10 Apr 2025

மும்மொழிக் கொள்கை – தேவையில்லாத ஆணி!

மும்மொழிக் கொள்கை – தேவையில்லாத ஆணி!

இருமொழிக் கொள்கையே தேவையில்லாத ஆணி எனும் போது மும்மொழிக் கொள்கை குறித்து என்ன சொல்வது?

தாய்மொழி வழிக் கல்வியே ஆழமான அறிவு வளர்ச்சிக்கான ஆணி வேர்.

நல்ல வேளையாக தமிழகம் இரு மொழிக் கொள்கையோடு நின்று கொண்டது. மும்மொழிக் கொள்கையை முன்னெடுக்காமல் போனது நல்லதாகப் போய் விட்டது. மும்மொழிக் கொள்கையை முன்னெடுத்த ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் தங்கள் தாய்மொழியான ராஜஸ்தானி மற்றும் மராத்தியை இழந்து தவிக்கின்றன. கர்நாடகாவின் நிலையும் ஏறக்குறைய இதுதான்.

எப்போதும் தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் இருந்திருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு அதன் வரலாறு இருக்கிறது. ஆங்கிலத்திற்கு முன்பாக தமிழும் சமஸ்கிருதமும் இருந்திருக்கின்றன என்பதற்குத் தமிழில் இருந்த மணிப்பிரவாள நடையே சான்றாகும்.

ஆங்கிலேய ஆட்சிக்குப் பின்பு தமிழும் ஆங்கிலமும் ஆகிய இரு மொழிகளைத் தமிழகம் ஏற்றிருக்கிறது. ஆனால் அப்படி இல்லாமல் தமிழ் வழிக் கல்வியே இங்கு நிலைபெற்றிருந்தால் தமிழர்களின் அறிவு வளர்ச்சி இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதற்கு வளர்ந்த நாடுகளே சான்றாகும்.

வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் தாய்மொழி வழிக் கல்வியே, அதாவது ஒருமொழிக் கொள்கையே கல்வித்திட்டத்தில் உள்ளது. விருப்பம் அல்லது ஆர்வத்தின் அடிப்படையிலேயே அவர்கள் இன்னொரு மொழியைக் கற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்தில் இருப்பது போலக் கட்டாயத்தால் இன்னொரு மொழியாக ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்வதைப் போல அவர்கள் கற்றுக் கொள்வதில்லை.

நிலைமை இப்படியிருக்க, ஏன் இந்த மும்மொழித் திணிப்பு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அதற்கு இரண்டு காரணிகள் இருக்கின்றன.

ஒன்று இந்திய அரசியலமைப்பு. அது இந்தியைத் தேசிய மொழியாக அங்கீகரிக்கிறது.

மற்றொன்று கல்விக்குழுக்கள். 1948 பல்கலைக்கழக கல்விக் குழு தொடங்கி, 1968 கோத்தாரிக் குழு, 1986 புதிய கல்விக் கொள்கையில் தொடர்ந்து தற்போதைய தேசிய கல்விக் கொள்கை வரை மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துவதாகவும் திணிப்பதாகவும் உள்ளன.

மும்மொழித் திணிப்புக்கு எதிராகக் காட்டமாக எதிர்வினையாற்றியதன் காரணமாகவே தமிழகம் இந்தித் திணிப்பிலிருந்து தப்பித்தது. ஆனால் அதற்காகத் தமிழகம் கொடுத்த விலை கொஞ்சநஞ்சமல்ல. தாளமுத்து, நடராசன் ஆகிய இரு உயிர்களைப் பலியாகக் கொடுத்தும், எண்ணற்ற தமிழர்களின் சிறைவாசங்களையும் போராட்டங்களையும் விலையாகக் கொடுத்துதான் இந்தித் திணிப்பைத் தமிழகம் தடுத்துள்ளது என்பது வரலாறு.

மூன்றாவது மொழி தேவையில்லை என்பதற்கு முன்னெப்போதை விடவும் இந்தத் தகவல் தொழில்நுட்ப மற்றும் செயற்கை நுண்ணறிவு யுகத்தில் வலுவான காரணங்களும் இருக்கின்றன.

தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இக்காலத்தில் மொழி என்பது பிரச்சனையே இல்லாமல் ஆகி விட்டது. கூகுளிடம் கொடுத்தால் அடுத்த நொடியே உங்கள் மொழிக்குத் தேவையான மொழியிலிருந்து மொழி மாற்றித் தருகிறது. ஆகவே நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியது அத்தகைய அறிவைத்தானே தவிர, மூன்றாவது மொழியறிவை அல்ல. கற்க வேண்டிய பகுத்தறிவைத்தானே தவிர மொழித் திணிப்பை அல்ல.

இன்றைய செயற்கை நுண்ணறிவு யுகத்தில் தாய்மொழியைத் தவிர இன்னொரு மொழியைக் கற்றுக் கொள்வது கூட அநாவசியம்தான்.

இன்றைய கல்வித் திட்டத்தை நோக்கும் போது மூன்றாவது மொழி என்பது தேவையில்லாத அநாவசியம் என்பதும் புரிய வரும். அதற்கான காரணம் என்பது கூடுதல் பாடச் சுமைதான்.

இன்றைய கல்வித் திட்டம் கூடுதல் சுமையை ஆசிரியர்களின் மேலும் குழந்தைகள் மேலும் அறிவுத்திணிப்பு என்கிற பெயரில் திணித்துக் கொண்டிருக்கின்றன. குழந்தைகளின் மன வயது, உடல் வயதோடு ஒப்பிடும் போது இன்றைய பாடங்கள் அதைக் கடந்த அபரிமித நிலையில் இருக்கின்றன. இதில் மூன்றாவது மொழி என்பது தேவையற்ற அநாவசிய திணிப்பு என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை.

கல்வி நிலைகளில் மேனிலை வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு மொழிப்பாடம் என்பதே இரண்டாம் பட்ச பாடமாகி விடுவதையும் நான் கவனிக்க வேண்டும்.

அத்துடன் மூன்று மொழிகளை மோசமாகக் கற்பிப்பதை விடவும் மற்றும் கற்பதை விடவும் இரண்டு மொழிகளை நன்றாகக் கற்பிக்கவும் மற்றும் கற்கவும் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யலாம். அதை விடவும் இரண்டு மொழிகளைச் சுமாராகக் கற்பிக்கவும் மற்றும் கற்கவும் செய்வதை விடவும் ஒரு மொழியை அதுவும் தாய்மொழியை உருப்படியாகக் கற்பிக்கவும் மற்றும் கற்கவுமான ஏற்பாடுகளைச் செய்யலாம். அது இன்னும் சிறப்பானது.

இந்தி தெரிந்தால்தான் இந்தியாவில் பிழைக்க முடியும் என்ற வாதத்தை முன் வைத்து இந்தித் திணிப்பு என்பது நியாயம் செய்யப்படுகிறது. இதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழர்கள் இந்தியாவைத் தாண்டி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சைனா என்று வியாபித்து பல தசாப்தங்கள் ஆகி விட்டன.

ஒருவேளை இந்தி தெரிந்தால்தான் பிழைக்க முடியும் என்றால் தமிழ்நாட்டிற்குப் பிழைக்க வரும் இந்திக்காரர்கள் பற்றி என்ன சொல்வது? இந்தித் தெரிந்தவர்கள் பிழைக்க வாய்ப்பு இல்லாத நிலைதான் இந்தியாவில் இருக்கிறது என்று இதைக் கொள்வதா?

உலகின் சிறந்த கல்வியை வழங்குவதாகச் சொல்லப்படும் பின்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருமொழிக் கல்விக் கொள்கையே வழக்கில் உள்ளன.

இந்திய அரசு ஒட்டுமொத்தமாகத் தரும் புள்ளி விவரங்களிலும் தமிழகமே சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்திலும் முன்னணியில் இருக்கின்றது.

மும்மொழிக் கொள்கையால் குழந்தைகளிடம் ஏற்படும் முக்கியப் பிரச்சனைகளையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மூன்று மொழிகளைக் கற்கும் குழந்தைகளிடம் உச்சரிப்புத் தடுமாற்றம், இலக்கணக் குழப்பம், வார்த்தைகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்துதல் போன்ற கற்றல் மற்றும் உளவியல் குறைபாடுகள் இருப்பதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

பெரும்பாலான கற்போர் மூன்று மொழிகளிலும் திறமை பெறுவது என்பது அரிதானது மட்டுமல்லாமல் அப்படி திறன் பெற நினைப்பது மூன்று மொழியறிவையும் பலவீனமாக்கியும் விடும்.

இரு மொழிக்கே அப்படி ஒரு நிலைமைதான் என்பதையும் மறுக்க முடியாது. இருமொழி கற்கும் குழந்தைகளே இரண்டு மொழிச் சொற்களையும் கலவையாகப் மாற்றி மாற்றி பயன்படுத்தும் போது மூன்று மொழி என்பது மோசமான மொழிச் சிதைவை உண்டாக்கி விடும்.

வேலை வாய்ப்பு சந்தையை எடுத்துக் கொண்டாலும் மூன்றாவது மொழியை அறிவதால் உருப்படியான பயன்கள் எதுவும் இல்லை. அதாவது ஆங்கிலத்திற்கு இருக்கும் வேலைவாய்ப்பு மதிப்பு இந்திக்கு இல்லை.

இந்தியாவில் வாழும் பல்வேறு மக்களின் இடம் பெயர்வு குறித்த ஓர் ஆய்வறிக்கை சொல்லும் விவரமும் இவ்விடத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. அவ்விவரம் என்ன சொல்கிறது என்றால் 90 சதவீதத்திற்கு மேற்பட்ட இந்திய மக்கள் தங்கள் சொந்த மாநிலத்தை விட்டு அடுத்த மாநிலத்திற்குக் கூட இடம் பெயர்வதில்லை என்கிறது. அவர்கள் தேவையில்லாமல் இந்தியைக் கற்றுக் கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்?

மொத்தத்தில் பார்த்தாலும் இந்தியாவில் இந்தி பேசுவார் 50 சதவீதத்திற்கு மேல் கிடையாது. மத்திய அரசின் புள்ளி விவரப்படி அது 43.65 சதவீதமே. அதுவும் அது மத்திய அரசு சொல்லும் இந்தியோடு ஒப்பிட்டால் அது வெறும் 25 சதவீதமே. ஏனென்றால் போஜ்பூரியினரின் இந்தியைப் பீகாரிகளின் இந்தியால் புரிந்து கொள்ள முடியாது என்பதை அதற்குக் காரணமாகச் சொல்கிறார்கள்.

ஆகவே எப்படிப் பார்த்தாலும் மூன்றாவது மொழித் திணிப்பு என்பது தேவையற்ற ஆணியே. தேவையில்லாமல் ஓர் ஆணியை அறைவது சித்திரவதையில் இன்பம் காண்போருக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம். அது சிலுவையைச் சுமக்கும் இயேசுகளுக்கு நிகழ்த்தப்படும் வன்முறை என்பதில் யாருக்கு என்ன மாற்றுக் கருத்து இருக்க முடியும்?

*****

No comments:

Post a Comment

கருவிகளும் தொழில்நுட்பங்களும் நம் நேரத்தை மிச்சப்படுத்தி இருக்கின்றனவா?

கருவிகளும் தொழில்நுட்பங்களும் நம் நேரத்தை மிச்சப்படுத்தி இருக்கின்றனவா? நம்முடைய நேரத்தை மிச்சப்படுத்தும் என்று சொன்ன கருவிகளும் தொழில்நுட...