7 Feb 2025

மக்கள் ஏன் மது அருந்துகின்றனர்?

மக்கள் ஏன் மது அருந்துகின்றனர்?

இந்தக் கேள்விக்குப் பலவிதமாகப் பதில் கூறலாம்.

அதிலொன்று டாஸ்மாக் இருப்பதால், மது அருந்துகின்றனர் என்பதும் ஒன்றாகும்.

உண்மைதானே?

மதுக்கடைகள் இல்லையென்றால் யார் மது அருந்தப் போகிறார்கள்?

விற்பவர்கள் இருக்கும் வரை வாங்குபவர்களும் இருப்பார்கள் என்பதன் கோட்பாடு இது.

மது அருந்துவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

எங்கள் ஊரில் மூட்டை தூக்கும் முருகராஜ் சொல்லும் காரணம் உடல்வலி என்பது.

“இவுளுக பிராந்தி குடிக்கணும்ங்றதுக்காகவே கொழந்தைகளைப் பெத்துக்கிறாளுவோ!” என்பார் துரை தாத்தா. எங்கள் ஊரில் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு உடல் வலி போவதற்குப் பிராந்தி வாங்கிக் கொடுக்கும் பழக்கம் இருந்தது. 

அது சுகப்பிரசவத்துக்கானது என்பது போல, இப்போது பெரும்பாலான தாய்மார்கள் அறுவை சிகிச்சை முறையால் மருத்துவமனைகளில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதால், இப்போது அந்தப் பழக்கம் எங்கள் ஊரில் அருகி விட்டது. வழக்கொழிந்தும் போய் விட்டது.

அதற்குப் பதிலாக ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்து சமத்துவமாகச் குடிக்கும் பழக்கம் வழக்கத்தில் வந்து விட்டது. தம்பதி சகிதமாகவும், கல்யாணம், கருமாதி போன்ற நிகழ்வுகளில் குடும்பம் சகிதகமாகவும் மது அருந்துகின்ற வழக்கு சர்வ சாதாரணமாகி விட்டது.

எனது நண்பர் சுதந்திரச்செல்வன் சளி பிடித்தால், அதைப் போக்குவதற்காக மது அருந்துவார்.  இப்படி ஆரம்பித்த அவர் இப்போது சளி பிடிக்காத போதும் மது அருந்துகிறார்.

எப்படி இருந்தாலும் மது அருந்துவதற்கு எங்கள் ஊரில் ஒரு குறிப்பிட்ட வயது தேவையாக இருந்தது. அந்த வயது என்பது குறைந்தபட்சம் இருபதுக்கு மேல் இருந்தது. அது அப்போது. இப்போது நிலைமை தலைகீழ். மது அருந்தியதாகப் பிடிப்பட்ட பள்ளி மாணவர்கள் வரை எங்கள் ஊரில் நிறைய சில்லுண்டிக் குடிகாரர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த உங்கள் ஊர் எது என்று மட்டும் கேட்டு விடாதீர்கள். பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக் கூடாது என்பதுதான் இந்த இடத்தில் சரியான புதுமொழியாக இருக்கும்.

இராஜேந்திரன் மாமா நண்பர்களின் சகவாசத்தால் குடிக்க ஆரம்பித்து, இன்று அவரைச் சுற்றி இருக்கும் நண்பர்கள் எல்லாம் குடிகாரர்கள் கூட்டமாகவே இருக்கிறார்கள்.

சொக்கலிங்கம் சித்தப்பா சொல்லும் காரணம் விசித்திரமானது. “விளையாட்டா குடிக்க ஆரம்பிச்சதுடா மவனே! இன்னிக்கு அதுவும் என்னை விட மாட்டேங்குது. நானும் அதை விட மாட்டேங்றேன்.”

“மனசு சரியில்லடா மாப்ளே!” என்பதுதான் குடிப்பதற்குச் சுந்தரமூர்த்தி அத்தான் சொல்லும் காரணம்.

“படுத்தா தூக்கம் வரணுமே. கண்ட கண்ட நெனைப்பா வரும்டா மருமவனே. குவார்ட்டரைக் கவுத்தாத்தான் சித்தே கண்ணசர முடியும். இல்லாட்டி காலையில பைத்தியம் பிடிச்சாப்புல இருக்குதுடா.” என்பது சௌந்தரராஜன் நாட்டாமை சொல்வது.

“இப்படி யாராச்சும் வந்தா போனா குடிக்குறது. நல்ல நாளு, கெட்ட நாளு அதுவுமா குடிக்கிறது. காசு கொடுத்து வாங்கிக் குடிக்க எங்கிட்டே என்னத்தெ இருக்கு?” என்பது மாயாண்டி தாத்தாவின் வாதம்.

இப்படி குடிப்பதற்கு எல்லாருக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது.

மது குடிக்காமலும் சிலராவது இருக்கிறார்களே. அவர்கள் குடிக்காமல் இருபப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

ஏதோ ஒரு பிடிவாதம், ஏதோ ஒரு வைராக்கியம், ஏதோ ஒரு லட்சியப் பிடிமானம், ஏதோ ஒரு கொள்கைப் பிடிப்பு, வேண்டாம் இந்தப் பழக்கம் என்ற நினைப்பு – இப்படி ஏதோ ஒன்று இருக்கலாம்.

இப்போது நாம் மக்கள் ஏன் குடிக்கிறார்கள் என்பதை ஆராய்வதா? குடிக்காமலும் இருக்கறார்களே, அதற்கு என்ன காரணம் என்று ஆராய்வதா?

எந்தக் காரணத்தை ஆராய்ந்தால், டாஸ்மாக்கின் வருமானம் பெருகாமலும், குடும்பத்தின் வருமானம் குறையாமலும் இருக்குமோ அந்தக் காரணத்தை நாம் ஆராய்ந்துதான் ஆக வேண்டும்.

மதுவால் வருமானம் என்பது, அது யாருக்காக இருந்தாலும் அவமானம்!

*****

No comments:

Post a Comment

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...