7 Mar 2025

கடன் கொண்டார் நெஞ்சம் போல…

கடன் கொண்டார் நெஞ்சம் போல…

காசு இருந்தால் பத்திரிகையில் நான்கு பக்கங்களுக்கு விளம்பரம் கொடுக்க முடிகிறது. அதை தேநீர் கடைக்காரர் 32 சம பாகங்களாக்கிப் பஜ்ஜி, போண்டா, சமோசாவுடன் இலவச இணைப்பாக விநியோகிக்கிறார்.

அந்தப் பத்திரிகையில் ஒரு கவிதையைப் போட்டு விட்டு ஐம்பது ரூபாய் அனுப்புகிறார்கள். மதிய முழு சாப்பாடு நூற்று இருபது ரூபாய். அரைச் சாப்பாடு பொட்டலம் (பார்சல்) அறுபது ரூபாய். அரைச் சாப்பாடு பரிமாறப்படுவதில்லை.

ஐம்பது ரூபாயை வைத்து என்ன செய்வது?

ஒரு தேநீர் பனிரெண்டு ரூபாய். ஐந்து தேநீர் குடித்தால் ஒரு தேநீர் இலவசம் கூட கிடையாது. நான்கு தேநீரைக் குடித்து விட்டு, இரண்டு ரூபாயை வாங்கிக் கொண்டேன்.

வெளியே வர எத்தனிக்கையில் ஒரு பிச்சைக்கார அம்மணி கை நீட்டுகிறார். இரண்டு ரூபாயைப் போடுகிறேன். ச்சீ என்று காறித் துப்புகிறார். எச்சிலைத் துடைத்தபடி இதை நான் வைத்துக் கொள்கிறேன், வயிற்றுப் பசிக்கு நூற்று இருபது ரூபாய் தாருங்கள் என்கிறேன்.

அம்மணியின் கருணை மனம் சுருக்குப் பையிலிருந்து வேலை செய்கிறது. இருநூறு ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்து விட்டு, எண்பது ரூபாய் டிப்ஸ் என்கிறது. இன்று நரி முகத்தில் விழித்திருக்கிறேன். இந்த அம்மணி யார் முகத்தில் விழித்ததோ? இருநூறு நட்டம்.

இச்சம்பவத்தைக் கவிதையாக்கி அதை 22/5பங்காக்கி அனுப்பினால் 120 ரூபாயை அனுப்ப 65/7மாத கால அளவு எடுத்துக் கொள்வார்கள். கைம்மாற்று வைத்துக் கொள்ளல் ஆகாது. நாளை பணமுடை அந்த அம்மணியைத் தேடச் செய்யலாம். அப்போது இல்லை என்று சொல்லி விட அனுமதித்து விடக் கூடாது.

இப்போதைக்கு 1125 ரூபாய் 75 பைசாவுக்கான கவிதைகள் நிரம்பிய கவிதை நோட்டை அம்மணியிடம் கொடுக்கிறேன். அடமானமாக இருக்கட்டும். பணத்தைக் கொடுக்கும் போது மீட்டுக் கொள்ளலாம்.

இதென்னடா கருமம் என்பது போல அம்மணி கவிதை நோட்டைக் குப்பைத் தொட்டியில் வீசுகிறது. நான் குப்பைத் தொட்டிக்குள் பாய்ந்து சென்று என் கவிதை நோட்டை எடுத்துக் கொள்கிறேன். இனி அந்த அம்மணி எனக்கு 1125 ரூபாய் 75 பைசாவில் 200 போக எனக்கு 925 ரூபாய் 75 பைசா தர வேண்டும்.

வாக்கரூவோ, பாரகானோ தேயாத அந்தச் செருப்பைப் போட்டுக் கொண்டு அது தேயும் அளவுக்கு நடந்து அம்மணியிடமிருந்து 925 ரூபாய் 75 பைசாவை வசூலிப்பேன். இது சத்தியம்.

கடன் கொண்டார் நெஞ்சம் போல கலங்கட்டும் அம்மணி.

*****

No comments:

Post a Comment

பழிக்குப் பழி

பழிக்குப் பழி மீண்டும் ஒரு கொலைபாதக முயற்சியில் இறங்குவதென்று முடிவு செய்து கொண்டான் இதயச்சந்திரன். யார் இந்த இதயச்சந்திரன்? இதயச்சந்த...