9 Mar 2025

முயல் – ஆமை எனும் முயலாமைக் கதை!

முயல் – ஆமை எனும் முயலாமைக் கதை!

அது ஒரு முயல். பொசு பொசுவென வெள்ளை முடிகள் கொண்ட முயல். எல்லா முயல்களுடனும் போட்டி போடும் முயல். இந்த முயல் போட்டி போட்ட எல்லா முயல்களுடனும் தோல்வி கண்டதால், இனி தான் போட்டியிட்டால் வெற்றி பெறும் ஒரு ஜீவனுடன்தான் போட்டி போட வேண்டும் என்று முடிவு கட்டிக் கொண்டது.

நத்தையைப் பார்த்தது. ஆமையைப் பார்த்தது. ஏற்கனவே அது ஆமையுடன் போட்டிப் போட்டு, பாதி வழியில் உறங்கிப் போன வரலாற்றின் கொடுஞ்சம்பவம் மனதில் வந்து போனது. ஆகவே ஆமையோடு போட்டியிடுவதைக் கவனமாகத் தவிர்த்துக் கொண்டது. தான் போட்டி போட உகந்த ஆள் நத்தை என முடிவு செய்து கொண்டதும், அதனருகே சென்று அதனைப் போட்டிக்கு அழைத்தது.

நத்தைக்கு அது ஆமையுடன் போட்டியிட்டுத் தூங்கிய சரித்திரச் சம்பவம் நினைவில் இருந்ததால் சந்தோசமாகச் சம்மதித்தது.

நத்தையும் ஆமையும் போட்டியிடும் இப்போட்டி குறித்த விளம்பரங்களுக்கு நெட்பிளிக்சும், டிஸ்னி ஹாட் ஸ்டாரும் ஒத்துக் கொண்டன. 1960 ரோம் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வென்று, தற்போது இறந்து போன ஆர்மின் ஹாரி போட்டியைத் துப்பாக்கிச் சுட்டுத் துவங்கி வைக்க ஒத்துக் கொண்டார்.

உலக நாட்டின் அதிபர்கள் அனைவரும் போட்டியைக் காண வருவதாகவும் ஒத்துக் கொண்டனர். போட்டி நடைபெறும் நாளன்று வானில் விமானங்கள் பறக்கத் தடை. போட்டி நடக்கும் கவுதமாலா நாட்டில் ராக்கெட் ஏவத் தடை மற்றும் அன்றிலிருந்து ஒரு மாத காலத்திற்கு டிரோன்கள் இயக்க தடை என்று பலவித தடைகள் விதிக்கப்பட்டன.

போட்டியும் தொடங்கியது.

முயல் இந்த முறை தூங்காமல் ஓட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு சைக்ளோஸ்போரின் வகையறாக்களான ஆன்டி நார்கோலெப்டிக்ஸ் போன்ற தூக்கத்தைத் தடுக்கும் மாத்திரைகளை எடுத்துக் கொண்டது.

தூங்காமல் ஓடத் துவங்கிய முயலின் கவனம் முழுவதும் கண்கள் செருகாமல் இருப்பதைக் கவனிப்பதில் இருந்த்தால், நத்தை எப்படி ஓடி வருகிறது என்பதை அது கவனிக்கவில்லை.

போட்டியின் முடிவில் எந்த விதத் திருப்பமும் (டிவிஸ்ட்) இல்லாமல் நத்தையே ஜெயித்தது. எப்படி என்கிற ஆச்சரியம் உங்களுக்கு வந்திருக்கலாம்.

போட்டி துவங்கிய சிறிது நேரத்திற்குள் எல்லாம் அங்கே வந்த கவுதமாலா கூட்ஸ் ரயிலில் தட்கல் முறையில் பயணச்சீட்டு விண்ணப்பித்து உடனடியாக நத்தை ஏறிக் கொண்டது. அது நிர்ணயிக்கப்பட்ட 6 மணி 4 நிமிடம், 34 நோடிகளுக்கு முன்பாகே ½ மணி 2 நிமிடம் 23 நொடிகளுக்குள் இலக்கை அடைந்து புதிய உலக சாதனைப் படைத்தது.

முயலின் மற்றொரு தோல்வி சரித்திரத்தில் மீண்டும் படுமோசமாகப் பதிவானது.

இதனைத் தொடர்நது அடுத்தடுத்து நடந்து மூன்று போட்டிகளிலும் கூட முயல் தோல்வியைத் தழுவியது. அது எப்படி என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டாம் முறை ஜப்பானில் நடந்த போட்டியில் நத்தை புல்லட் ரயிலில் ஏறி வென்றது.

மூன்றாம் முறை இந்தியாவில் நடந்த போட்டியில் நத்தைக்கு முன்பு புத்திசாலித்தனமாக இந்திய ரயிலில் ஏற முயன்று வெற்றி பெற நினைத்த முயல், மகாகும்பமேளாவுக்குச் சென்ற இந்தியத் தொடர்வண்டியில் ஏறி, கூட்டத்தில் நசுங்கி மிதிப்பட்டு செத்த்தால் நத்தை வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இப்படியாக வரலாற்றில் முயல்கள் தோற்றுக் கொண்டிருக்கின்றன. முயலுக்கு எதிராகப் போட்டியிடும் உயிரினங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதன் அடுத்த அத்தியாயம், இறந்து போன முயலின் முயல் குட்டி மண்புழுவுடன் போட்டிப் போட்டு தோற்ற கதையாகும். அதை பிறகொரு நாளில் பார்ப்போம்.

*****

No comments:

Post a Comment

சகிக்க முடியாத நடனம்!

சகிக்க முடியாத நடனம்! தர்மசாஸ்தாசுலோச்சனாவைக் கேள்விபட்டிருக்கிறீர்களா? கேள்விப்படாமல் இருக்க வாய்ப்பில்லை. கலைகளின் தேவதை. பரதநாட்ட...