சகிக்க முடியாத நடனம்!
தர்மசாஸ்தாசுலோச்சனாவைக்
கேள்விபட்டிருக்கிறீர்களா?
கேள்விப்படாமல்
இருக்க வாய்ப்பில்லை.
கலைகளின்
தேவதை.
பரதநாட்டியம்,
குச்சிப்புடி, டப்பாங்குத்து வரை ஆடக்கூடிய நடன சாஸ்திரத்தின் ஒப்பில்லாத தாரகை. ஒரு
முறை ஆடவிட்டுப் பார்த்தால், உங்களூர் திருவிழாவின் கரகாட்டத்திற்கு அவசியம் முன்பணம்
(அட்வான்ஸ்) வைத்து விடுவீர்கள்.
நாமெல்லாம்
அவளின் ரசிகர்கள் என்பது நமக்கு மட்டுமல்ல, தர்மசாஸ்தாசுலோச்சனாவுக்கும் பெருமை தரக்
கூடிய ஒன்று.
நம்மைப்
போன்ற ரசிகர்களை விட வேறென்ன வேண்டும் அவளுக்கு?
சினிமாவில்
குத்துப்பாட்டுக்கு ஆடினால்தான் இன்னும் அதிக ரசிகர்கள் கிடைப்பார்கள் என்ற நினைப்பு
அவளுக்கு. அப்படியே ஆடி ஆடி பத்திமினி போல ஒரு தில்லானா மோகனாம்பாளுக்கு ஆடிட முடியும்
என்ற நம்பிக்கை.
உங்களில்
எத்தனைப் பேருக்குப் பத்மினியை நினைவிலிருக்கும்? அவள் தன் நம்பிக்கையைக் கொஞ்சம் மாற்றி
ஆர்யா, விஷால் போல ஆட வேண்டும் என்றாவது வைத்திருக்க வேண்டும்.
என்னவோ
ஆசையோ, இலக்கோ, கனவோ வந்து விட்டது.
சும்மா
இருக்க முடியுமா?
நமக்கெல்லாம்
அப்படித்தான் ஆசை வந்து, அதாவது அண்ணாமலை போல ஒரே பாட்டில் பணக்காரர் ஆவது, யூடியூப்
விளம்பரங்களைப் பார்த்து பார்த்து லட்சாதிபதியாவது, ஈமு கோழியில் முதலீடு செய்து கோடீஸ்வரராவது
என்று எத்தனை எத்தனை லட்சியங்களை வைத்திருக்கிறோம். சுலோ மட்டும் வைத்துக் கொள்ளக்
கூடாதா என்ன?
அது,
அதேதான், அதே அது, தர்மசாஸ்தாசுலோச்சனாவின் கனவென்றே சொல்லி விடுகிறேன். அடிக்கடி ஆசை,
இலக்கு என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்க எரிச்சலாக இருக்கிறது.
ஒரே
பாடலில், அதுவும் ‘நாக்க மூக்க’ என்று வந்ததே, அப்படி வந்து, தத்தித் தப்படித் தாண்டிப்
பிரபலமாகி விட வேண்டும் சுலோவுக்கு. பூமியின் மக்கள் தொகை 600 கோடிதான் என்றாலும்,
கூடுதலாக எப்படியாவது மக்களைப் பிள்ளைகளைப்
பெற வைத்து லட்சம் கோடி ரசிர்களைப் பெற்று விட வேண்டும் அவளுக்கு.
அந்த
கனவில் இருந்த தர்மசாஸ்தாசுலோச்சனாவுக்கு நடன ஒத்திகை (என்னவோ ஆடிசன் என்கிறார்களே)
என்று புலனத்தில் (வாஸ்ஆப்) ஓர் இணைப்பு வந்திருக்கிறது. உள்ளே போய் பார்த்த சுலோவுக்குத்
தலைகால் புரியவில்லை.
ஐந்து
லட்சம் செலுத்தினால் உடனடி ஒத்திகை, உடனடி வாய்ப்பு, உடனடி உலகப் புகழ், பிரபஞ்சப்
பிரபலம் என்றிருந்திருக்கிறது.
சுலோவுக்கு
மூளை வேலை செய்ததில், அடுத்த மாதம் அக்காவின் கல்யாணத்திற்கு வைத்திருந்த ஐந்து லட்சத்தை
லவட்டிக் கொண்டு வந்து வங்கிக் கணக்கில் போட்டு, அந்த இணைப்புக்குச் சென்று கட்டியிருக்கிறாள்.
கட்டி
விட்டு உடனே தொடர்பு கொண்டிருக்கிறாள். அன்று துண்டிக்கப்பட்டதுதான்.
சுலோவின்
ஆடிய பாதங்கள் ஆடாமல் நின்று விட்டன.
அதற்குப்
பதிலாக அவர் அப்பா ஆடிக் கொண்டிருக்கிறார். பார்க்கத்தான் சகிக்கவில்லை.
இதை
வாசிப்பவர் யாராவது சுலோவுக்கு அப்படி இணைப்பு அனுப்பி பணத்தை லபக்கியிருந்தால், தயவு
செய்து சுலோவுக்குக் கொடுத்து விடுங்கள்.
சத்தியமாகச்
சொல்கிறேன், சுலோவின் அப்பா ஆடும் நடனத்தை என்னால் கிஞ்சித்தும் பார்க்க முடியவில்லை.
கோபத்தில்
அவர் தலைகால் தெரியாமல் ஆடுவதாகச் சொல்கிறார்கள். எனக்கென்னவோ அது நடனமாகத் தெரிவது
பிரச்சனையாக இருக்கிறது.
எனக்கு
உதவுவீர்கள் என்று நம்புகிறேன். ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு உதவாமல் வேறு யாருக்கு உதவப்
போகிறார்கள் இந்தத் தமிழ் மக்கள்?!
*****
No comments:
Post a Comment