16 Feb 2025

‘விடாமுயற்சி’யைப் பார்க்க விடாமுயற்சி வேண்டும்!

‘விடாமுயற்சி’யைப் பார்க்க விடாமுயற்சி வேண்டும்!

முயன்றால் முடியாதது இல்லை.

முயற்சி திருவினையாக்கும்.

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.

விடாமுயற்சி பற்றி இருக்கும் அத்தனை வாசகங்களையும் முறியடித்தது 2025 இல் இரண்டு ஆண்டுகள் கழித்து வெளிவந்திருக்கிறது அஜித்தின் ‘விடாமுயற்சி’ என்ற தலைப்பிலான திரைப்படம். இதற்கு முன்பு வெளிவந்த அஜித்தின் திரைப்படம் 2023 இல் வெளியான ‘துணிவு’.

விடாமுயற்சி கொண்ட ஒரு மனிதரிடமிருந்து வெளிவரும் திரைப்படத்துக்கு அத்தலைப்பு ரொம்பவே பொருத்தம். இந்த இரண்டு ஆண்டுகளில் அஜித்தின் கவனம் மகிழ்வுந்து பந்தயக் களத்திலும் (கார் ரேஸ்) இருந்தது குறிப்பிடத்தக்கது.

வில்லன்,

வீரம்,

விஸ்வாசம்

என்கிற ‘வி’ பட வரிசையில் வருவதால் விடாமுயற்சி எப்படியும் வெற்றி பெற்று விடும் என்று நம்பும் அஜித்தின் ரசிகர்கள் ஒரு பக்கம்.

‘விடாமுயற்சி’ என்ற தலைப்புக்கு இத்திரைப்படம் நியாயம் செய்ததா என்பதுதான் நாம் யோசிக்க வேண்டிய மறுபக்கம்.

படத்தின் முதல் சண்டை அர்ஜூனிடமிருந்து ஆரம்பிக்கிறது. அதுவும் இடைவேளைக்குப் பிறகு. அதுவரை அஜித் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அடிவாங்கிக் கொண்டிருக்கிறார். இத்திரைப்படத்தில் நாயகன் அஜித்தின் பெயர் அர்ஜூன். வில்லனாக நடிப்பது அசல் அர்ஜூன். இம்மாற்றத்தின் நிமித்தம் கூட சண்டைக்காட்சியும் அர்ஜூனிடமிருந்து ஆரம்பித்திருக்கலாம்.

இப்படத்தின் கதைதான் என்ன?

கடத்திச் சென்ற மனைவியைத் தேடும் ராமாயண கதைதான் ‘விடாமுயற்சி’. இராமாயணத்தில் உள்நாட்டில் சீதையைத் தொலைத்து வெளிநாட்டில் படைதிரட்டிச் சென்று மீட்பார் ராமன். ‘விடாமுயற்சி’யில் வெளிநாட்டில் இருக்கும் அஜித் மனைவியை வெளிநாட்டில் தொலைத்து வெளிநாட்டில் மீட்கிறார். இது ராமாயணக் கதைக்கும் ‘விடாமுயற்சி’ கதைக்கும் உள்ள வேறுபாடு.

வானரப் படையைத் திரட்டி ராமன் படைநடத்திச் சென்று சீதையை மீட்பது ராமாயணம். அஸர்பைஜானைப் பார்ப்பதற்கு பொட்டல் வெளியாக இருக்கிறது. விலங்குகள், பறவைகள் என்று எதையும் படத்தில் பார்க்க முடியவில்லை. அதனால் வானரப்படை அல்லது பறவைப்படை போன்ற ஒன்றைத் திரட்ட வாய்ப்பில்லாமல், அஜித் தனியொரு ஆளாகத் தேடுகிறார்.

அஜித் இப்படித் தனியொரு ஆளாகத் தேடுவதால் அப்படியொரு தலைப்போ என்னவோ? அப்படி பார்த்தாலும் விடாத தேடல் என்ற தலைப்புதான் பொருத்தமாக இருக்கும்?

படத்தின் காட்சிகளும், வசனங்களும் பல இடங்களில் முன்னுக்கு முரணாக கதைத் தொடர்ச்சியைப் பாதிக்கின்றன. பார்வையாளர்கள் விடாமுயற்சி எடுத்துத் தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஏன் இப்படி? பார்வையாளர்களுக்கு வியப்பையும் அதிர்ச்சியையும் தரும் வகையில் திரைப்படம் இருக்க வேண்டும் என்று இயக்குநர் இப்படி செய்திருக்கலாம். கதையோட்டமும் முடிவும் ஊகிக்கக் கூடியதாக இருப்பதால் வியப்புக்கும் அதிர்ச்சிக்கும் பதில் அயர்ச்சிதான் ஏற்படுகிறது.

‘லியோ’ படத்தில் விஜய் கடைசியாக அர்ஜூனோடு சண்டை போடுவதைப் போல, இத்திரைப்படத்தில் அஜித்தும் கடைசியில் அர்ஜூனோடு சண்டை போடுகிறார். அடிவாங்கி அடிவாங்கி அதனால் துவண்டு போகாமல், விடாமுயற்சியோடு சண்டை போடுகிறார். இது பத்தாயிரம் விடாமுயற்சிகளுக்குப் பிறகு மின்விளக்கைக் (பல்ப்பை) கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கே மின்விளக்கு (பல்ப்பு) கொடுப்பதைப் போல இருக்கிறது.

முழுநீள காதல் கலந்த சண்டைப் படத்தைத் தர முயன்றிருக்கிறார் மகிழ்திருமேனி. அதைக் கோர்த்த விதத்தில் உணர்வோடு ஒன்ற முடியாத காட்சியமைப்புகளும், நம்ப முடியாத கதைமாந்தர்களின் பின்னணிகளும் ‘விடாமுயற்சி’யை விடாமுயற்சியோடு பார்க்க முயற்சித்தாலும் விடாத சோர்வை, அடாத அலுப்பைத் தந்து விடுகின்றன.

படத்தில் நாயகனான அஜித்தின் அழகும் புத்திசாலித்தனமும் நாயகி திரிஷாவைக் கவர்கிறது. அந்தப் புத்திசாலித்தனத்தோடு திரிஷாவை மீட்பார் என்று பார்த்தால், வில்லன்கள் விரிக்கும் வலையில் இவராக விழுந்து, விடாமுயற்சியோடு சண்டையிட்டு, அதுவும் கைகள், கால்கள், தோள்கள் என்று சகல இடங்களிலும் குத்துகள் வாங்கி முடிவில் மீட்கிறார்.

அவ்வளவு அடி வாங்கி, அதுவும் மகிழ்வுந்தைத் தலைகீழாகக் கவிழ்த்து விபத்துக்குள்ளாக்கிச் சண்டையிட்டு, மீண்டும் சண்டையிட வேண்டும் என்றால் அதிலும் ஓர் எதார்த்தம் வேண்டும். அதற்கான எதார்த்தத்தையும், நாயகியை மீட்பதில் நாயகன் எந்த வித புத்திசாலித்தனத்தையும் காட்டாததாலேயே இந்த ‘விடாமுயற்சி’ விழலுக்கு நீர் இறைத்த வீண்முயற்சியாகிறது.

போதைக்கடத்தல், உறுப்புக் கடத்தல், உளவியல் பிறழ்வுகள் என்று எடுத்துக் கொண்டு எதைச் சொன்னாலும் அது பார்வையாளர்களுக்குப் புதிதாகவும் புதிராகவும் தெரியும் என்று விடாமுயற்சியோடு கதை பண்ணுவதைத் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் இந்த ‘விடாமுயற்சி’ படத்திலிருந்து, விடாமுயற்சி செய்தாவது விட வேண்டும் என்பதுதான் இந்தத் திரைப்படத்தைப் பார்த்த பின்பு எனது வேண்டுகோளாக இருக்கிறது.

அஜித்தின் விடாமுயற்சிகள் பாராட்டத்தக்கன என்றாலும், இது போன்ற ‘விடாமுயற்சி’ அவருக்குத் தேவையற்றது.

*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...