9 Feb 2025

சாத்தியம்தானா இயற்கை வேளாண்மை முறை?

எளிமையான இயற்கை வேளாண்மை முறை!

வேளாண்மை என்பது இயற்கையா? செயற்கையா?

வேளாண்மை என்பது செயற்கைதான்.

அது இயற்கை கிடையாது.

பிறகு, இயற்கை வேளாண்மை என்கிறார்களே, என்கிறீர்களா?

காட்டு மரங்களைப் போல அதுவாக நெற்பயிர்கள் வளர்ந்து அவற்றை நாம் அறுவடை செய்தால், அந்த வேளாண்மையை நாம் இயற்கை வேளாண்மை எனலாம். நாம் இங்கு நெற்பயிர்களை அப்படியா விளைவிக்கிறோம்?

வயலை உழுது, நாற்று நட்டு நடவு செய்து, களை பறித்து மனித முயற்சியால் நெற்பயிர்களை விளைவிக்கிறோம். இது செயற்கை வேளாண்மைதான்.

தற்போதைய வேளாண்மையில் ரசாயன உரங்களும், களைக்கொல்லிகளும், பூச்சிக் கொல்லிகளும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் பயன்பாடு இல்லாத வேளாண்மையையே இயற்கை வேளாண்மை என்று சொல்கிறார்கள். முறைப்படி பார்த்தால் அந்த வகை வேளாண்மையை ரசாயனமில்லாத வேளாண்மை என்றுதான் சொல்ல வேண்டும். இயற்கை வேளாண்மை என்று சொல்ல முடியாது. ஆனால் வழக்கில் ரசாயனமில்லாத வேளாண்மையையே இயற்கை வேளாண்மை என்று சொல்லும் மரபு உருவாகி விட்டது.

அதனால் நாமும் இங்கு ரசாயனமில்லாத வேளாண்மையையே இயற்கை வேளாண்மை என்று எடுத்துக் கொள்வோம்.

இயற்கை வேளாண்மை அதாவது ரசாயனமில்லாத வேளாண்மையைச் செய்வதே இன்று ஒரு சவாலாக மாறிக் கொண்டிருக்கிறது.

காரணம், ரசாயனமில்லாத வேளாண்மையை அதாவது இயற்கை வேளாண்மையைச் செய்ய ஆடு, மாடுகள் வேண்டும். அவற்றின் சாணமும், ஆட்டாம் புழுக்கையும் வேண்டும்.

முன்பு வேளாண்மை செய்வோர் ஆடு, மாடுகளையும் வளர்த்தனர். அவற்றிற்கு வைக்கோலையும் வயலில் மண்டிக் கிடக்கும் புல்லையும் போட்டு அவற்றிடமிருந்து பாலையும் வயலுக்குத் தேவையான சாணம் மற்றும் ஆட்டாம் புழுக்கை எருவையும் பெற்றுக் கொண்டனர்.

வேளாண்மை ரசாயனத்தை நோக்கி மாற ஆரம்பித்ததும், பால் பொட்டலங்கள் வீடு தேடி வர ஆரம்பித்ததும் வேளாண்மை செய்வோர் மாடு வளர்ப்பையும் குறைத்துக் கொள்ள ஆரம்பித்தனர். இன்று ஆடு, மாடு வளர்க்கும் உழவர்கள் மிகவும் குறைவு.

இப்போது சொல்லுங்கள், இன்றைய சூழ்நிலையில் இயற்கை வேளாண்மை அதாவது ரசாயனமில்லாத வேளாண்மை சாத்தியமா?

ஒரு சில உழவர்கள் ரசாயன உரங்களை கடைகளில் விலை கொடுத்து வாங்குவதைப் போல பஞ்சகவ்வியம், மண்புழு உரம், பாசிகள் போன்றவற்றை விலை கொடுத்து வாங்கிச் செய்கின்றனர். அவற்றை அவர்கள் அங்கக வேளாண்மை என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

வேளாண்மையில் இப்படி இடுபொருட்களை விலை கொடுத்து வாங்கி செய்தால் லாபகரமாக வேளாண்மையைச் செய்வது கடினம் என்றே சொல்லலாம்.

அனைத்து இடுபொருட்களும் விதைநெல், சாண எரு, இயற்கை பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூச்சி விரட்டிகள் உட்பட உழவர்களிடம் இருந்து வேளாண்மை செய்தால்தான் அது லாபகரமாக அமையும்.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் நீங்கள் இங்கே பார்க்கும் வயலை நாங்கள் எப்படி ரசாயனமில்லாத வேளாண்மையாகச் செய்கிறோம் என்பதை இந்தக் காணொளியில் கூற உள்ளோம்.

நாங்களும் இந்த வேளாண்மைக்காக ஆடுகளையோ, மாடுகளையோ வளர்க்கவில்லை. அருகில் ஆடு, மாடு வளர்ப்போரும் குறைந்து கொண்டே வருகின்றனர்.

ஆனால் ஆடுகளை கிடையாக வளர்க்கும் கீதாரிகள் இங்கே உள்ளனர். அவர்களிடம் சொல்லி கோடை காலங்களில் வயலுக்குக் கிடை போடுகிறோம். ஒவ்வொரு வயலுக்கும் நான்கிலிருந்து ஐந்து நாட்கள் கிடை போடுகிறோம்.

பிறகு விதைப்புக் காலத்தில் உழவு செய்து விட்டு, விதைநெல்லை தெளிப்பு முறையில் விதைக்கிறோம்.

நெற்பயிர் வளர வளர, கூடவே களைகளும் வளரும் போது இரண்டு முறை களைபறிப்பு செய்கிறோம்.

அதைத் தொடர்ந்து நெற்பயிர்கள் செழித்து வளரும் இந்தப் பருவத்தில் வேப்பம் பிண்ணாக்கையும், காய்ந்த ஆட்டாம் புழுக்கையையும் நன்றாக மாவு போலப் பொடித்து அவற்றைத் தெளிக்கிறோம். இந்த வேப்பம் பிண்ணாக்கு மற்றும் ஆட்டாம் புழுக்கைக் கலந்த மாவு கலவையானது உரமாகவும் பூச்சிக்கொல்லியாகவும் இரு விதங்களிலும் பயன்படுகிறது.

இதற்குப் பிறகு நெய்பயிர் முற்றியவுடன் அறுவடை செய்து விடுகிறோம்.

வேறு வகையான ரசாயன களைக்கொல்லிகளையோ, ரசாயன பூச்சிக்கொல்லிகளையோ, ரசாயன உரங்களையோ பயன்படுத்துவதில்லை.

இந்த வகையில் நாங்கள் வெள்ளைப் பொன்னி மற்றும் கருப்புக் கவுனி ஆகிய இரு வகை நெய்பயிர்களை வருடந்தோறும் பயிர் செய்து வருகிறோம்.

வெள்ளைப் பொன்னியில் சோறாக்கிக் கொள்கிறோம். இட்டிலி மாவு தயாரித்துக் கொள்கிறோம்.

கருப்புக் கவுணியில் கஞ்சி வைத்துக் கொள்கிறோம். பலகாரங்கள் செய்ய பயன்படுத்திக் கொள்கிறோம்.

எளிமையான முறையில் இயற்கை வேளாண்மை எனும் ரசாயனம் இல்லாத வேளாண்மை செய்ய விழைவோருக்கு இந்த முறை பயன்படும் என்று நம்புகிறோம். இது போன்ற பயனுள்ள தகவல்களுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

நன்றி!

வணக்கம்!

*****

No comments:

Post a Comment

அவனவன் கிரகம்!

அவனவன் கிரகம்! இந்த ஜோதிடர்கள் ஒவ்வொருவரும் எம்எஸ், எம்டி டாக்டர்களைத் தாண்டி சம்பாதிக்கிறார்கள். ஜோதிடர் ஆவதற்கான நீட் தேர்வு குறித்து அற...