10 Mar 2025

விரைவில் எதிர்பாருங்கள் – அண்ணாமலை பார்ட் 2!

விரைவில் எதிர்பாருங்கள் – அண்ணாமலை பார்ட் 2!

மோகன் நிறைய சம்பாதிப்பதாகத் திரையரங்கக்காரர்கள் நினைத்துக் கொண்டார்கள். அவனது திரையரங்கக் கட்டணமான முந்நூறு ரூபாயை விட சோளப்பொரி, சமோசா, காப்பி (குளம்பி), குளிர்பான செலவு அதிகமானது.

எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்துச் சென்ற ஆயிரத்து ஐநூறுடன் கூடுதலாக ஜிபே மூலமாக எழுநூற்று இருபது ரூபாய் செலவாகி விட்டது.

மோகன் திரையரங்க உரிமையாளரிடம் சென்று முறையிட்டான். தன்னுடைய மாதாந்திர வருமானம் பதினைந்தாயிரம் என்றும், ஒரு நாள் திரையரங்கச் செலவு 2,520/- ஆகி விட்டதெனவும் கூறினான்.

திரையரங்க முதலாளி அவன் தோளில் தட்டிக் கொடுத்துப் பிரமாதமாகக் கணக்குப் போடுவதாகக் கூறினார். அவருக்கு முன்னொரு காலத்தில் போர்த்தியிருந்த சால்வைகளுள் ஒன்றை எடுத்துப் போர்த்தினார்.

சால்வை எப்படியும் 150க்குப் போகும். மீதி 2370க்கு என்ன செய்வது என்று யோசித்த மோகன், தனக்குத் தேவை பாராட்டும் பரிசும் இல்லை என்று தெரிவித்தான்.

அவனை எப்படி வெளியே அனுப்புவது என்று யோசித்த முதலாளி, அன்று படம் பார்த்த அன்றாடங்காய்ச்சி ஒருவனைக் கூப்பிட்டார்.

“இன்று எவ்வளவு செலவழித்தாய்?” என்றார்.

அவன், “ஆயிரத்து 300” என்றான்.

“உன் ஒருநாள் சம்பளம் எவ்வளவு?” என்றார்.

அவன், “இருநூறு” என்றான்.

“உனக்கு வருத்தமில்லையா?” என்றார்.

“எனக்கென்ன வருத்தம்?” என்றான் அவன்.

“எப்படி வருத்தமில்லாமல் போகும்?” என்று அடக்க முடியாத கோபத்தோடு சத்தமிட்டான் மோகன்.

மோகனை முதலாளி அமைதிப்படுத்தினார்.

இப்போது அன்றாடங்காய்ச்சி பேசினான், “முப்பது லட்சத்துக்கு இந்தப் படத்தை எடுத்து மூன்று லட்சத்தைக் கூட இவரால் தேற்ற முடியாது. இவரே சந்தோமாக இருக்கும் போது, நான் எதற்குக் கவலைப்பட வேண்டும்?”

மோகனுக்கு என்னவோ புரிவது போல இருந்தது.

அடுத்த முறை மோகன் அதே திரையரங்கத்திற்கு வேறொரு படம் பார்க்க போன போது, ஸோமோட்டோகாரன் போல ஒரு பையைப் பின்னாடிக் கட்டிக் கொண்டு போனான்.

திரையரங்கில் அறுபது ரூபாய்க்கு விற்ற சோளப்பொரியைத் தன்னுடைய பையிலிருந்து எடுத்து, முப்பது ரூபாய்க்குச் சோளப்பொரி என்றான். பத்து நிமிடத்தில் பை காலியாய்ப் போனது.

முந்நூறு ரூபாய் திரையரங்கச் சீட்டுப் போக, பையில் வைத்திருந்ததை விற்றதில் கிடைத்த லாபம் 4200ஐக் கழித்துப் பார்த்தான்.

3900 ரூபாய் ஜாக்பாட்.

இப்படியாக ஒரு திரையரங்கில் எப்படி படம் பார்ப்பது என்பதைக் கற்றுக் கொண்டான் மோகன்.

இப்படி நூறு படங்கள் பார்த்தால் ஒரே பாடலில் அண்ணாமலை ரஜினியாகவே ஆகி விடுவான் மோகன். நீங்கள் அண்ணாமலை பாகம் 2ஐ எதிர்பார்க்கலாம்.

‘அடே திரையரங்கக்காரா! உன்னை வெல்வேன்!’

*****

No comments:

Post a Comment

விரைவில் எதிர்பாருங்கள் – அண்ணாமலை பார்ட் 2!

விரைவில் எதிர்பாருங்கள் – அண்ணாமலை பார்ட் 2! மோகன் நிறைய சம்பாதிப்பதாகத் திரையரங்கக்காரர்கள் நினைத்துக் கொண்டார்கள். அவனது திரையரங்கக் கட்...