இயக்குநர் ஷங்கர் எங்கே சறுக்குகிறார்?
பிரமாண்டத்துக்குப்
பெயர் போன இயக்குநர் ஷங்கர் எங்கே சறுக்குகிறார்? இக்கேள்வியிலேயே அதற்கான பதிலும்
அடங்கியிருக்கிறது.
எது
அவரது பலம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரோ, அதுவே அவரது பலவீனமாக மாறிக் கொண்டிருக்கிறது.
“அரசனை
நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாக இருக்கிறதே!” என்று ஒரு சொலவம் உண்டு. ஷங்கருக்கு இச்சொலவத்தைப்
பிரமாண்டத்தை நம்பிக் கதையைக் கைவிடுகிறாரே என்று சொல்ல வேண்டியிருக்கிறது.
ஷங்கரின்
சறுக்கல் இப்போது தொடங்கியதல்ல. அது ‘பாய்ஸ்’ படத்திலிருந்தே துவங்குகிறது. ‘இந்தியன்
– 2’ படத்தில் உச்சத்தைத் தொட்டு தற்போது அது ‘கேம் சேஞ்சர்’ வரை தொடர்கிறது.
இதற்கான
மேலதிக காரணங்களையும் நாம் ஆராய வேண்டியிருக்கிறது.
மாற்றங்கள்
விரைவாக நடக்க வேண்டும் என்ற அவசரப்படாதவர்கள் யார்? இது ஒரு வகை மன அவசரம்.
இம்மன
அவசரத்தை அரசியல்வாதிகள் பேச்சிலும், திரைப்பட இயக்குநர்கள் கதைகளிலும் பயன்படுத்திக்
கொள்கிறார்கள்.
அரசியலையும்
திரைப்படத்தையும் இணைத்தால் மனஅவசரத்துக்கு ஒரு புதிய பரிமாணம் கிடைத்து விடும்.
இயக்குநர்
ஷங்கரின் படங்கள் அப்படிப்பட்டவை. அவரது படங்களில் ‘ஊழலை ஒழிப்பது’ என்பது பல்லாண்டுகளாகக்
குளத்தில் ஊறிய மட்டை.
வழக்கமாகவே
நேர்மை, நல்லாட்சி என்பன பழைய மொந்தையில் புதிய கள் என்று தொடர்ந்து அரசியலிலும் கதைகளிலும்
ஊற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதை ஷங்கர் விதவிதமான விகிதாச்சாரத்தில் ஊற்றிக் கொண்டிருப்பார்.
அந்த
விகிதாச்சாரத்தில் அண்மை காலமாக அவருக்கே குழப்பம் வந்து விட்டது. சமீப காலமாக ஒரே
மாதிரியாக ஊற்றிக் கொண்டிருக்கிறார். ‘இந்தியன் – 2’வின் விகிதாச்சாரம் அப்படி குழப்படியாகப்
போன பிறகு, அடுத்த அவரது விகிதாச்சாரம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அவருடைய
‘கேம் சேஞ்சர்’ என்ற திரைப்படத்தை நோக்கி எழுந்தது.
அவர்
விகிதாச்சாரத்தை மாற்றவில்லை. அத்துடன் பழைய மொந்தையில் பழைய கள்ளையே ஊற்றி ‘சேஞ்சர்’
என்ற தலைப்புக்கு அர்த்தம் இல்லாமல் செய்து விட்டார்.
பொதுவாக
மசாலா படங்கள் நாயகனின் உடல் வலிமை, ரசிகர்களின் மன அவரசம் ஆகிய இரண்டுக்கும் தீனி
போடும் வகையில் பலவிதமாகக் குழைத்துக் குழைத்து செய்யப்படுகின்றன. இதற்கு நாயகனின்
உணர்ச்சிவசப்படுதல் எனும் குணம் தொடுகறியாகச் (சைடிஷ்) சேர்க்கப்படுகிறது.
‘கேம்
சேஞ்சர்’இன் தடவலும் கலவையும் ஷங்கருக்கு முந்தைய ஆதிக் காலத்தவை. கதை கார்த்திக் சுப்புராசுவினுடையது.
இதே கதையை கார்த்திக் சுப்புராஜ் எடுத்திருந்தால் அதை அவர் ஜிகிர்தண்டா – 3 ஆக ஆக்கியிருப்பார்.
ஷங்கர் அதை இந்தியன் – 2க்குப் பிறகு இந்தியன் – 2.0 ஆக்கி விட்டார்.
ஷங்கர்
தன்னுடைய புரையோடிப் போன கதை சொல்லல் முறையிலிருந்து வெளியே வரவில்லை. அவருக்கென்று
ஒரு கதையுலகம், திரையமைப்பு முறை இருக்கலாம். அதையே திரும்ப திரும்ப செய்து அலுப்பூட்டுவதில்
என்ன இருக்கிறது?
ஒருவேளை
ஷங்கருடன் சுஜாதா இருந்திருந்தால் இப்படி விட்டிருக்க மாட்டார். அந்தக் குறைதானோ என்னவோ?
ஷங்கர்
தான் உருவாக்கிய பிரமாண்ட பிம்பத்தில் அவரே மாட்டிக் கொண்டிருக்கிறார். ரசிர்களை வியப்படையச்
செய்ய வேண்டும், ஆச்சரியத்தின் நுனிக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற உத்தியில் சலிப்பூட்டும்
அளவுக்குப் பின்தங்கிப் போயிருக்கிறார்.
“நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்குஇறுதி யாகி விடும்.” (குறள்,
476)
ஷங்கர்
பிரமாண்டத்தின் நுனிக்கொம்பு ஏறி, கதையோட்டத்தின் வேரைப் பிரமாண்ட பிரயாசை எனும் கறையானால்
அரித்தெடுத்து விடுகிறார்.
இதனால்
தன் மீதான நம்பிக்கை இழப்பை ஷங்கர் தொடர்ந்து அதிகமாக்கிக் கொண்டே போகிறார். அவரின்
கதையுலகம் ஒன்றாகவும், நடைமுறை மற்றும் எதார்த்த உலகம் வேறொன்றாகவும் ஆகிக் கொண்டிருக்கிறது.
400
கோடிக்கு மேல் செலவு செய்து எடுத்த ‘கேம் சேஞ்சர்’ படத்தில், பாடல்களுக்கு மட்டும்
75 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அதற்கான நியாயம் எதுவும் படத்தில்
இல்லை என்பதோடு, ஷங்கர் கார்த்திக் சுப்புராஜின் கதையையும் அலட்சியம் செய்து, தன்னுடைய
முந்தைய பல படங்களைப் பலவிதமாக முன்னும் பின்னுமாக வெட்டி – ஒட்டி (காப்பி – பேஸ்ட்)
‘கேம் சேஞ்சர்’ ஆகாமல் செய்திருக்கிறார்.
‘மாற்றம்
ஒன்றே மாறாதது’ என்ற நிலை மாறி ‘மாறாதது ஒன்றே ஷங்கர் படத்தில் மாறாதது’ என்று ஆகிவிடுமோ?
இதே
நிலை தொடருமானால் அவரது ‘இந்தியன் – 3’ மற்றும் ‘வேள்பாரி’ திரைப்படங்களைக் கூட கவலைக்கிடமாகத்தான்
பார்க்க வேண்டியிருக்கும். அவர் நம்பிக்கைக்கு இடம் தரும் வகையில் மாறுவார் என்று எதிர்பார்ப்பதைத்
தவிர நமக்கு வேறு என்ன வழியிருக்கிறது?
*****
No comments:
Post a Comment