மனிதருக்கும் செயலுக்கும் இருவேறு அணுகுமுறைகள்!
மனிதர்களை
எப்படி அணுக வேண்டும்?
செயலை
எப்படி அணுக வேண்டும்?
இரண்டுக்குமான
அணுகுமுறைகள் ஒன்றா என்றால் இல்லை. இரண்டுக்குமான அணுகுமுறைகள் வேறு வேறானவை.
ஒரு
மனிதரை அணுகும் போது அவரது நல்லனவற்றை முதலில் கருத்தில் கொண்டு, தீயனவற்றை அடுத்து
கருத்தில் கொள்ள வேண்டும்.
செயலை
அணுகும் போது அது அப்படியே நேர்மாறாக அமையும். செயலை அணுகும் போது அதனால் விளையும்
தீயனவற்றை முதலில் கருத்தில் கொண்டு, அதனைத் தொடர்ந்துதான் அதனால் விளையும் நல்லனவற்றை
கருத்தில் கொள்ள வேண்டும்.
இவை
இரண்டும் மாறுபட்ட அணுகுமுறைகள்தான் என்றாலும் இப்படித்தான் அணுக வேண்டும்.
மனிதரை
அணுகும் போது முதலில் அவரிடம் இருக்கும் தீயனவற்றைக் கருத்தில் கொண்டால், அவரிடம் எவ்வளவு
பெரிய நல்லன இருந்தாலும் அதைக் கருத்தில் கொள்ளவே மாட்டோம்.
அது
எப்படி என்றால் First impression best impression மாதிரி அமைந்து விடும். அதனால் மனிதர்களைப்
பொருத்த வரையில் முதலில் நல்லனவற்றைக் கருத்தில் கொண்டுதான் அடுத்து அவரிடம் இருக்கும்
தீயனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
செயலைப்
பொருத்த வரையில் முதலில் அதனால் விளையும் தீயனவற்றைத்தான் கருத்தில் கொள்ள வேண்டும்.
அப்படிச் செய்தால் தீயன நேரும் செயல் ஒன்றை மேற்கொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம்
தோன்றாது. அதனால் எவ்வளவு நல்லன இருந்தாலும் அதை ஏன் செய்ய வேண்டும் என்று தோன்றும்.
இதனால் மனித குலத்துக்கு ஒரு சிறு தீயன இல்லாத செயலை மட்டுமே செய்ய வேண்டும் என்பது
உறுதிப்பட்டு நல்லன மட்டுமே கொண்ட செயல்களைச் செய்ய வாய்ப்பு உண்டாகும் அல்லவா!
திருவள்ளுவரும்
இதைத்தான் சொல்கிறார். அவர் மனிதர்களை எப்படி அணுகச் சொல்கிறார் என்றால்,
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளல் (குறள், 504)
என்கிறார்.
அதுவே
செயல் என்று வரும் போது,
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல் (குறள், 461)
என்கிறார்.
மனிதர்களை
அணுகும் போது முதலில் குணத்தைப் பாருங்கள். பிறகு குற்றத்தைப் பாருங்கள் என்கிறார்.
அதுவே,
செயலை அணுகும் போது முதலில் அதனால் ஏற்படும் அழிவைக் கருத்தில் கொள்ளுங்கள், அதைத்
தொடர்ந்தே ஆவதைக் கருத்தில் கொள்ளுங்கள் என்கிறார்.
நாமும்
நம் வாழ்க்கையில் இந்த அணுகுமுறையைக் கடைபிடிக்கலாம்தானே!
*****
No comments:
Post a Comment