5 Jul 2025

சத்தியம் செய்யலாமா, கூடாதா?

சத்தியம் செய்யலாமா, கூடாதா?

சத்தியம் செய்யலாமா, கூடாதா? சத்தியம் செய்ய மாட்டேன் என்று மறுப்பதற்கு என்ன காரணங்கள் இருக்கலாம்?

இது இனிய நண்பர் காளிதாஸின் கேள்வி.

உலகை மாற்றிய உன்னத கண்டுபிடிப்பு என்னவென்று கேட்டால் சக்கரம், நெருப்பு, நீராவி எந்திரம், தொடர்வண்டி, விமானம், அணுகுண்டு, கணினி, செயற்கை நுண்ணறிவு என்று ஏகப்பட்ட கண்டுபிடிப்புகளைக் கூறலாம். ஆனால் உலகை மாற்றிய மற்றும் மாற்றிக் கொண்டிருக்கும் உன்னத கண்டுபிடிப்பு மனித நாக்கு புதிது புதிதாகக் கண்டுபிடிக்கும் வாக்குதான்.

புதிது புதிதாக அரசியல்வாதிகள் வாக்கு(றுதி)களை அள்ளி விடுவது வாக்குகளுக்குத்தானே. அவர்களின் வாக்குறுதிகள் உலகை எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறது? மாற்றாமலும் போயிருக்கிறது. அது வேறு விசயம். நாமெல்லாம் நம் வங்கிக் கணக்கில் பதினைந்து லட்சம் வந்து விழுந்து விட்டதா என இன்னமுமா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது மறந்து மாமாங்கம் ஆகி விட்டது அல்லவா!

அரசியல்வாதிகள் அள்ளி விடும் வாக்கு(றுதி)களைக் கேட்கும் போது இவையெல்லாம் சாத்தியம்தானா என்று அவர்களுக்கே சந்தேகம் தட்டக் கூடும். இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாது பாருங்கள். அதே நேரத்தில் அவருக்கு வந்தச் சந்தேகம் கேட்பவர்களுக்கும் வந்து விடக் கூடாது அல்லவா! ஆகவே அவர் சொல்வார், “சத்தியமாக நான் சொல்வதெல்லாம் சாத்தியந்தான்!”

இப்போது நமக்குப் பிரச்சனையே, இந்த வாக்குகளில் எது உண்மை, எது பொய் என்பதுதான்.

உங்களுக்கு வாய்ப்பும் வசதிகளும் இருந்தால், நீங்கள் உண்மையைக் கண்டறியும் சோதனைகளையெல்லாம் செய்து பார்க்கலாம். இதற்கெல்லாம் துட்டுச் செலவழிக்க பையில் ரூபாய் இல்லாவிட்டால், கையில் இருக்கும் பைசாவுக்குக் கற்பூரத்தை வாங்கிக் கொளுத்தி வைத்துச் சத்தியம் செய்யச் சொல்வதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது?

எல்லாரும் எல்லாரையும் சத்தியம் செய்யச் சொல்வதில்லை. நீங்கள் சொல்வதில் நம்பிக்கை இல்லை எனும் போதுதான் சத்தியம் செய்யச் சொல்வார்கள். மகாத்மா காந்தியைப் போலச் சத்திய சோதனைக்குத் தயார் என்றால் நீங்கள் உண்மையைப் போராடி நிரூபிக்கலாம். அதற்கெல்லாம் நேரமும் இல்லை, சத்திய சோதனைக்கெல்லாம் தயார் எல்லை என்றால், ஏற்றி வைத்திருக்கும் கற்பூரத்துக்குக் குல்லா போட்டு கப்பென்று அனைத்துவிட வேண்டியதுதான்.

ஆக இப்படி, மனிதர்கள் உண்மையைப் பேசுகிறார்களா, பொய்யைப் பேசுகிறார்களா என்பதை எப்படியாவது அறிந்து கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் தோன்றியதுதான் சத்தியம் செய்வது.

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சத்தியம் செய்ய வேண்டிய இடங்களும் இருக்கின்றன.

நீதிமன்றத்தில் சாட்சியம் சொல்ல நேரிடும் போது சத்தியம் செய்யலாமா, கூடாதா என்றெல்லாம் யோசிக்க முடியாது. அங்கு கட்டாயம் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

ஒருவர் சத்தியப் பிரமாணம் எடுத்து விட்டார் என்பதற்காகச் சத்தியத்தைத்தான் சொல்வார் என்று நம்ப முடியாது இல்லையா? அதற்காகத்தான் அதற்கப்புறம் விசாரணைகள்.

சத்தியம் செய்வதை நம்பாமலும் இருக்க முடியாது, நம்பியும் தொலைக்க முடியாது. இப்படிச் சத்தியத்திற்கே சோதனைகள் உண்டு. சத்தியம் செய்வதைக் கண்ணால் காண்பதும் பொய், சத்தியம் செய்வதைக் காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்ற சோதித்துதான் ஒரு முடிவுக்கு வர வேண்டியிருக்கும்.

இதைத் தாண்டி, சத்தியம் செய்யலாமா, வேண்டாமா என்பதையெல்லாம் யார் அதைச் செய்யச் சொல்கிறார்கள் என்பதைப் பொருத்து முடிவெடுத்துக் கொள்ள வேண்டியதுதான். கடன் வாங்கும் போதும், கடன் வாங்கி விட்டுச் சமாளிக்கும் போதும் சில பல சத்தியங்களைச் செய்யாவிட்டால் சத்தியமாகத் தப்பிக்க முடியாது.

பெண்டாட்டி என்றால் சத்தியம் செய்வது குறித்தெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க முடியாது. ஆயிரம் பொய் சத்தியங்களைச் செய்தால்தான் ஒரு குடும்ப வாழ்க்கையை உருட்டவே முடியும். கல்யாணமே ஆயிரம் பொய்யைச் சொல்லி செய்வதால் அதையெல்லாம் யோசித்துக் குமைந்து கொண்டிருக்க முடியாது. ஒருவேளை பொய் சத்தியம் குறித்து ஆண் வர்க்கம் குமைந்து போகத் துவங்கியிருந்தால், இந்தப் பூவுலகில் ஆண் வர்க்கமே அழிந்து போயிருக்கும்.

அதுவும் இல்லாமல், பெண்டாட்டி போன்ற பெரிய மனிதர்களிடம் சத்தியம் செய்ய முடியாது என்று மறுப்பதற்கு தனி தைரியம் தேவைப்படும். அப்படிப்பட்ட தைரியம் உங்களுக்கு இருந்தால் நீங்கள்தான் தமிழினத்தில் அபிமான நாயகன்.

இதற்கு மேலும் பொய் சத்தியம் குறித்து உங்களுக்கு உறுத்தல் இருக்குமானால், உங்கள் பொய் சத்தியத்தால் நன்மை நடக்குமானால், நீங்கள் தாராளமாக அதைச் செய்யலாம். இதென்ன புது உருட்டு என்கிறீர்களா? திருவள்ளுவரே அதைத்தான் சொல்கிறார்,

“பொய்மையும்  வாய்மை இடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்.” (குறள், 292)

எனக்கென்ன தெரியாதா காளிதாஸ்? நீங்கள் வேண்டுமென்றா பொய் சத்தியம் செய்யப் போகிறீர்கள்? குடும்பம் எனும் புரைதீர்ந்த நன்மைக்காகத்தானே செய்யப் போகிறீர்கள். செய்யுங்கள். நானும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். எல்லாரும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் இணைந்து அதைச் செய்வதில் பெருமிதம் கொள்வோம். மன உறுத்தல் களைவோம்.

*****

No comments:

Post a Comment