நினைவில்
சுழலும் வாழ்க்கை!
முடியாது
என்பது பொய்
முடியும்
என்பதும் பொய்
சமயங்களும்
சந்தர்ப்பங்களும்
வாய்ப்புகளும்
வளங்களும்
மனங்களும்
மார்க்கங்களும் சேர்ந்தால்
எல்லாம்
முடியும்
சமயங்களைக்
கெடுப்பவர்கள் இருக்கிறார்கள்
சந்தர்ப்பங்களை
அழிப்பவர்கள் இருக்கிறார்கள்
வாய்ப்புகளை
வர விடாமல் செய்பவர்கள் இருக்கிறார்கள்
வளங்களைக்
கிட்ட விடாமல் செய்பவர்கள் இருக்கிறார்கள்
மனங்களை
இணைய விடாதவர்கள் இருக்கிறார்கள்
மார்க்கங்களை
வழி மறிப்பவர்கள் இருக்கிறார்கள்
நினைப்பைச்
சுற்றிச் சுழல்கிறது வாழ்க்கை
அவர்கள்
என்ன நினைப்பார்களோ
இவர்கள்
என்ன நினைப்பார்களோ
யார்
யார் என்னென்ன நினைப்பார்களோ
எவர்
எவர் எப்படி நினைப்பார்களோ
நினைத்து
நினைத்தே பாழாகிறது வாழ்க்கை
ஒவ்வொருவரும்
ஒவ்வொரு மாதிரியாக
நினைத்து
விட்டால்
ஒவ்வொரு
மாதிரியாக ஆகி விடுமோ வாழ்க்கை
உண்மையைப்
பட்டவர்த்தனமாகப்
போட்டு
உடைக்கும் போது
மனம்
சிதறு தேங்காயாகிறது
பொய்யாக
வாழ்வதை விட
சிரமமோ
உண்மையாக வாழ்வது
வாழவும்
முடியாமல்
வாழாமல்
இருக்கவும் முடியாமல்
கட்டுமானங்களில்
கழிகின்றன பொழுதுகள்
*****

No comments:
Post a Comment