100 ஆவது அடியை அடைய 99 அடிகள் தேவை!
இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்க
வேண்டுமோ
ஏதாவது ஒன்று சிக்கினால்
எழுந்து போய் விடலாம்
எதுவும் சிக்கும் போல் தோன்றவில்லை
எழுந்து போகவும் தோன்றவில்லை
வெற்றி கிடைக்காத போது
எடுத்த எல்லா நடவடிக்கைகளும்
தவறென்று படுகிறது
சின்னதாய் ஒன்று கிடைத்தால்
கூட போதும்
அப்படிக் கிடைக்காத போது
முயற்சி செய்து ஏன் அலட்டிக்
கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது
ஆனால்
முயற்சியின் கணத்தில் உட்கார்ந்திருக்கும்
போதுதான்
ஏதோ ஒன்று கிட்டுகிறது
கிட்டாமல் போகும் பொழுதிற்காக
முயற்சியைக் குறை கூறக் கூடாது
ஒன்றைப் பற்றி பல விதமாகப்
பல முறைகளில்
முயல்கையில்தான் ஏதாவதொன்று
கிட்டுகிறது
கிட்டவில்லை என்பதற்காக விட
முடியாது
ஏன் கிட்டவில்லை என்பது தெரியும்
வரை
ஏதாவது செய்து கொண்டுதான்
இருக்க வேண்டும்
எதிர்பார்ப்பதெல்லாம் கிடைக்க
வேண்டும் என்ற
அவசியம் எல்லாம் இல்லை
அதற்காக எதிர்பார்ப்பதை நிறுத்த
முடியாது
புதிய புதிய முறைகளில்
புதிய புதிய வழிகளில்
ஏதாவது முயன்று கொண்டே இருக்க
வேண்டும்
தோண்ட தோண்ட நீர் ஊறுவதைப்
போலத்தான்
நீர் ஊறாது போனாலும் ஊறும்
வரை
ஆழம் தேடிச் சென்றுதான் ஆக
வேண்டும்
எல்லாவற்றிலும்
அதற்கான முயற்சிகள் எதையும்
எடுக்காமல்
குறை சொல்ல முடியாது
எடுத்து வைக்கும் ஒவ்வொரு
அடியும்தான்
போகும் பாதையைத் தெளிவுபடுத்திக்
கொண்டு போகிறது
முதலடி இல்லாமல் இரண்டாம்
அடி இல்லை
இரண்டாம் அடி இல்லாமல் மூன்றாம்
அடி இல்லை
முதலடி நூறாவது அடியைக் காட்டாது
முதலடி இரண்டாவது அடியைக்
காட்டும்
இரண்டாம் அடி மூன்றாவது அடியையும்
தொண்ணூற்று ஒன்பதாவது அடி
நூறாவது அடியையும் காட்டும்
தொடர்ந்து அடியெடுத்து வைக்காமல்
இருந்து கொண்டு
கடக்காத தொலைவைக் கடக்க முடியாத
தொலைவு என்று
குறை கூறிக் கொண்டு இருக்க
முடியாது
*****
No comments:
Post a Comment