9 Jul 2025

இதுதான் நம் இந்தியாவா?

இதுதான் நம் இந்தியாவா?

மின்னியல் மற்றும் மென்பொருட்கள் மட்டும்தான் இந்தியாவா?

மகிழ்வுந்து தயாரிப்புகள், கட்டிடங்களின் கட்டுமானங்களும் மட்டும்தான் இந்தியாவா?

தகவல் தொழில் நுட்பமும் அதன் அதீத வளர்ச்சி மட்டும்தான் இந்தியாவா?

இந்தியாவில் விவாசயமும், சிறு தொழில்களும், கைத்தொழில்களும் முக்கியமே இல்லையா?

இந்தியாவில் ஒருவர் விவசாயியாகப் பிழைப்பதை விட ஒரு கட்டிடத் தொழிலாளியாகப் பிழைப்பது எப்படி எளிதாக மாறிப் போனது? கைத்தொழிலையோ, சிறுதொழிலையோ செய்து சம்பாதிப்பதை விட வாகன பழுது பார்ப்பவராகவும், அலைபேசி மற்றும் தொலைபேசி பழுது பார்ப்பவராகவும் சம்பாதிப்பது எப்படி எளிதாக மாறிப் போனது?

ஒரு சுகாதாரப் பணியாளராகப் பிழைப்பதை விட, மின்னியல் சாதனப் பழுது பார்ப்பவராகவோ, விற்பனையாளராகவோ பிழைப்பது எப்படி சுலபமாகிப் போனது?

சுயதொழில் தொடங்குவதை விட வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்து அவற்றைத் தேவைக்கேற்ப ஒருங்கிணைத்து விற்பனை செய்து பிழைப்பது இந்தியாவில் ஒரு தொழிலாகவே மாறிக் கொண்டிருக்கிறது. இதைத்தான் இந்தியா இன்னும் உற்பத்தி என்று நம்பிக் கொண்டிருக்கிறது.வெளிநாட்டுப் பொருட்களை வாங்கி உள்நாட்டில் அவற்றை மாற்றி அமைத்துக் கொள்வது எப்படி உற்பத்தி ஆகும்?

வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்து அவற்றில் இந்திய தயாரிப்பு வில்லைகளை ஒட்டி அவற்றை இந்தியப் பொருட்களாக விற்பனை செய்வதற்கு ஒரு பெரும் கூட்டமே தயாராகி விட்டது. இதை சாமர்த்தியம் என்று சொல்லலாமே தவிர, தற்சார்பிற்கான சாத்தியமாகச் சொல்ல முடியாது.

இப்படியே தொடர்ந்து கொண்டு, எத்தனை நாள்தான் உள்நாட்டில் தயாரிக்கிறோம் என்று விளம்பரம் மட்டுமே செய்ய முடியும். விளம்பரத்தில் உண்மை இல்லையென்றால் தயாரிக்கப்படுகின்ற பொருள் பல்லை இளித்து விடும். இந்தியாவிலும் அதுதான் நடக்கிறது. இங்கு உள்நாட்டு உற்பத்தி உயரவே இல்லை. மாறாக வெளிநாட்டு இறக்குமதிகள் அதிமாகி அந்தப் பொருட்களைக் கொண்டு உள்நாட்டுத் தேவைக்கான பொருட்கள் தயாரித்துக் கொள்ளப்படுகின்றன.

இந்தியாவுக்கான உலகத் தேவை என்பது மின்னியல் ஒருங்கிணைப்பிலோ (அசெம்பிள்), தரமற்ற கட்டடங்களை கட்டித் தள்ளுவதிலோ, தகவல் தொழில்நுட்ப பணியாளர்களைத் தயாரித்துத் தள்ளுவதிலோ இல்லை.

இந்திய விவசாய உற்பத்தியில், இந்திய மக்களுக்கென்ற உள்ள கைத்தொழில் மற்றும் சுயதொழில் உற்பத்தியில் உலகம் எதிர்பார்க்கும் இந்திய தேவை இருக்கிறது. உலக விவசாயமே ரசாயன மற்றும் நச்சு விவசாயமாக மாறிக் கொண்டிருக்கும் சூழலில், இந்தியா தனது பாரம்பரிய விவசாய முறையைக் கையில் எடுத்து இயற்கையான முறையில் விளைபொருட்களை விளைவித்தக் கொடுத்தால், அதற்கு மிகப்பெரிய சந்தை காத்திருக்கிறது. தனித்துவமாகப் பொருட்களைக் கலைநயத்தோடு உருவாக்குவதிலும் இந்தியாவின் கலை பாரம்பரியம் நிகரற்றது. அதற்கான சந்தை வெற்றிடமும் இந்தியாவுக்காகக் காத்திருக்கிறது.

தனித்துவமான இந்தியாவின் சாராம்சங்களை ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலேயர்கள் அழித்தார்கள், சுரண்டினார்கள், ஏமாற்றினார்கள் என்றால் அவர்கள் அந்நியர்கள் என்று சமாதானப்பட்டுக் கொள்ள காரணம் இருக்கிறது. ஆனால் சுதந்திர இந்தியாவிலும் விவசாயமும் கைத்தொழில் மற்றும் சுயதொழிலும் நசுக்கப்படுகிறது என்றால் இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? இந்தியா வெளிநாட்டு முதலீட்டையும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நலனையும் விரும்புகிறது என்றுதானே அர்த்தம். இதற்கு ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டதற்கும், இந்தியர்கள் இந்தியாவை ஆள்வதற்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்க முடியும்?

இந்தியா முன்பு பிரிட்டனுக்கு ஒரு மிகப் பெரிய சந்தையாக இருந்தது. தற்போது உலகுக்கே மிகப் பெரிய சந்தையாக இருக்கிறது. ஆனால் இந்தியப் பொருட்களுக்காக உலக சந்தையே ஏங்கிக் கொண்டிருக்கிறது. உலகச் சந்தையின் ஏக்கத்தை இந்தியப் பொருட்கள் எப்போது நிறைவேற்றப் போகின்றன? நாம் எப்போதுதான் சுயாதீனமான இந்தியப் பொருட்களைத் தயாரிக்கப் போகிறோம்?

*****

No comments:

Post a Comment