இயற்கையை விரும்புவதில் இருக்கும் சிரமங்களில் ஒன்று!
எங்க கிராமத்துல இருக்குற பெரும்பாலான ஆளுங்களுக்கு டவுன்ல வீடு
இருக்கு அப்படியில்லன்னா டவுன்ல ஒரு ப்ளாட்டாச்சும் இருக்கு. அவுங்கள கிராமத்து ஆளுங்கன்னு
சொல்லவும் முடியாது, டவுனுக்காரவுங்கன்னும் சொல்ல முடியாது. ரெண்டும் கலந்த மாதிரிக்கு
ஒரு வாழ்க்கைய வாழ்ந்துக்கிட்டு இருக்குறவங்க. இப்போ எங்க கிராமத்துல வயல் இல்லாத ஆளுங்க
கூட இருக்காங்க, டவுன்ல வீடோ, ப்ளாட்டோ இல்லாத ஆளுங்க இல்ல.
கொஞ்ச காலமாவே ஊருல இருக்குற நெலங்க அத்தனையும் பெரும்புள்ளிங்க
கைக்கு மாறிட்டு இருக்கு. அவுங்க பண்ணை முறை விவசாயமா பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. பாத்தீங்கன்னா
மின்னாடி எல்லாம் வயலுக்கு வேலிங்க கிடையாது, வரப்புகத்தாம் இருக்கும். இப்போ கொத்துக்
கொத்தா நெலத்தை வாங்குனவங்க சிமிட்டுப் போஸ்டப் போட்டு கம்பி வேலிய வெச்சு அடைச்சிட்டாங்க.
ஆளாளுக்கு இப்படி அடைக்க ஆரம்பிக்க ஆடு, மாடுக அடைக்காத வயல்களுக்குள்ள
நொழைய ஆரம்பிக்க வயல அடைச்சாத்தாம் விவசாயம் பண்ண முடியும்ங்ற நெலையில இப்போ பெரும்பாலான
வயக்காடு வேலியோட நிக்குதுங்க.
நெல்லு விவசாயம் லாபம் தர்ற விவசாயமா இல்லாமப் போனதுல பருத்திப்
போடுற ஆளுங்க அதிகமாயிட்டாங்க. இந்தக் குறுவை நேரத்துல கிராமத்துல இருக்குற பாதி நெலத்துல
பருத்திதாம் எங்க கிராமத்துல நின்னுகிட்டு இருக்கு.
இன்ஷ்யூரன்ஸோ, நிவாரணமோ கிடைக்குறதுக்கு வாய்ப்பா இருக்குற சம்பாவுல
இறங்குனாத்தாம் நெல்லு விவசாயம் தாக்குப் பிடிக்குறாப்புல இருக்குங்றதால அதுலத்தாம்
ஒட்டுமொத்தமா நெல்லு விவசாயம் நடக்குது.
இந்த விசயத்தெ ஏம் சொல்றேம்ன்னா ‘ஊர்ல அவனவனுக்கும் டவுன்ல ப்ளாட்டு
இருக்கிறப்போ எம் புள்ளைக்கு ஒண்ணு இல்லையே!’ன்னு எங்கம்மா அழுது, சரிதாம்ன்னு நாமளும்
டவுன்ல ஒரு ப்ளாட்ட வாங்கிப் போட்டுப்புடுவோம்ன்னு திருவாரூரு டவுனு சுத்தியுள்ள எடமெல்லாம்
அலைஞ்சு, வயக்காட்டுல போட்டு வெச்சுருக்கிற ப்ளாட்டப் பாத்து மனசு குத்தலாயி ப்ளாட்டும்
வாணாம் ஒண்ணும் வாணாம்ன்னு திரும்புனேம். அத்தோட அவுங்க சொன்ன விலைக்கு எங்கிட்டெ காசு
பணமும் இல்ல அப்போ. கடனுக்கு வாங்குறதுல இஷ்டமும் இல்ல.
கிட்டதட்ட பதினாலு வருஷம் கொஞ்சம் கொஞ்சமா காசு சேத்த பின்னாடித்தாம்
டவுன்ல ஒரு ப்ளாட்ட வாங்குறாப்புல காசு எங் கையில சேந்துச்சு. அந்தக் காசை வெச்சு டவுன்ல
ப்ளாட்ட வாங்காம எங் கிராமத்துல விவசாய நெலத்தைத்தாம் வாங்குனேம். ஊருல இவ்வேம் யாருடா
கையில இருக்கு காசுக்கு தங்கத்தெ வாங்காம துரு பிடிக்க போற இரும்ப வாங்குற கொசக்கெட்ட
பயலா இருப்பாம் போலருக்குன்னு அப்போ ஒரு பேச்சு.
வாங்குன நெலத்துல ரசாயனம் இல்லாம விவசாயம் பண்ணணும்ன்னு ஒரு
விருப்பம். அப்படி ரசாயனம் இல்லாம பண்ணுற விவசாயத்துல நாம்ம மட்டும் சாப்புடாம நம்மாள
முடிஞ்சதுன்னு ஒரு ரண்டு பேருக்காவது கொடுக்கணும்ங்றது, (அதாச்சிக் காசுக்குத்தாம்)
இன்னொரு விருப்பம். அப்படியே செய்யவும் முடிஞ்சது. நாளாவ நாளாவ ரெண்டு பேருக்குக் கொடுக்குறதெ
மூணு பேரா ஆக்கணும், மூணு பேருக்குக் கொடுக்குறதெ நாலு பேரா ஆக்கணும்ன்னு நெனைச்சப்போ
மூணாவதா ஓர் ஆளு ரொம்ப ஆர்வமா அதாச்சி நம்ம நெலத்துல இயற்கையா வெளையுற நெல்லுலேந்து
கிடைக்குற அரிசிய வாங்கிக்கிறதா சொல்லிட்டாரு. இப்படி ஆளுங்க நல்ல விசயத்துக்காகச்
சேர்றப்போ வர்ற சந்தோஷமே தனித்தாம்.
சரித்தாம்ன்னு நாமளும் சந்தோஷமா நெல்ல அவிச்சு அரிசியாக்கிக்
கொண்டு போயும் கொடுத்தாச்சு. ஒண்ணரை மாசம் கழிச்சு இனுமே தயவு பண்ணி அரிசியக் கொண்டாராதீங்கன்னு
அவுங்ககிட்டேயிருந்து போன் வந்தப்போ கொஞ்சம் அதிந்துத்தாம் போனேம். நாம்ம ஏதோ தப்புப்
பண்ணிட்டோம்ன்னு நெனைச்சு விழுந்தடிச்சு அவுக வீட்டுக்குப் போனா, “புள்ளீயோ இந்தச்
சோத்தைத் திங்க மாட்டேங்கேது, எங்களுக்குத் தனியாவும், புள்ளீயோளுக்குத் தனியாவும்
சோத்தை ஆக்கி மாளா மாட்டேங்குது, நீங்க கொண்டாந்த அரிசி அப்பிடியே இருக்குது”ன்னு சொன்னாங்க
பாருங்க. நமக்கு மனசு பக்குன்னுப் போயிடுச்சு.
“அட பாவிப் பயலே! இப்படி ஒரு நெல்லை வெளைவிச்சு ஒரு குடும்பத்தைச்
சாப்புட முடியாத அரிசிய கொண்டு போயிக் கொடுத்து அக்கிரமம் பண்ணிருக்கீயே!”ன்னு என்னைய
நானே மனசுக்குள்ள திட்டிக்கிட்டு, அவுககிட்டே வாங்குன காசைக் கொடுத்துட்டு அரிசிய தூக்கியாந்துட்டேம்.
இதுல ஒரு விசயம் இருக்குது. இயற்கையான முறையில விளைவுக்குற அரிசிய
தீட்ட மனசு வராது. அது பாக்குறதுக்கு பளபளன்னு வெள்ளையால்லாம் இருக்காது. செம்பழுப்பு
நெறமாத்தாம் இருக்கும். சோறாக்குனாலும் அதுல லேசா சொரசொரப்பு இருக்குது. இதெ தவித்த்தாதாம்
அதெ குழந்தைங்க விரும்பிச் சாப்புடும். அதெ மாத்தணும்ன்னு நெனைச்சு இயற்கையிலேந்து
விலகிக் போறதெ விட இதெ ஏத்துக்கிட்டுச் சாப்புடுறதே நல்லதுங்ற முடிவுக்கு வந்துட்டதால
ரெண்டே மூணாக்குற, மூண நாலாக்குற முயற்சிய அத்தோட விட்டுட்டேம். நாம்ம இயற்கையா விளைவிச்சதெ
நாமளே அவிச்சி நாமளே அரிசியாக்கிக் கொடுத்தாத்தாம் நல்லா இருக்கும்ன்னு நெனைச்சு இப்படித்தாம்
செய்ய தோணுது. வருங்காலத்துல வேற யோசனைக தோணலாம். அது தோணுறப்போ தோணட்டும்ன்னு இப்போ
இருக்குற நெலைக்கு நம்ம வீட்டோட சேத்து இதெ விரும்புற ரெண்டு பேரு வீடுன்னு மூணு பேரு
வீட்டுக்கு ஏத்த அளவுல ரசாயனம் இல்லாம விவசாயம் பண்ண முடியுது.
இயற்கையா விளையுற நெல்லுக்கும் ரசாயனக் கலப்போடு வளந்து ரசாயனம்
சேர்த்து அரிசியாவுற நெல்லுக்கும் சாப்புடுறப்போ நெறைய வித்தியாசங்கள நீங்க உணர முடியும்.
ஒரு ஒப்புமைக்குச் சொல்லணும்ன்னா பிராய்லர் கோழிக் கறிக்கும் நாட்டுக் கோழிக் கறிக்கும்
உள்ள வித்தியாம்ன்னு கூட அதெ சொல்லலாம். பிராய்லர் கோழிக்கறி ரொம்ப மென்மையா இருக்கும்.
நாட்டுக் கோழிக்கறியில அதெ நீங்க எதிர்பார்க்க முடியாது. பிராய்லர் கோழிக் கறியையே
சாப்புட்டுப் பழகுனவங்ககிட்டெ, அதைச் சாப்புட விரும்புறவங்ககிட்டெ நாட்டுக்கோழிக்கறிய
சாப்புடுங்கன்னு நாம்ம வற்புறுத்த முடியாது. இது மாதிரியான விசயங்கள்ல அவுங்களா விரும்பி
வந்தாத்தாம் நல்லா இருக்கும்.
ஒருத்தரு என்னத்தெ சாப்புடணும், என்னத்தெ உடுத்தணும், எப்படி
இருக்கணுங்றதுல பிறத்தியாரோட வற்புறுத்தல்கள் அதிகமா இருக்குறது நல்லதில்ல. ஏன்னா இதுல
தனிமனிதரோட சுதந்திரம்ங்ற ஒரு விசயம் இருக்கு. அவுங்களுக்கான தேர்ந்தெடுக்குற சுதந்திரமும்
இருக்கு.
ஒரு ஆளு நெனைச்சால்லாம் உலகத்தை மாத்துறது ரொம்ப சிரமம். அதுல்லாம்
சினிமாவுல நடக்குற சங்கதி. ஒவ்வொருத்தரும் நெனைக்குறப்பத்தாம் உலகம் மாறும். அப்படி
மாறுற மாத்தம்ங்றதுதாம் நெலையாவும் நெலைச்சிருக்கும். இதெ நான் எழுத ஆரம்பிச்சதுக்கு
இது ஒரு காரணம். இதுல நான் சொல்றதுதாம் எல்லாமும் சரியா இருக்கும்ன்னும் சொல்ல வரல.
இதுல மாத்துக் கருத்தும் இருக்கலாம். இருந்தாலும் இதெ உரையாடலுக்கான களமா கொண்டு வரணும்ங்றது
என்னோட விருப்பம். உங்களோட கருத்துகளையும் இதுல பதிவு பண்ணணும்ன்னு கேட்டுக்கிறேன்.
இது இத்தோட முடிஞ்சுப் போற விசயமில்ல. தொடர் விவாதத்துக்கான விசயம். தொடர்ந்து இதெப்
பத்தி பேசுவோம், உரையாடுவோம். இப்போதைக்குச் சின்னதா ஒரு கமா போட்டு இத்தோட இந்த அளவோடு
நிறைவு பண்ணிக்குவோம். நீங்க சொல்ற கருத்துக்கேற்ப தொடர்ந்துக்குவோம்.
*****
No comments:
Post a Comment