8 Mar 2025

பழிக்குப் பழி

பழிக்குப் பழி

மீண்டும் ஒரு கொலைபாதக முயற்சியில் இறங்குவதென்று முடிவு செய்து கொண்டான் இதயச்சந்திரன்.

யார் இந்த இதயச்சந்திரன்?

இதயச்சந்திரன் ஒரு சாதாரண வியாபாரியாக இருந்தான். அவன் பண்டமாற்று முறையில் பெட்ரோலை விற்று, நெல்லை வாங்கிக் கொண்டிருந்தான். உப வேலையாகத் தன் மீன் ளவர்ப்புப் பண்ணைக்காக அன்றாடங்காய்ச்சியாக வேலை பார்த்து, அந்தச் சம்பளத்தில் ரேசன் அரிசியைக் கிலோ பத்து ரூபாய் என்று வாங்கி வந்து கொட்டிக் கொண்டிருந்தான்.

ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறான்?

எல்லாம் எதற்காக? படிக்க வைப்பதற்குத்தான்.

யார்தான் படிக்க வைப்பதற்காகக் கஷ்டப்படவில்லை. வீட்டில் உள்ள அண்டான், குண்டான் வரை அடகு வைக்கவில்லை?

இதயச்சந்திரனுக்கு ஒரே ஒரு அப்பா, ஒரே ஒரு அம்மா. செல்லமாக வளர்த்து விட்ட அவர்களை முதியோர் கல்வியில் சேர்த்து, கையெழுத்துப் போட வைத்து, பிறகு கைரேகை வைத்து ஆதார் எண் மூலமாகப் பணம் எடுப்பதற்காகத்தான்.

இதற்காக அரசு நடத்திய அறிவொளி பள்ளியிலேயே அவன் அப்பாவையும் அம்மாவையும் சேர்த்திருக்கலாம். அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்த பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் படித்த காரணத்தால், அவனும் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் தனியார் பள்ளியில் சேர்த்திருந்தான். அதுதானே நியாயம்.

அவனது தெருவுக்கு நான்கு தெருக்கள் தள்ளி ஒரு தனியார் பள்ளி இருந்தாலும், பள்ளிக்கூட பேருந்தில் பெற்றோர்கள் போய் வந்தால்தான் பெருமை என்பதால் அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் இருக்கும் பள்ளிக்குக் கும்பகோணம் கோட்டம் 1 சார்பாக இயக்கப்படும் பேருந்தில் அனுப்பி வருகிறான். அதற்கான கட்டணம் மட்டும் வருடத்துக்கு நான்கு லட்சமாகிறது. அது கேரளா வரை சாலையில் சென்றும் அதற்குப் பிறகு கப்பலில் துபாய் வரை சென்று, தொடர்ந்து துபாயிலிருந்து சாலை மார்க்கத்திலும், போர்ச்சுக்கலிலிருந்து கடல் மார்க்கத்திலும் சென்று கியூபாவை அடைந்து பிறகு வான்மார்க்கத்தில் பறந்து நியூ ஜெர்சியை அடைகிறது. இந்த ஆனந்த அனுபவத்தைப் பெற்றோர்கள் பெறுகிறார்கள் எனும் போது அதை விட ஆனந்தம் என்ன இருக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால் தவறு.

சிறு வயதில் அவனைச் சீருடைக்குள் அடைத்து, இரண்டு இட்டிலியை அடைக்கும் டப்பாவுக்குள் ஒரு குண்டான் பழைய சோற்றை அடைத்து, மஞ்சள் நிற மாரியம்மன் மெட்ரிகுலேசன் பள்ளிக்கு அவனைப் புளிமூட்டையை அடைப்பது போல அடைத்து அனுப்பியதற்குத்தான் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, எவ்வளவு கல்விக்கடன் மற்றும் தனிநபர்க் கடன் வாங்கினாலும் பரவாயில்லை என்று இதயச்சந்திரன் அப்பாவையும் அம்மாவையும் முதியோர் கல்வியில் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறான்.

இந்த உண்மை தெரியாத இதயச்சந்திரனின் பெற்றோர்கள் தங்களைத் தங்கள் மகன் எப்படியெல்லாம் சீராட்டியும் பாராட்டியும் படிக்க வைக்கிறான் என்று விதந்தோதிக் கொண்டிருக்கிறார்கள்.

முடிவில் இதயச்சந்திரன் திட்டத்தை அறிந்தால் அரண்டு போவீர்கள். எப்படியாவது அப்பாவையும் அம்மாவையும் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் பொது இயந்திரவயில் எனும் தொழிற்கல்வி படிக்க வைத்து, அப்படியே நீட் தேர்வில் எழுத வைத்து பெற்றோர்கள் இருவரையும் மருத்துவராக்க வேண்டும் என்பதுதான் அவன் திட்டம்.

இந்தத் திட்டம் தெரியாத அவன் பெற்றோர்கள் வயதான கால்த்தில் தூக்கம் வேறு வந்து தொலையாததால், இருவரும் இரவு பகலாகப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீட் தேர்வில் தோல்வியடைந்து தம்பதி சகிதம் தற்கொலை என்று செய்தி பாத்தால் அத்தம்பதி இருவரும் இதயச்சந்திரனின் பெற்றோர்கள் என்று அறிந்து கொள்வீர்களாக!

*****

No comments:

Post a Comment

சகிக்க முடியாத நடனம்!

சகிக்க முடியாத நடனம்! தர்மசாஸ்தாசுலோச்சனாவைக் கேள்விபட்டிருக்கிறீர்களா? கேள்விப்படாமல் இருக்க வாய்ப்பில்லை. கலைகளின் தேவதை. பரதநாட்ட...