ஏன் நெரிசல்களில் பொதுமக்களே பலியாகிறார்கள்?
இந்தியாவில்
ஏற்படும் நெரிசல்களையும் அவற்றில் ஏற்படும் உயிரிழப்புகளையும் கவனத்தில் கொண்டு வந்து
பாருங்கள். நெரிசல்களில் பொதுமக்களே பலியாகியிருப்பார்கள். அரசியலிலோ, பொருளாதாரத்திலோ
செல்வாக்கான நிலையில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் யாரும் பலியாகி இருக்க மாட்டார்கள்.
கும்பமேளாவில்
மிக மிக முக்கிய பிரமுகர்களுக்கு (விஐபிக்கள்) வழங்கப்படும் பாதுகாப்பு பொதுமக்களுக்கு
வழங்கப்படுகிறதா?
பொதுமக்கள்
கும்பமேளாவில் ஏற்படும் நெரிசல்களிலும் பலியாகிறார்கள். கும்பமேளாவுக்குச் செல்ல தொடர்வண்டி
நிலையங்களுக்குச் செல்லும் போது ஏற்படும் நெரிசல்களிலும் பலியாகிறார்கள்.
எந்தத்
திருவிழாவிலாவது முக்கிய பிரமுகர்கள் சாகிறார்களா? குறைந்தபட்சம் நெரிசலிலாவது சிக்குகிறார்களா?
எல்லாம் அப்பாவி பொதுமக்கள்தான் சாகிறார்கள். நெரிசலில் நரகத்தைச் சந்திக்கிறார்கள்.
முக்கிய
பிரமுகர்களுக்கு வழங்கப்படும் அக்கறையும் கவனிப்பும் பாதுகாப்பும் இந்திய சமூகத்தில்
சாதாரண பொதுமக்களுக்குக் கிடையாது. சாதாரண பொதுமக்கள் இறந்தால் இரண்டு லட்சமோ, மூன்று
லட்சமோ அல்லது பத்து லட்சமோ நிவாரணம் கொடுத்து விடலாம் என்ற அலட்சியம் இந்தியச் சமூகத்தில்
சர்வ சாதாரணமாக நிலவுகிறது.
கள்ளக்குறிச்சி
கள்ளச்சாராய சம்பவத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். முக்கிய பிரமுகர்கள் சாராயம் அருந்தியதால்
சாக மாட்டார்கள். சாதாரண பொதுமக்கள் சாவார்கள். முக்கிய பிரமுகர்கள் மது அருந்தும்
விடுதிகளையும், சாதாரண பொதுமக்கள் மது அருந்தும் விடுதிகளையும் உற்று நோக்கினாலே உங்களுக்குப்
பல உண்மைகள் புரிய வரும்.
ஏனென்றால்
பொதுமக்களுக்கு வழங்கப்படும் பலவும் பொத்தாம் பொதுவான கந்தக் கோலத்தில், அந்த லட்சணத்தில்
இருக்கின்றன. இது இந்த நாட்டைப் பிடித்த சாபக்கேடா? இவ்வளவுதான் இந்த மக்களுக்கு என்ற
அலட்சிய அளவீடா?
கும்பகோணம்
மகாமகத்திலும் கால் நூற்றாண்டுக்கு முன்பாக அப்படித்தான் நடந்தது.
தூத்துக்குடி
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை எடுத்துக் கொள்ளுங்கள். போராடுபவர்கள் சாதாரண குடிமக்கள்தானே
என்ற அலட்சியம் எப்படி சுட வைக்கிறது?
ஏழைகள்தானே
என்கிற அலட்சியம் இந்திய அரசியலில் புரையோடிப் போய் இருக்கிறது. அவர்களுக்கான மனிதாபிமான
கவனிப்புகள், மனித உரிமை ரீதியான அடிப்படை வசதிகள் எங்கும் செய்து கொடுக்கப்படுவதே
இல்லை.
சென்னையில்
நடைபெற்ற விமானக் கண்காட்சியில் நெரிசலால் உயிரிழந்தோர்களை எடுத்துக் கொண்டாலும், அங்கு
உயிரிழந்தோர் சாதாரண பொதுமக்களே. அதிகாரத்தின் உயர் மட்டத்தில் இருப்போரோ அல்லது முக்கிய
பிரமுகர்களோ அந்தப் பட்டியலில் இருக்கவே மாட்டார்கள்.
பெருவெள்ளத்தில்
சென்னை சிக்கும் போதெல்லாம், ஏரிகள் முன்னறிவிப்பில்லாமல் திறக்கப்பட்டு இறப்பவர்களும்
அப்பாவி பொதுமக்களாகவே இருக்கிறார்கள்.
கொரோனா
பெருந்தோற்றுக் காலத்தில் சிகிச்சைகளின் போது முக்கிய பிரமுகர்களுக்குக் காட்டப்பட்ட
கவனம் அப்பாவி பொதுமக்களுக்குக் காட்டப்பட்டதா என்றால் இல்லை.
குற்றம்
செய்தவர்களுக்குக் கூட சிறை தண்டனையில் கிடைக்கும் பாரபட்சங்களை நீங்கள் சிந்தித்துப்
பார்க்கலாம். சிறை என்பதே தண்டனை எனும் போது, அனைத்து வகை சிறைகளும் ஒரே மாதிரியாகத்தானே
இருக்க வேண்டும். முக்கிய பிரமுகர்களுக்கான சிறை தண்டனையே வேறு மாதிரியாக இருக்கும்.
ஏனிந்த
அலட்சியம்?
இதற்கு
இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று அதிகாரம் இல்லை. மற்றொன்று பொருளாதாரம் இல்லை.
இந்த இரண்டும் இருப்பவர்கள் வெகு சிரத்தையோடு கவனிக்கப்படுகிறார்கள். இந்த இரண்டும்
இல்லாதவர்கள் சிரத்தையின்றிக் கவனிக்கப்படுவதே இல்லை.
அண்மையில்
வெளியான நாட்டின் வரவு செலவு திட்டத்தில் பிரதமருக்கான பாதுகாப்புச் செலவுக்காக ஆண்டுக்கு
489 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதாவது பிரதமருக்கான ஒரு நாள் பாதுகாப்புச்
செலவு 1.34 கோடி, ஒரு மணி நேரத்திற்கு 5.58 லட்சம், ஒரு நிமிடத்துக்கு 9,303 ரூபாய்.
இப்படி
ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒதுக்க முடியாது என்றாலும், கொஞ்சம் கரிசனமும் அக்கறையும் கொண்டு
அடிப்படையான மனிதாபிமான வசதிகளைச் செய்து கொடுப்பதால் என்ன குறை வந்துவிடப் போகிறது?
முக்கியப்
பிரமுகர்களை விட ஒவ்வொரு உயிரும் மிக மிக முக்கியம். ஏனென்றால் உயிர் விலை மதிப்பற்றது.
விலைமதிப்பற்ற உயிர்களுக்கான மதிப்பையும் மரியாதையையும் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு
சனநாயக அரசின் கடமையாகும். அப்படிக் கொடுக்கவில்லையென்றால் அது சடநாயக அரசாகி விடும்.
*****
No comments:
Post a Comment