2 Mar 2025

ஜெலன்ஸ்கி செய்ய வேண்டியது என்ன?

ஜெலன்ஸ்கி செய்ய வேண்டியது என்ன?

1991 இல் சோவியத் ரஷ்யா சிதறுண்டது. சோவியத்திலிருந்து பல நாடுகள் பிரிந்து சுதந்தர நாடுகளாகின. அப்படிப் பிரிந்த சுதந்தர நாடுகளுள் உக்ரைனும் ஒன்று.

ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் நிலவிய பனிப்போரின் பின்னணியில் சோவியத்தின் பிளவுக்குப் பின் அமெரிக்கா இருந்திருக்கூடிய சாத்தியக்கூறுகளும் இன்று வரை சந்தேகக் கூறுகளுடன் பார்க்கப்படுகின்றன.

தத்துவார்த்த நோக்கில் சோவியத் பிளவு என்பது கம்யூனிசத்துக்கு நேர்ந்த பின்னடைவாகவும், முதலாளித்துவத்துக்குக் கிடைத்த வெற்றியாகவும் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவிலிருந்து பிரிந்து சுதந்திர நாடான உக்ரைன் 1994 இல் அமெரிக்காவின் கட்டுபாட்டில் உள்ள நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் இணைந்தது.

ஒரு சுதந்திர நாடு வகிக்க வேண்டிய நடுநிலைக்கு எதிரான நிலைப்பாடாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது. இந்நிலைபாட்டுக்கு மாற்றாக 2013 இல் உக்ரைன் அதிபராகப் பதவியேற்ற விக்டர் யானுகோவிச் ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டினார்.

உக்ரைன் வளமான விளைநிலங்களையும், தரமான கனிம வளங்களையும் கொண்ட நாடு என்றாலும் வறுமையும் ஊழலும் அந்நாட்டைப் பின்னோக்கி இழுத்துக் கொண்டிருந்தன. இதன் காரணமாகவே அந்நாட்டு மக்களின் பெரும்பான்மையானோர் தங்கள் நாடு ஐரோப்பிய கூட்டணியில் இணைய வேண்டும் என்பதை விரும்புவோராக மாறினர். இதற்குப் பின்னணியில் அமைந்தது போலந்து. போலந்து ஐரோப்பியக் கூட்டணியில் இணைந்த பிறகு மாற்றங்களைக் கண்டது. அது போன்ற மாற்றத்திற்கு உக்ரைன் மக்கள் ஏங்கினர்.

உக்ரைனின் பொருளாதார நிலைமை என்பது நிலையானதாக இல்லை. வெளிநாடுகளிலிருந்து வாங்கிய கடன்களுக்கு வட்டிக் கட்டத் தடுமாறும் நிலையில்தான் அந்த நாடு இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் 2019, மே 10 இல் உக்ரைன் அதிபராக விளாதிமிர் ஜெலன்ஸ்கி பொறுப்பேற்கிறார். இவர் நடிகராக இருந்து அரசியல்வாதியாக ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவர் சட்டம் பயின்ற பட்டதாரியும் ஆவார்.

அமெரிக்காவின் வல்லாதிக்க முன்னெடுப்பும், ரஷ்யாவின் வல்லரசு கனவும் உக்ரைன் போரை உருவாக்குகின்றன. பனிப்போரின் தொடர்ச்சியாக மட்டுமல்லாது, அமெரிக்காவின் ஆயுத விற்பனைக்கும், ரஷ்யாவின் ஆயுதப் பயன்பாட்டுச் சோதனைக்கும் ஏற்றதாக உக்ரைன் போர் மாறியது.

உலக வரலாற்றையும் வளைகுடா போர்களையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது இப்போரைச் சாமர்த்தியமாக தவிர்ப்பதற்கான வழிகளை ஜெலன்ஸ்கி கைக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர் ரஷ்யாவுடனான போரை எதிர்கொண்டார். ஒருவேளை போரைத் தவிர்ப்பது உக்ரைன் மக்களிடம் தனது செல்வாக்கைக் குறைத்து விடும் என்று ஜெலன்ஸ்கி கருதியிருக்கலாம். அல்லது அது ஆட்சியிழப்பை ஏற்படுத்தி விடும் என்றும் அவர் நினைத்திருக்கலாம்.

அமெரிக்கா – ரஷ்யா பனிப்போருக்கு இடையில் சிக்கிய அனைத்து நாடுகளும் சீரழிந்திருக்கின்றன. ஈராக், ஆப்கானிஸ்தான் என்று அதற்கான உதாரணங்களைக் கடந்த கால வரலாற்றிலிருந்து காட்ட முடியும். ஏறத்தாழ உக்ரைனின் நிலைமையும் இப்போது அப்படித்தான் இருக்கிறது.

இந்தப் போரைப் பயன்படுத்தி அமெரிக்கா தனது ஆயுத விற்பனையைப் பெருக்கிக் கொண்டது. ரஷ்யாவும் அணு ஆயுதங்களைச் சோதித்துப் பார்த்ததுடன் ஆளில்லா ராணுவ தாக்குதல்களுக்கான ஒத்திகைகளையும் செய்து பார்த்து விட்டது.

ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த போது புகைச்சலாகத் தொடங்கிய உக்ரைன் போருக்கான பிரச்சனை, ஒபாமாவைத் தொடர்ந்து வந்த டொனால்ட் டிரம்ப் காலத்திலும் நீடித்து, டிரம்பைத் தொடர்ந்து வந்த ஜோ பைடன் காலத்தில் உச்சத்தை அடைந்தது. 2022, பிப்ரவரி 24 இல் ரஷ்யா உக்ரைன் போர் துவங்கியது. தற்போது மூன்று ஆண்டுகளைக் கடந்து விட்டது இந்தப் போர்.

தற்போது மீண்டும் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப் அவர் அதிபராக இல்லாத காலத்தில் ஒரு வாசகத்தைச் சொல்லியிருந்தார். தான் மட்டும் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் உக்ரைன் போரை நிறுத்தியிருப்பேன் என்று.

நியூட்டனின் மூன்றாவது விதியின் படி ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை இருக்கிறது அல்லவா! அன்று வெளியே வந்து விட்ட டிரம்பின் வாசகத்துக்கான எதிர்வினையை அவர் இன்று காட்டுகிறார்.

போரைத் தன்னால் நிறுத்த முடியும் என்பதற்கான நாயக பிம்பத்தை அவர் துவங்கியிருக்கிறார். இந்தப் பிம்பத்தில் அவர் முன்னாள் அதிபரான ஜோ பைடனின் பிம்பத்தைச் சுக்கு நூறாக்கவும் திட்டமிடுகிறார். பைடனை வில்லானாக்குவதில் டிரம்ப் அதீத தீவிரம் நிறைந்தவராக இருக்கிறார்.

பைடன் போரை நிறுத்த விரும்பவில்லை என்பதைக் காட்டி உலக சமாதானத் தூதுவன் தான்தான் என்பதைக் காட்ட விரும்புகிறார் டிரம்ப். ஏன் இப்படி ஒரு பிம்பத்தை அவர் விரும்ப வேண்டும் என்பதற்குப் பின்னால், உலக அமைதிக்கான நோபல் பரிசு பெறும் ஆசையும் ஒளிந்திருக்கலாம்.

வரலாற்றில் இப்படித்தான் நடக்கும் என்று எதையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாத பல ஆச்சரியங்கள் எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன. அப்படி ஒரு ஆச்சரியமாக அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் பனிப்போரை மறந்து உக்ரைன் போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று எடுத்த முடிவு எதிர்பாராத ஒரு திருப்பம்.

இதற்காக டிரம்ப் வெள்ளை மாளிகையில் ஜெலன்ஸ்கியுடன் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அமைதியாகப் பேசித் தீர்க்க வேண்டிய தீவிரமான போர் சார்ந்த இப்பிரச்சனையை டிரம்ப் ஏன் பரபரப்பான நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிகழ்வு போல அமைத்தார்? டிரம்ப் தன்னுடைய உலகளாவிய பிம்பத்தை அதிகப்படுத்த நினைக்கிறார். அதற்கு முன்பே உக்ரைனுடன் முக்கியமான கனிமவள ஒப்பந்தத்தைக் கனகச்சிதமாக அவர் முடித்து விட்டார் என்பது வேறு விசயம்.

இந்நிகழ்வில் ஜெலன்ஸிகியின் ஆடை பெருத்த விவாதத்துக்கு உள்ளானது. அவர் வெள்ளை மாளிகைக்கு உரிய ஆடை நாகரிகத்தோடு வந்திருக்க வேண்டும் என்பதை அதிபர் டிரம்ப் மறைமுகமான நக்கலோடும், துணை அதிபர் ஜேடி வான்ஸ் நேரடியாகவும் குறிப்பிட்டனர்.

ஜெலன்ஸ்கிக்குத் தன் நாட்டு மக்களுக்காகப் போராடும் கதாநாயக பிம்பம் தேவைப்படுகிறது என்றால், இந்தப் போரைத் தன்னால்தான் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்ற உலகத் தலைவன் பிம்பம் டிரம்புக்குத் தேவைப்படுகிறது.

விளைவு சண்டையை நிறுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்சந்திப்பு, ஒரு குழாயடிச் சண்டையைப் போல நடந்து முடிந்தது.

ஒரு வகையில் இது போன்ற வெளிப்படையான சந்திப்புகளால், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மூடாக்கின்றி அறிந்து கொள்ள முடிவதுடன், தலைவர்களின் மனப்போக்குகள் எப்படி இருக்கின்றன என்பதை நேரடியாகத் தெரிந்து கொள்ளவும் முடிகின்றன என்பது உண்மைதான். அப்படியானால் இதுவே முதலும் முடிவுமான சந்திப்பாக இருக்கக் கூடாது. இன்னும் கூட சில சந்திப்புகளை டிரம்ப் இதே முறையில் ஏற்பாடு செய்ய வேண்டும். உக்ரைன் இன்னொரு கனிம வள ஒப்பந்தத்தைத் தந்தால், அப்படி மீண்டும் ஏற்பாடு செய்வேன் என்கிற நிபந்தனை ஏதும் விதிக்காமல் அதற்கான முன்னெடுப்பை டிரம்ப் செய்ய வேண்டும்.

இந்தச் சந்திப்பு இரு முக்கிய விடயங்களைக் காட்டின. 1) பெருவணிகராக இருந்து அரசியல்வாதியாகி மகா நடிகராக மாற முயற்சித்துக் கொண்டிருக்கும் டிரம்பின் முகத்தை. 2) நடிகராக இருந்து தலைவராக மாறி அரசியல்வாதியாக மாற முயற்சித்துக் கொண்டிருக்கும் ஜெலன்ஸ்கியின் முகத்தை.

இச்சந்திப்பு தோல்வியில் முடிந்ததற்கும் இரு காரணங்கள் இருக்கின்றன. 1) தான் சொல்வதைக் கேட்டு ஜெலன்ஸ்கி போரை நிறுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் டிரம்ப். 2) தான் சொல்வதைக் கேட்டு தன் நாட்டு மக்களுக்கு நேர்ந்துள்ள கொடுமைகளுக்கு நியாயத்தை டிரம்ப் பெற்றுத் தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் ஜெலன்ஸ்கி.

இந்த இடத்தில் டிரம்ப் ஒரு விசயத்தை வசதியாக மறந்து விடுகிறார், அது என்னவென்றால் ஜெலன்ஸ்கி ஒரு மக்கள் தலைவர் மற்றும் ஒரு நாட்டின் அதிபர்.

ஜெலன்ஸ்கியும் ஒரு விசயத்தைக் கவனிக்கத் தவறுகிறார். அது என்னவென்றால், டிரம்ப் ஒரு பெருநிறுவனங்களின் தலைவர் மற்றும் கட்டப்பஞ்சாயத்துக்கான நாட்டாமை.

இது போன்ற நிலைமைகள் மிகவும் இக்கட்டானது என்றாலும், இச்சூழ்நிலையில் ஒரு தலைவர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான வள்ளுவ வாக்கு ஒன்று இருக்கிறது.

“உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்

கொள்வர் பெரியார்ப் பணிந்து.” (குறள், 680)

இப்போது ஜெலன்ஸ்கி செய்ய வேண்டியது இதைத்தான். தற்போது ஒரு பக்கம் சாய்ந்து தன் நிலையையும் தன் நாட்டு நிலையையும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கிறது.

இதைச் செய்யத் தவறும் பட்சத்தில் ஈராக்கைப் போன்ற நிலையை அவர் தன் நாட்டுக்கு ஏற்படுத்தி விடலாம். சதாம் உசேனுக்கு நேர்ந்த நிலையும் அவருக்கு ஏற்படலாம்.

இப்போதிருக்கும் நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு காய் நகர்த்தும் அரசியல் சாதுர்யத்தைத்தான், தற்போது ஜெலன்ஸ்கியிடம் இந்த உலகம் எதிர்பார்க்கிறது.

*****

No comments:

Post a Comment

எப்படி வாடகை வருமானம் குறைவாக இருக்க முடியும்?

வீடென்பது பெருத்த மூலதனத்தின் துன்பியல் பொருளாதாரச் சுமை நீங்கள் வீட்டைக் கட்டி வாடகைக்கு விடுகிறீர்கள் அல்லது நீங்கள் வாடகை வீட்டில் கு...