7 Mar 2025

மகாமுனி

மகாமுனி

வாழ்க்கையில் கிடைக்காத பொருள்கள் பல இருக்கின்றன. அமேசான், பிளிப்கார்டில் கூட கிடைக்காத பொருட்கள். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். அதன் பெயர் மோட்சம்.

அந்தக் கால முனிவர் ஒருவர், இந்தக் காலத்திற்குக் கால இயந்திரத்தில் வந்து, அமேசான், பிளிப்கார்ட், அலிபாபா உள்ளிட்ட இன்னபிற இணையதளங்களில் எல்லாம் தேடி வெறுத்துப் போய், மோட்சத்தைத் தேடி பழைய முறையில் தவம் இருக்க ஆரம்பித்தார்.

இந்த முனிவர் மோட்சத்தைக் கண்டுபிடித்து விட்டால் இணையதளங்களில் அதன் பின்னர் அதை விற்பது சுலபமாகி விடும் என்று அமேசான் உள்ளிட்ட இணையதளங்கள் அவரை ரகசிய கண்காணிப்பு புகைப்படக் கருவிகள் (காமிராக்கள்) கொண்டு கண்காணிக்க ஆரம்பிந்தன.

அமெரிக்காவின் நாசாவானது செயற்கைக்கோள் மூலமாக அவரைக் கண்காணித்துக் கொண்டிருந்தது அமேசானுக்கோ, பிளிப்கார்ட்டுக்கோ தெரியவில்லை.

முனிவரைச் சுற்றிப் புற்று வளர்ந்தது. அவர் தொடர்ந்து உச்சாடனங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

உச்சாடன இரைச்சலில் சுற்றியிருந்த மரங்கள் கருகிப் போய் மண்ணில் புதைந்து நிலக்கரியாகவும் பெட்ரோலியமாகவும் மாறிக் கொண்டிருந்தன.

பறவைகளோ, விலங்குகளோ அந்தப் பகுதிக்குச் செல்ல அஞ்சின. புற்றில் உறைய வந்த நாகமொன்று அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்டேன் என்று மனிதர்கள் உறையும் ஒரு நல்ல குளிர்பதன வசதி கொண்ட வீட்டை நோக்கிச் சென்று விட்டது.

முனிவரின் புற்றுக்கு மேல் பறந்த விமானங்கள் நொறுங்கி விழுந்தன. அதற்கு மேலே இன்னும் தாண்டிச் சுற்றி வந்த செயற்கைக் கோள்கள் அந்தப் பகுதியைக் கடக்கும் போது மட்டும் ஆட்டம் கண்டன.

அமேசானுக்கும் பிளிப்கார்ட்டுக்கும் கண்காணிப்பு கேமிராக்களின் ஆயுட்காலத்தைத் தொடர்ந்து நீட்டித்துக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. முனிவர் தவம் செய்தார், செய்தார் அப்படி செய்தார். அவரது காலக் கணக்கீட்டை ஐன்ஸ்டீன் காலசக்தி கோட்பாடுகள் கொண்டு விளக்குவதும் கடினமாக இருந்தது. நிற்க, அமேசானுக்கும் பிளிப்கார்டுக்கும் கண்காணிப்புக் கேமிராக்களுக்கான செலவு தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே இருந்தது.

முனிவர் இருபது வருடம் அல்லது போனால் போகிறது இன்னும் பத்து சேர்த்து முப்பது வருடத்தில் மோட்சத்தைக் கண்டுபிடித்து விடுவார் என்று பார்த்தால், அவர் ஐநூறு, அறுநூறு வருஷங்கள் என்று வருடங்களை அரியர்ஸ் வைத்து அதிகபடுத்திக் கொண்டே மோட்சத்தைத் தேடி தவம் செய்து கொண்டிருந்தார்.

கடைசியில் முனிவர் மோட்சத்தைக் கண்டுபிடித்தார்.

ஆனால் அமேசானிலோ, பிளிப்கார்டிலோ அதை வாங்க முடியவில்லை. அதற்குள் அந்த இரண்டு நிறுவனங்களும் அழிந்து போயிருந்தன. வேறு புதிய புதிய இணையதளங்கள் வந்திருந்தன. அவற்றிலும் வாங்க முடியவில்லை.

மோட்சத்தின் மொத்த குத்தகையும் அமெரிக்காவின் வசம் போயிருந்தது. அப்போதிருந்த அமெரிக்க அதிபரோ, ஒரு லட்சம் கோடி முதலீடு செய்து தங்க குடியுரிமை அட்டை வாங்குவோருக்கே மோட்சம் வழங்கப்படும் என அறிவித்து விட்டார்.

ஒரு லட்சம் கோடிக்குச் சாதாரண மக்கள் எங்கே போவார்கள்?

ஒரு லட்சம் கோடி இருந்தால் ஐந்து நிமிஷத்தில் கிடைத்து விடக் கூடிய மோட்சத்தை, அதை வாங்க வக்கில்லாதவர்கள் வேறு வழியில்லாமல், அடைய ஆசைப்பட்டு ஐநூறு வருடங்கள், அறுநூறு வருடங்கள் என்று தவமிருக்கத் தொடங்கினர்.

அதற்குப் பிறகு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் விலையில்லா பொருளாகவே மோட்சம் வழங்கப்பட்டது பாவம் அவர்களுக்குத் தெரியாது.

*****

No comments:

Post a Comment

சகிக்க முடியாத நடனம்!

சகிக்க முடியாத நடனம்! தர்மசாஸ்தாசுலோச்சனாவைக் கேள்விபட்டிருக்கிறீர்களா? கேள்விப்படாமல் இருக்க வாய்ப்பில்லை. கலைகளின் தேவதை. பரதநாட்ட...