13 Apr 2025

Another Spoof From The Famous Actor Of Tamil

அஜித் குமாரின் ‘நல்லது கெட்டது அசிங்கம்’

நல்லது கெட்டது அசிங்கம் (Good Bad Ugly) – இப்படி ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து நடித்ததற்கே பாராட்டிற்குரியவர் அஜித். அவரால்தான் இப்படிப்பட்ட தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க முடியும். மங்காத்தா போன்ற தலைப்புகளும் சாதாரணப்பட்டதல்ல.

படத்தைப் பார்க்க பார்க்க தெலுங்குப் படத்திற்கு வந்து விட்டோமா என்று ஒரு நினைப்பு. தெலுங்கு ரசிர்களுக்கும் ஏற்றாற்போல இப்படம் எடுக்கப்பட்டிருப்பது அஜித்திற்குத் தெலுங்கு ரசிகர்களையும் பெற்றுத் தரும் என்பது உறுதி.

தமிழ்த் திரையுலகில் புது புது புதுமைகளைப் புகுத்துவதில் இயக்குநர் ஷங்கருக்கு நிகர் அவரே. சாலைகள், மலைகள் என்று வண்ணம் தீட்டி அவர் காட்டிய பிரமாண்டம் தமிழ்த் திரையுலகின் போக்கையே மாற்றியது. கருப்பு வெள்ளையாக இருந்த தமிழ்த் திரைப்படங்களை வண்ண மயமாக மாற்றியவர் அவரே.

இந்தியன் – 2 படம் எடுத்துத் தமிழ்த் திரையுலகில் ஸ்பூப் படத்திற்கான புதுப்பாதையையும் திறந்து விட்டவரும் ஷங்கரே. அதற்கு முன்பு தமிழ்ப்படம் – 1 மற்றும் 2 ஆகிய ஸ்பூப் படங்கள் வந்திருந்தாலும் ஷங்கர் உருவாக்கிய ஸ்பூப் புது திறப்பு.

ஷங்கரின் இந்தியன் – 2 விற்குச் சவால் விடும் வகையில் அஜித் குமாரின் ‘நல்லது கெட்டது அசிங்கம்’ ஸ்பூப்பை உருவாக்கியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். படத்தின் துவக்கத்தில் துவங்கும் சிரிப்பு இறுதி வரை நீடிக்கிறது.

வில்லன்கள் சிரிக்காமல் இருந்து ஸ்பூப்பின் தன்மை கெட்டு விடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு சிரிப்பு வாயு (நைட்ரஸ் ஆக்ஸைடு) செலுத்தப்பட்டு சிரிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது வேதியியல் அறிவைப் பயன்படுத்தும் இயக்குநரின் நுட்பமான சித்தரிப்புக்கு நல்ல சான்று.

தமிழ்ப்படம் சிவாவிற்கே கடினம் (டஃப்) கொடுக்கும் வகையில் அஜித் இத்திரைப்படத்தில் நன்கு வேலை வாங்கப்பட்டிருக்கிறார். தன்னுடைய பழைய நாயகிகளான திரிஷா மற்றும் சிம்ரனுக்கு மறக்காமல் வாய்ப்பு வழங்கியிருக்கிறார்.

‘தமிழ்ப்படம்’ என்ற ஸ்பூப்பின் வாடை வந்து விடக் கூடாது என்பதற்காகப் படம் மும்பையில் தொடங்கி ஸ்பெயினில் நடைபெறுவது நல்லதொரு திரைக்கதை உத்தி.

படத்தில் வில்லன் அர்ச்சுன் தாஸ் நடனத்தில் தன்னுடைய சிறப்பான திறமையை வெளிப்படுத்துகிறார். அஜித்தின் துப்பாக்கிச் சுடுதலும் நன்று. ஏகே 47 என்கிற துப்பாக்கியின் முன்னொட்டையே திரைப்படத்தில் அவருக்கான பெயராக வைக்கப்பட்டிருப்பது அதற்கு நல்லதொரு சான்று. அத்துடன் அவருடைய பெயர்ச் சுருக்கமும் ஒன்றிப் போவது எதேச்சையான ஒன்றாக நிச்சயம் இருக்க முடியாது.

அண்மையில் டிராகன் என்ற படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதே போன்ற வெற்றியைத் தக்க வைக்கும் வகையில் அஜித்திற்கு ரெட் டிராகன் என்ற பெயரும் வைக்கப்பட்டிருப்பது சமயோசிதம்.

விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து ‘நல்லது கெட்டது அசிங்கம்’ படத்திலும் அஜித்குமார் குடும்பத்திற்காகச் செய்யும் தியாகம் மெய் சிலிர்க்க வைக்கிறது. அவர் மேலும் மேலும் பல தியாகங்களைச் செய்து குடும்பத்தை மேலும் மேலும் உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நமக்கு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இதுவே அடுத்த படத்திலும் அவர் குடும்பத்திற்காக எத்தகைய தியாகத்தைச் செய்யப் போகிறார் என்பதை எதிர்பார்த்து காத்திருக்க ஏங்க வைக்கிறது.

புரட்சித் தலைவர் என்கிற பட்டம் போல அவருக்குக் குடும்பத் தலைவர் என்ற பட்டம் வழங்கப்படுவது காலத்தின் கட்டாயம். புரட்சி கேங்ஸ்டர் என்ற பட்டம் வழங்கப்படுவதும் அவசியமே.

*****

No comments:

Post a Comment

நோயும் வாழ்க்கையும்

நோயும் வாழ்க்கையும் நோயோடு மனிதன் வாழ முடியாது. அதற்காக நோயைப் போக்குகிற முயற்சியில் தலைவலி போய் திருகுவலி வந்து விடக் கூடாது. இன்றைய சூ...