பருவத்தே பணம் செய்பவர்கள் கவனத்திற்கு…
இருபத்தைந்து
வயதுக்குள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ஓர் ஆணையோ, பெண்ணையோ பார்த்து தற்போதெல்லாம்
சொல்லி விட முடியாது. வாழ்க்கையில் எதையாவது ஒன்றை சாதித்த பின்தான் கல்யாணம் என்று
பிடிவாதமாக மறுத்து விடுகிறார்கள். அதென்ன சாதனை? அது நல்ல சம்பாத்தியத்தில் வேலைக்குப்
போவதாகவோ, படித்து முடித்து முனைவராவதோ, முப்பது வயதுக்குள் ஒரு கோடியைச் சேர்ப்பதாகவோ,
ஒரு வீடு, மகிழ்வுந்து வாங்குவதாகவோ என்று பல வகையாக இருக்கின்றன.
இந்தச்
சாதனைகளை எல்லாம் முடித்து விட்டு முப்பது வயதுக்கு மேல் திருமணத்திற்கு வருகிறார்கள்.
இதிலென்ன அவசரம் என்று நாற்பதில் வருபவர்களும் இருக்கிறார்கள். அப்படி வந்தால் குழந்தைப்
பிறப்பதில் பிரச்சனை. இதனால் கோயில் கோயிலாக அலைகிறார்கள் அல்லது மருத்துவமனை மருத்துவமனைகளாக
அலைகிறார்கள். எப்படியோ ஒரு குழந்தை பிறந்தால் அப்போதாவது ஆசுவாசமாகிறார்களா என்றால்,
அந்தக் குழந்தையை நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று அது பிறந்த நாள் முதற்கொண்டு
பிரபலமான பள்ளிகளின் சுற்றுச்சுவர் (காம்பௌண்ட்) அருகே தேவுடு காக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
அப்படியே
நாற்பதைக் கடப்பதற்குள் சர்க்கரையோ, ரத்தக்கொதிப்போ வந்து விடுகிறது. அதற்கான வைத்தியத்தோடு
நல்ல சாப்பாட்டை நாற்பதுக்கு மேல் இழந்து விடுகிறார்கள்.
ஐம்பதைக்
கடப்பதற்குள் டயலாசிஸை நோக்கி முன்னேறி விடுகிறார்கள். ஆறுபதிற்குள் கட்டி, அறுவை சிகிச்சை
என்று பெயரில் நுழையாத பலவகை மருத்துவ சிசிக்கைக்குப் பாத்தியப்பட்டு விடுகிறார்கள்.
பிள்ளைகளைப்
படிக்க வைத்து வெளிநகரங்களுக்கோ, வெளிமாநிலங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ அனுப்பி வைத்து
விட்டு அனாதையாய் பரிதாபமாய் இறப்பதை பார்க்கும் போது இந்தச் சாதனைக்காகவா திருமணத்தைத்
தள்ளிப் போட்டு, சம்பாத்தியத்திற்காக நாயாய்ப் பேயாய் அலைந்து, பின்பு மருத்துவம் எனும்
நரகத்தில் ஆழ்ந்து, பேரன் பேத்திகளைக் கூட ஆசை தீர கொஞ்சாமல் போய்ச் சேர்கிறார்கள்
என்று எண்ணத் தோன்றுகிறது.
இதன்
அடிநாதம் என்னவென்று பார்த்தால் பொருளாதாரம்தான். படிப்பு என்று சொன்னாலும் படிப்பின்
மூலம் பொருளாதாரம் என்பதுதான் அந்த அடிநாதத்தின் ஊடே ஊடுபாவாய் ஓடிக் கொண்டிருககும்
ஆணிவேர். அது சரி! பொருள் மட்டும்தான் ஆதாரமா என்ன?!
இருபத்தொன்றைக்
கடந்து விட்டாலே ஆணோ, பெண்ணோ திருமணத்தில் இணைந்து விடலாம். அப்படியென்ன அதை ஒத்தி
வைத்து விட்டு பணத்தைச் சம்பாதித்து எல்லாரும் பில்கேட்ஸாகவோ, அம்பானியாகவோ, அதானியகாவோ
ஆகி விடப் போகிறார்கள்?
பொருளாதாரம்தான்
முதன்மை என்றால் நாட்டில் பிச்சைக்காரர்களும், ஏழைகளும் குழந்தைகளே பெற்றுக் கொள்ள
முடியாது. பொருளாதாரமும் முதன்மை என்றாலும் அந்தந்த வயதில் செய்ய வேண்டியதைச் செய்து
விடுவது அதை விட முதன்மையானது. அப்படிச் செய்யத் தவறினால் எந்தப் பொருளாதாரத்தை முதன்மையாக
நம்பி களத்தில் குதித்தீர்களோ, அதே பொருளாதாரத்தால் மரண அடி விழுவதையும் தடுக்க முடியாது.
இருபத்தைந்து
வயதிற்குள் எந்தக் கோயிலுக்கோ, மருத்துவமனைக்கோ செல்லாமல் குழந்தைப் பெற்றுக் கொள்வது
எப்படி, முப்பதைக் கடந்து லட்சங்களைக் கொட்டி இறைந்து ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வது
எப்படி, ஒரு குழந்தையைப் பெற்று ஏதோ ஒரு பள்ளியில் படிக்க வைத்து, அவர்களுக்கும் காலா
காலத்துக்கும் ஒரு திருமணத்தைச் செய்வித்து, பேரன் பேத்திகளை எடுத்து ஒரே வீட்டில்
தாத்தா – பாட்டி, அப்பா – மகன், பேரன் – பேத்தி என்று மூன்று தலைமுறைகளும் ஒரே வீட்டில்
ஒருவருக்கொருவர் அனுசரனையாகவும் அன்பாகவும் இருப்பது எப்படி, படிப்பே பிரதானம் என்று
குழந்தைகளை மன அழுத்தத்தோடு படிக்க வைத்து, அவர்களை அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும்
அனுப்பி வைத்து விட்டு, அங்கு அவர்களும் நிம்மதியாக இல்லாமல், இங்கு அவர்களைப் பெற்று
அனுப்பி வைத்தவர்களும் நிம்மதியாக இல்லாமல், கடைசிக் காலத்தில் யாரும் இல்லாமல் அனாதையாகப்
போய் சேர்வது எப்படி?
பொருளாதாரம்
என்பது வாழ்க்கையில் அடிப்படை வசதிகளைச் செய்து தருகிறது. அதை இன்னும் கூடுதலாகவும்
செய்து தருகிறது. சில பல வாய்ப்புகளைத் திறந்து விடுகிறது. அதைத் தவிர அதனால் எதையும்
செய்ய இயலாது. அப்படி அது செய்து தரும் வசதிகளுக்கும் வாய்ப்புகளுக்கும் ஒரு விலையையும்
உங்களை வைத்தே அது செலுத்தவும் வைக்கும். சில நேரங்களில் அந்த விலையானது நீங்கள் யாருமற்ற
மனிதர்களாக அனாதையாக ஆவதாகவும் இருக்கக் கூடும்.
இதை
அறிந்தும் உணர்ந்தும் பொருளாதாரத்துக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ,
அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே நல்லது. அதைத் தாண்டி முக்கியத்துவம் கொடுக்கும்
யாராக இருந்தாலும் அந்தப் பொருளாதாரத்தாலேயே அவர்கள் ஆதாரம் இல்லாமல் நிற்பதை யாராலும்
தடுக்க முடியாது.
பருவத்தே
பணம் செய்யும் முன், பருவத்தே உயிர் செய்யுங்கள். செய்த உயிரோடு உயிருக்கு உயிராக உறவாடுங்கள்.
பருவத்தே உயிர் செய்த பயிர் வாழ்க்கைக்கான ஆதாரமாக அன்பின் ஆதர்சமாக ஆகட்டும்!
*****