3 Mar 2025

எப்படி வாடகை வருமானம் குறைவாக இருக்க முடியும்?

வீடென்பது பெருத்த மூலதனத்தின் துன்பியல் பொருளாதாரச் சுமை

நீங்கள் வீட்டைக் கட்டி வாடகைக்கு விடுகிறீர்கள் அல்லது நீங்கள் வாடகை வீட்டில் குடியிருக்கிறீர்கள். இந்த இரண்டு நிலைமைகளில் எது லாபகரமானதாக அமையும் என நினைக்கிறீர்கள்?

நிச்சயம் நீங்கள் வாடகை வீட்டில் குடியிருப்பதுதான் லாபகரமாக அமையும்.

வாடகை வீட்டில் குடியிருந்தால் வாடகை கொடுக்க வேண்டியிருக்கும். அதுவே வாடகைக்கு விட்ட வீட்டில் வீட்டு வாடகை வரும். பிறகெப்படி வாடகைக்குக் குடியிருப்பது லாபமாக அமையும்?

இது ஒரு கணக்குதான்.

நீங்கள் இந்தக் கணக்கைச் செய்து பார்க்கலாம்.

வாடகைக்கு இருக்கும் நீங்கள் மாத வாடகையாக ஐயாயிரம் கொடுப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படியானால் வருடத்துக்கு அறுபதாயிரம் கொடுப்பீர்கள். அப்படி பார்த்தால் அறுபது ஆண்டுகளுக்கு எவ்வளவு கொடுப்பீர்கள்?

36 லட்சம் கொடுத்திருப்பீர்கள்.

அதுவே, அப்படி ஒரு வீட்டை நீங்கள் கட்ட வேண்டுமானால் நீங்கள் 60 லட்சம் செலவழித்திருப்பீர்கள்.

அப்படியானால் நீங்கள் வாடகைக்கு இருந்திருந்தால் 24 லட்சத்தை மிச்சம் செய்திருப்பீர்கள்.

இந்த 24 லட்சத்தை நீங்கள் என்னவென்று நினைக்கிறீர்கள்?

இதுதான் ஊதிப் பெருக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு.

நீங்கள் நினைப்பது போல விசயம் 60 லட்சத்தோடு முடிந்து விடுவதில்லை.

நீங்கள் கட்டிய வீட்டுக்கு வரி, மின்கட்டணம், தண்ணீர் கட்டணம், பராமரிப்புச் செலவுகள் என்று பார்த்தால் அறுபது ஆண்டுகளுக்குள் நீங்கள் ஒரு கோடிக்கு மேல் செலவு செய்திருப்பீர்கள்.

ஒருவேளை நிலைமை இப்படி இருக்குமானால், அதாகப்பட்டது அந்த வீட்டை நீங்கள் வீட்டுக்கடன் மூலம் கட்டியிருந்தால் அக்கடனைக் கட்டி முடிக்கும் போது நீங்கள் ஒரு கோடியைக் கடந்திருப்பீர்கள். அத்துடன் நாம் கூறிய வரி போன்ற இத்யாதி செலவினங்களைச் சேர்த்தால் ஒன்றரைக் கோடியை நெருங்கியிருப்பீர்கள்.

அரை கோடிக்குள் அதுவும் 14 லட்சம் குறைவாக 36 லட்சத்துக்குள் முடிந்திருக்க வேண்டிய ஒரு செலவினத்துக்கு நீங்கள் ஒரு கோடியோ அல்லது ஒன்றரைக் கோடியோ செலவு செய்திருப்பீர்கள்.

இன்னும் சரியாகச் சொல்வதென்றால் 36 லட்சத்துக்குள் அதுவும் மாதா மாதம் 5 ஆயிரம் என்று சுலபமாக முடிந்திருக்க வேண்டிய ஒரு செலவினத்தை நீங்கள் பெருத்த மூலதனச் செலவாக இழுத்துக் கொண்டு, ஒரு துன்பியல் பொருளாதாரச் சுமையை வீட்டின் வடிவத்தில் ஏற்றிக் கொள்ள நினைத்தால், நீங்கள் தாரளமாக வீட்டைக் கட்டலாம்.

என்னைக் கேட்டால் திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்பதோடு விட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வீட்டுப் பேற்றை அடைய நினைத்தால் நீங்கள் நட்டக் கணக்கைத்தான் போட வேண்டும்.

எதற்கும் நீங்கள் இதற்கான உங்கள் எதிர்க்கணக்கையும் பதிவு செய்யுங்கள்.

நாம் அதையும் விவாதிப்போம்!

*****

No comments:

Post a Comment

எப்படி வாடகை வருமானம் குறைவாக இருக்க முடியும்?

வீடென்பது பெருத்த மூலதனத்தின் துன்பியல் பொருளாதாரச் சுமை நீங்கள் வீட்டைக் கட்டி வாடகைக்கு விடுகிறீர்கள் அல்லது நீங்கள் வாடகை வீட்டில் கு...