10 Mar 2025

எண்ம இந்தியாவின் அலைபேசி இல்லா ஒரே குடிமகன்!

எண்ம இந்தியாவின் அலைபேசி இல்லா ஒரே குடிமகன்!

கட்டுவதானால் கல்யாணம் கட்டுவதோடு நிறுத்திக் கொள்வது நல்லது. வீட்டைக் கட்டுவது அபாயகரமானது. நான் எத்தனை பத்திகளில்தான் இது குறித்து புலம்புவது? கேட்காதவர்கள் வீட்டைக் கட்டி விட்டுப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

வீடு கட்டினால் உங்களுக்கு வீடு இருக்கலாம். உங்களுக்கு வீடு இருப்பது எல்லாருக்கும் தெரியும், கடன் இருப்பது யாருக்குத் தெரியும்? வீட்டைக் கட்டி என்ன சம்பாதித்தீர்கள்? வீட்டுக்கடன் கொடுத்த நிறுவனங்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன.

நீங்கள் ஒரு வீட்டைக் கட்டினால், மின்சார பழுது பார்ப்பவர் (எலெக்ட்ரீசியன்) சம்பாதிப்பார், குழாய் பழுது பார்ப்பவர் (பிளம்பர்) சம்பாதிப்பார், வெள்ளை அடிப்பவர் (பெயிண்டர்) – வண்ணம் கொடுத்தாலும் அடிப்பவர் சம்பாதிப்பார். கழிவுநீர் அடைப்பு எடுப்பவர் சம்பாதிப்பார், வீட்டு வரி வசூலிக்கும் உள்ளாட்சி அமைப்புகள் சம்பாதிக்கும்.

நீங்கள் சொல்லலாம் வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்கலாம் என்று. அப்போது நீங்கள் எங்கே குடியிருப்பீர்கள்? இன்னொரு வாடகை வீட்டிலா? கீழ் வீடு தனக்கு, மேல்வீடு வாடகைக்கு எனச் சம்பாதிப்பவர்கள் இருக்கிறார்கள்.

உங்கள் வாடகை வீட்டில் வாடகை கொடுக்காமல் டபாய்க்கும் கொசுக்கள், குளவிகள், பூச்சிகள், பல்லிகள், கரப்பான்பூச்சிகள், கறையான்களை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

கீழ் வீடு தனக்கு – மேல் வீடு வாடகைக்கு எனக் கொள்கை உடைய சுமார் சிந்தனை சாந்தகுமார் கதையை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

வீட்டை வாடகைக்கு விடுவது என்றால் தரகர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பதிலுக்கு அவர்களும் வீட்டுக்காரரைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அதற்கெல்லாம் சம்மதம் இருந்தால் வாடகை வீடு வைத்துக் கொள்ள வேண்டும்.

தரகரை வைத்து வாடகைக்கு விட்டால் ஒரு மாத வாடகை தரகுக்கட்டணம். தந்து தொலைய வேண்டியதுதானே. காசாயிற்றே! காச நோயா? போனால் போகிறதென்று தருவதற்கு.

வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிக் கட்டிய வீடு சாந்தகுமாருடையது. நல்லவேளை கழுத்தைக் கட்டாமல் விட்டதால் தற்போது வாடகைக்கு விடும் அளவுக்கு உயிர் இருக்கிறது.

ஓர் எழுது கலையாளரை (ஆர்டிஸ்ட்) வைத்து ‘வீடு வாடகைக்கு, தொடர்பு கொள்ளவும் 0090060030 என்கிற தொடர்பு எண்ணை எழுத காசு செலவாகுமென்று, சாந்தகுமாரே தன் சுமார் சிந்தனையில் உதித்த யோசனையின் படி, வீட்டில் வீணாகித் துருபிடித்துப் போய் கிடந்த தகரத்தில் இரண்டு ரூபாய்க்குச் சுண்ணாம்பு பொட்டலத்தை வாங்கி எழுதி வைத்தார்.

நான்கு நாட்களுக்கு எந்த அசைவும் இல்லை. விளம்பரம் செத்துப் போய் விட்டதோ என்று கூட நினைத்தார் சாந்தகுமார்.

ஐந்தாம் நாள் விளம்பரத்துக்கு உயிர் வந்து விட்டது. அவர் குறிப்பிட்ட 0090060030 என்ற எண்ணுக்கு ஒருவர் அழைத்தார். ஆகா யுகமலர்ச்சி பிறந்து விட்டது என துள்ளிக் குதித்தார் சாந்தகுமார்.

“ஐயா! துருக்கியின் இஸ்தான்புல்லிலிருந்து பேசுகிறேன். தங்கள் வாடகை வீடு சமாச்சாரம் உலகெங்கும் பரவி எக்ஸ் தளத்தில் பிரபலம் (டிரெண்ட்) ஆகிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு வீட்டில்தான் குடியிருக்க வேண்டும் என்பது வாழ்நாள் கனவு? என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்றது அலைபேசிக் குரல்.

“வேறென்ன பெரிதாக எதிர்பார்த்து விடப் போகிறேன். வாடகையும் முன்பணமும்தான்.” என்றார் சாந்தகுமார் புத்திசாலிதனமாக.

“நல்லதாகப் போயிற்று. நீங்கள் ஏதாவதுபெரிதாக எதிர்பார்த்து விடுவீர்களோ என்று பயந்து விட்டேன். எவ்வளவு என்று சொல்லுங்கள்?” என்றது எதிர்குரல்.

“வாடகை 18 ஆயிரம். முன்பணம் லட்சத்து எண்பதினாயிரம். முன்பணம் கொடுத்தால் வீட்டை வாடகைக்குப் பதிவு செய்து கொள்ளலாம்.” என்றார் சாந்தகுமார்.

“பரவாயில்லை. 1 லட்சத்து 80 ஆயிரம் குறைவுதான். இஸ்தான்புல்லில் என்றால் 1 கோடியே 80 லட்சத்து 80 ஆயிரத்து 8 ஆகிறது.” என்றது அலைபேசிக் குரல்.

பிடித்தாலும் புளியன் கொம்பாய்ப் பிடித்து விட்டேன் என்கிற ஜல்லிக்கட்டு வீரரின் பெருமிதம் வந்து விட்டது சாந்தகுமாருக்கு. “எப்போது பணத்தைத்  தருவீர்கள்? சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் வருமான வரி (இன்காம்டாக்ஸ்) ஆகியவற்றுக்குத் திட்டமிட வேண்டும்” என்றார் சாந்தகுமார் ஒரு பொறுப்புள்ள குடிமகனாக.

“இங்கிருந்தே, இப்போதே உங்கள் அலைபேசி எண்ணுக்கு அனுப்பி விடுகிறேன். முதலில் ஒரு நூறு ரூபாய் அனுப்புகிறேன். அது உங்கள் அலைபேசி எண்ணுக்கு வந்தால், 1 லட்சத்து 79 ஆயிரத்து 9 நூறுகளை அடுத்த நொடியே அனுப்புகிறேன். சரிபார்த்து உறுதி செய்யுங்கள்.” என்றது அலைபேசி குரல்.

சாந்தகுமாரின் முகத்தில் சந்தோசத்தைப் பார்க்க வேண்டுமே.வீட்டைக் கட்டி குடி போன போது இருந்த சந்தோசத்தை விட அதிக சந்தோசம் தாண்டவமாடியது. பிரபுதேவாவின் நடனம் தோற்றுப் போக வேண்டும், அந்தத் தாண்டவத்திற்கு முன்.

அலைபேசிக்கு இணைய இணைப்பு கொடுத்து ஜி‘பேயை’த் திறந்து வைத்துக் கொண்டார் என்பதற்காக அவரது வாடகை வீட்டை பேய் வீடு என நினைத்துக் கொள்ள வேண்டாம்.

வந்தது நூறு ரூபாய்.

ஆகா, ஆகா என வானுக்கும் மண்ணுக்கும் துள்ளிக் குதித்தார்.

அடுத்து,

1,79,900 ரூபாய்க்கு ரகசிய கடவு எண்ணைக் (பின் நம்பர்) கேட்க கடவு எண்ணைக் கொடுத்தார் சாந்தகுமார்.

அந்தத் தொகை இவரது கணக்கிற்கு வருவதற்குப் பதிலாக, இவரது கணக்கிலிருந்து பணம் பறிபோனதாகச் செய்தி வந்தது.

உடனே விழுந்தடித்து வங்கிக்கு ஓடினார்.

உங்களுக்குப் பணம் வர நீங்கள் ஏன் ஐயா ரகசிய கடவு எண்ணைக் கொடுத்தீர்கள் என்றார்கள் வங்கியில்.

“ஐயா பணம் பறிபோய் விட்டதா?” என்றார் சாந்தகுமார் சந்தேகம் தீராமல். சரியான சந்தேகப்பேர்வழியான சாந்தகுமாரின் சந்தேகத்தை உறுதிபடுத்தி விட்டு, வங்கியாளர்கள் வேறு வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

அன்றே வந்த விலைக்கு சொந்த வீட்டையும், வாடகைக்குத் தலைக்கு மேல் வைத்திருந்த மேல் வீட்டையும் ஒட்டுமொத்தமாக விற்று விட்டு, தற்போது வாடகை வீட்டில் குடியிருக்கிறார் சாந்தகுமார்.

இது உண்மையா என்று நீங்கள் மேற்படி எண்ணுக்கு உறுதி செய்து கொள்ள சாந்தகுமாருக்கு அழைக்க முடியாது என்பது வருத்தமான செய்தி.

அன்றே அலைபேசியையும் சேர்த்து விற்று விட்டார் சாந்தகுமார்.

எண்ம இந்தியாவின் (டிஜிட்டல் இந்தியா) அலைபேசி இல்லாத ஒரே குடிமகனாக இன்று ஜொலித்துக் கொண்டிருக்கிறார் சாந்தகுமார்.

என்னே ஒரு ஜொலிப்பு.

பார்த்தவர்களுக்குத்தானே பரவசம் தெரியும்.

காத்திருங்கள், நான் அலைபேசி வாங்கியதும் புகைப்படும் எடுத்துப் போடுகிறேன்.

அதுவரை வேறு வழியென்ன இருக்கிறது? தினம்தோறும் புகைப்படம் வந்திருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருங்கள்.

*****

No comments:

Post a Comment

எண்ம இந்தியாவின் அலைபேசி இல்லா ஒரே குடிமகன்!

எண்ம இந்தியாவின் அலைபேசி இல்லா ஒரே குடிமகன்! கட்டுவதானால் கல்யாணம் கட்டுவதோடு நிறுத்திக் கொள்வது நல்லது. வீட்டைக் கட்டுவது அபாயகரமானது. நா...