30 Jun 2025

மனதைக் கையாளும் முறைகள்!

மனதைக் கையாளும் முறைகள்!

மனதின் பிரச்சனைகள் என்பன இதை இப்படிச் செய்ய வேண்டும், அதை அப்படிச் செய்ய வேண்டும், இதை இவ்வண்ணம் மாற்ற வேண்டும், அதை அவ்வண்ணம் மாற்ற வேண்டும், இது எனக்குப் பிடிக்கும், இது எனக்குப் பிடிக்காது என்பன போன்ற ஆசைகளாலும், பிடிவாதங்களாலும், எதிர்பார்ப்புகளாலும் ஓயாது அலைவுறுத்துவதால் ஏற்படுவன.

இயன்றவரை இன்று செய்தாகி விட்டது, இனி நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டால் உங்கள் மனதால் உங்களை அலைவுறச் செய்ய முடியாது.

ஓர் அளவிற்கு மேல் எதையும் செய்ய வேண்டாம், ஓர் எல்லைக்கு மேல் எதையும் மாற்ற வேண்டாம் என்று நீங்கள் நினைத்து விட்டால், உங்கள் மனதில் எந்தப் பிரச்சனைகளும் இருக்காது.

மனதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய ஓர் உண்மை என்னவென்றால், மனம் என்பது அது பாட்டுக்கு எதுவும் செய்யாமல் இருக்க பிறந்த வஸ்து. அதைப் போட்டு அது அப்படியாக்கும், இது இப்படியாக்கும் என்று நாம் இயக்க ஆரம்பித்தால், ஆரம்பத்தில் மனம் பலவிதமாக யோசிப்பது சுவாரசியமாக இருந்தாலும், முடிவில் அது நம்மைப் போட்டு வதைக்க ஆரம்பித்து விடும்.

மனதைப் பொருத்த மட்டில் நாம் பாட்டுக்கு எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தால் அது பாட்டுக்கு அடங்கி விடும். இது மனதுக்கானது, செயலுக்கானது அல்ல.

மனதின் பிரச்சனைகளோடு ஒப்பிட்டால், மனதைக் கையாளத் தெரியாமல் ஒருவர் அனுபவிக்கும் சித்திரவதைகளை விட உலகில் வேறெதும் பெரிய அராஜகமோ, வன்முறையோ கிடையாது. உண்மையில் மனதின் பிரச்சனைகளானது அராஜகங்கள், வன்முறைகளை விட கொடுமையானவை, அதி பயங்கரமானவை.

மனதைக் கையாளும் போது நாம் சில வழக்கங்களைக் கையாளலாம். மனம் என்னதான் கொந்தளித்தாலும் கொந்தளிக்காமல் இருந்து விடுவது நல்லது. மனம் என்னதான் கோபப்பட்டாலும் கோபப்படாமல் இருந்து விடுவது நல்லது. மனம் என்னதான் வேகப்பட்டாலும் வேகப்படாமல் இருப்பது நல்லது. மனம் என்னதான் உணர்ச்சிவசப்பட்டாலும் உணர்ச்சிவசப்படாமல் இருந்து விடுவது நல்லது. மனதைப் பொருத்த வரையில் எல்லாம் அந்த கொஞ்ச நேரத்துக்குத்தான். அதற்குப் பிறகு அதன் சுவடு தெரியாமல் இருக்கும் மனது.

மனதின் பொது இயல்பு என்னவென்றால், அதற்கு எதையாவது போட்டு உருட்டிக் கொண்டிருக்க வேண்டும். அதன் உருட்டல்களுக்கு மனதைக் கொண்டிருக்கும் மனிதரே இரையாகி விடக் கூடாது.

நீங்கள் பாட்டுக்கு இருந்தால் மனம் அது பாட்டுக்கு அமைதியாகி விடும். அவ்வளவுதான் மனம். மனம் பலவிதமாக இயங்கும் போது நீங்கள் யோசிக்காமல் இருக்க வேண்டும். அதெப்படி முடியும்? சரிதான் போ என்று அடங்கிக் கொள்ள வேண்டும் அல்லது போனால் போகட்டும் போ எனத் தைரியமாக இருந்து விட வேண்டும் அல்லது அவ்வளவுதான் இதற்கு மேலேல்லாம் நம்மால் முடியாது எனத் தீர்க்கமாக ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.

மனதிற்கான விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருந்தால், சொல்லிக் கொண்டே இருக்கலாம். அதற்கு ஒரு முடிவில்லை. நிறுத்தி விட்டால் அவ்வளவுதான். ஒன்றுமே இல்லை. ஏனென்றால் மனம் என்பது ஒன்றுமே இல்லாத ஒன்றுதான். அதற்கான உரு, வடிவம், கற்பனை எல்லாம் நாம் கொடுப்பதுதான். நாம் கொடுக்கவில்லை என்றால் அங்கே ஒன்றும் இல்லை. விசயம் அவ்வளவுதான்.

*****

No comments:

Post a Comment