8 Jul 2025

நீங்கள் மட்டும்தான் மகிழ்ச்சியாக இல்லையா?

நீங்கள் மட்டும்தான் மகிழ்ச்சியாக இல்லையா?

ஒவ்வொருவருக்கு இப்படி ஓர் எண்ணம் இருக்கிறது. தாம் மட்டும்தான் இந்த உலகில்மகிழ்ச்சியாக இல்லையோ என்று நினைக்கிறார்கள். தாம் மட்டும்தான் இந்த உலகில் பிரச்சனையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்று நினைக்கிறார்கள்.

ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவர் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிப்பவரைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுகிறார். பத்தாயிரம் ரூபாய் சம்பாதிப்பவர் ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவரிடம் இருக்கும் நிம்மதி தன்னிடம் இல்லையே என்று அங்கலாய்க்கிறார்.

பணம், சொத்து, நகை எல்லாம் வந்துவிட்டால் சந்தோசம் வந்து விடும் என்று நினைக்கும் மனிதர்கள், எல்லாம் வந்ததும் சந்தோசம் போய் விட்டது என்கிறார்கள்.

கிராமத்தில் சந்தோசமாக இருக்கும் மனிதர்களுக்கு நகரத்தில் பணத்தோடு வாழும் மனிதர்களைப் பார்த்து ஏக்கம். பணத்தோடு நகரத்தில் இருக்கும் மனிதர்களுக்குக் கிராமத்தில் சந்தோசமாக இருக்கும் மனிதர்களைப் பார்த்து ஏக்கம்.

கிராமத்தில் பத்தாயிரம் சம்பாதிக்கும் ஒருவர், தன்னுடன் படித்து அமெரிக்காவில் லட்ச ரூபாய் சம்பாதிக்கும் ஒருவரைப் பார்த்து ஏங்குகிறார். அமெரிக்காவில் இருக்கும் அவரோ கிராமத்தில் நெருக்கடியோ, மன உளைச்சலோ இல்லாமல் இருக்கும் கிராமத்தில் இருப்பவரைப் பார்த்து ஏங்குகிறார்.

ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே எல்லாரும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தாம் மட்டும் கவலையாக இருப்பதாக ஓர் எண்ணம் இருக்கிறது. ஆனால் ஒவ்வொருவரையும் ஆராய்ந்து பார்த்தால்தான் அவர்களுக்குள் இருக்கும் கவலைகளும் பிரச்சனைகளும் புரிய வரும்.

யாரையும் முன்னேற வேண்டாம் என்றோ, பணம் சம்பாதிக்க வேண்டாம் என்றோ, ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டாம் என்றோ சொல்ல முடியாது. ஆனால் அப்படி முன்னேறினால்தான், சம்பாதித்தால்தான், ஆசை நிறைவேறினால்தான் அது வாழ்க்கை என்றோ, அதுதான் சந்தோசம் என்றோ, அதுதான் நிம்மதி என்றோ நினைப்பதுதான் தவறாகப் போய் முடிகிறது.

விரும்பியபடி முன்னேறியவர் அங்கு சந்தோசமாக இருக்கிறாரா என்றால், இதற்குத்தானா இவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று அங்கலாய்க்கிறார். பணம் சம்பாதிப்பவர் சம்பாதித்த பின் சந்தோசமாக இருக்கிறாரா என்றால், பணம் இல்லாத போது கூட சந்தோசம் இருந்தது, இப்போது அது இல்லை என்கிறார். ஆசை நிறைவேறிய பின்பு சந்தோசம் வந்ததா என்றால், அது அதற்கடுத்த ஆசை ஒன்றை உருவாக்கிக் கொண்டு, அது நிறைவேறினால்தான் சந்தோசம் என்று போய் விடுகிறது.

ஆக புற உலகில் ஒன்றை அடைவதற்கும், ஒன்றைச் சாதிப்பதற்கும், ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் சந்தோசத்துக்கு சம்பந்தமே இல்லை. அதற்கும் நிம்மதிக்கும் தொடர்பே இல்லை. நீங்கள் நினைத்தால் நீங்கள் இருக்கின்ற நிலையிலேயே சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருக்கலாம்.

அதற்காக ஏழ்மையிலேயே உழன்று, ஓர் அடிமையைப் போல இருந்து அப்படியே சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்று சொல்வதாகவும் இதைப் பொருள் கொண்டு விடக் கூடாது. நீங்கள் உண்மையில் ஏழ்மையில் இருந்தால் அதைப் போக்கிக் கொள்வதற்கான அறிவும் திறமையும் உங்களுக்குத் தேவையான அளவில் இருக்கும். ஓர் அடிமை நிலையில் இருந்தால் அதைப் போக்கிக் கொள்வதற்கான முயற்சியும் போராட்ட உணர்வும் உங்களுக்கு இருக்கவே செய்யும். அதைப் பயன்படுத்தி அவற்றிலிருந்து நீங்கள் உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்.

இங்கே சொல்ல வருவது மகிழ்ச்சியோ, நிம்மதியோ அளவு கடந்த செல்வத்திலோ, அதீத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதிலோ, இந்த அளவுக்கு முன்னேறினால்தான் என்பதிலோ இல்லை என்பதுதான்.

உங்களுக்கு உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் நிறைவேறியிருக்கிறதா, அன்றாடம் சம்பாதிக்கும் வேலை இருக்கிறதா? நிச்சயம் நீங்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக்கலாம்.

அடுத்தவர்களைப் பார்த்து, அவர்களுடன் ஒப்பிட்டு, நீங்களாக உங்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை மற்றவர்கள் இப்படியெல்லாம் நினைக்கிறார்கள் என்பதற்காக அதைத்தான் முன்னேற்றம் எனக் கருதிக் கொண்டு உங்கள் சந்தோசத்தையும், நிம்மதியையும் ஒருபோதும் இழக்க வேண்டியதில்லை.

*****

No comments:

Post a Comment