப்போது எல்லாரும் கோவாக்சின், கோவிசீல்டு என்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு ஊசிகளைக் குத்தினால் வேலை முடிந்து விட்டது என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

கபசுர குடிநீர் என்றால் கொதிக்க வைக்க வேண்டும், அதன் உவர்ப்பு கசப்பு கலந்து சுவையைப் பருக வேண்டும் என்று எக்கசக்க சிரமங்கள் இருக்கின்றன. எனக்குத் தெரிந்த கிராமத்து அம்மையார் ஒருவர் கீழாநெல்லியிலும் ஆடாதொடை இலையிலும் மருந்து காய்ச்சி கொரோனா தடுப்பு மருந்தாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் பல பேரைச் சந்திக்க வேண்டிய பணியில் இருக்கும் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். தன்னால் வெளி மருந்துகளையோ, யாரோ தயாரிக்கும் மருந்துகளையோ நம்ப முடியாது என அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார். தன் வாழ்க்கை முறையின் மீதும் இயற்கையின் மீதும் நம்பிக்கை வைக்கும் ஒரு மனிதரின் பேச்சு அது.

யோசித்துப் பார்த்தால் எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு இருப்பது போல எல்லா நோய்களுக்கும் ஒரு மருந்து இருக்கிறது. அதுவும் நம் கையில் அகப்படும் மூலிகைகளில் மருந்து இருக்கிறது. காங்கீரீட்டுகள் மலிந்து கிடக்கும் நகரங்களில் எங்கே மூலிகை இருக்கிறது என்று கேட்காதீர்கள். கொஞ்சம் மண்ணுக்கு இடம் இருந்தால் போதும் அங்கே மனிதருக்கு வரக் கூடிய நோய்களைத் தீர்க்கும் மூலிகை ஒன்று முளைக்கும் என்பது இயற்கையின் நியதி. நாம் செய்ய வேண்டியது கொஞ்சம் மண்ணுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பதுதான்.

            நாம் இயற்கைக்கு இடம் கொடுக்காமல் கிருமிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது மற்றொரு பக்க உண்மை. எங்கே சூரிய ஒளியும் நல்ல நீரும் நல்ல காற்றும் கிடைக்கவில்லையோ அங்கே நோய்க்கிருமிகள் புதிது புதிதாக உருவாகும். நாம் சூரிய ஒளிக்கு இடம் தராமல் வீடுகளைக் கட்டிக் கொண்டிருக்கிறோம். அதன் வெம்மைக்கு உடம்பை ஆட்படுத்தாமல் குளிர்சாதன வசதிகளை நிறுவிக் கொண்டிருக்கிறோம். தூய்மையான காற்று நம்மிடம் கிடையாது என்று சொன்னால் யாரும் சண்டைக்கு வந்து விடக் கூடாது. இதில் புகை பிடிப்பவர்கள் வேறு. அவர்கள் தனியாக ஒன்றும் புகை பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. சுற்றி இருப்பதே புகைக்காற்று என்பதால் அந்தப் புகைக்காற்றைப் பிடித்துக் கொள்ளலாம்.

            நாம் எவ்வளவு செலவு செய்து தடுப்பூசியைத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். தடுப்பூசிப் போட்டுக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறோம். அதில் கொஞ்சம் தனி மனித இடைவெளி, சுகாதாரம் போன்றவற்றில் நாம் காட்டுவதில்லை. ஊசிப் போட்டுக் கொண்டால் போதும் கண்ட இடத்தில் எச்சில் துப்பலாம், எப்படி வேண்டுமானாலும் நெருக்கியடித்துக் கொண்டு எவரை வேண்டுமானாலும் முந்தலாம் என்று நினைக்கிறோம்.

            நாம் மாறாத மனித சுபாவத்துடன் ஓடிக் கொண்டிருக்க நினைக்கிறோம். அதற்கேற்ப தேவையான கண்டுபிடிப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறோம். கண்டுபிடிப்புகளை உருவாக்க நினைத்தால் அதற்கோர் அளவில்லை. கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளுங்கள். கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் எனத் தொடங்கி கோவாவேக்ஸ், பெகோவ், சைகோவ் என்று புதிது புதிதாகக் கண்டுபிடிக்க நினைக்கிறோம் அல்லது இறக்குமதி செய்ய நினைக்கிறோம்.

            மருந்து கம்பெனிகளும், நுகர்வுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் இருந்தால் போதும், எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து விடலாம் என்று நினைக்கிறோம். ஆனால் நமக்கான மருந்து கம்பெனிகள் மூலிகை வடிவில் நம் வாழிடத்துக்கு அருகே காத்துக் கிடக்கின்றன. நமக்கான நுகர்வு பொருட்கள் இயற்கையின் வடிவில் எளிமையாக அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இருக்கின்றன. நாம் நம் வாழ்க்கை முறையைச் சரியானபடிக்கு மாற்றிக் கொண்டால் அதைப் போன்ற சிறந்த தடுப்பூசி இந்த உலகில் எதுவும் இல்லை. தடுப்பூசிகள் எனும் போது அதன் பின்விளைவுகளையும் கருத்தில் கொண்டு நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். அதற்கு நீங்கள் இணையத்தில் தேடினால் நிறையவே கிடைக்கும். கீழே உள்ளதைச் சொடுக்கிப் பாருங்கள்.

https://www.historyofvaccines.org/content/articles/vaccine-side-effects-and-adverse-events

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...