யார் அந்த ‘சார்’?
பள்ளியில்
படித்த காலத்தில் தமிழய்யாவை ‘சார்’ என்றால் கண்டிப்பார்கள், தண்டிப்பார்கள். ‘ஐயா’
என்று அழைத்தால்தான் மனம் மகிழ்வார்கள்; நெஞ்சம் நெகிழ்வார்கள்.
இன்று
தமிழய்யாவை ‘ஐயா’ என்று அழைத்தால், “என்ன அய்யா, கொய்யா? சாருன்னு கூப்பிடத் தெரியாதோ?”
என்று முகம் சுளிக்கிறார்கள்.
‘சார்’
என்பதே மதிப்பிற்குரிய, மரியாதைக்குரிய சொல்லாக இருக்கிறது.
யாரையெல்லாம்
‘சார்’ என்கிறோம்?
ஆசிரியர்கள்
மட்டுமல்லாது, அதிகார நிலையில் இருக்கும் அனைவருமே ‘சார்’தான்.
ஒருவரை
விளித்து அழைப்பதற்கான மரியாதையான சொல்லும் ‘சார்’தான்.
துணை
ஆட்சியரை ‘சார் ஆட்சியர்’ என்றே அழைக்கிறார்கள்.
ஆங்கிலேயர்
காலத்தில் வழங்கப்பட்ட மாட்சிமைமிகு பட்டமும் ‘Sir’ பட்டம்தான்.
ஆங்கிலேயர்
அளித்த அடிமைச் சொல்லாக ‘Sir’ என்பதை ‘Slave I Remain’ என்பதன் சுருக்கமாகக் குறிப்பிடுவோரும்
உண்டு. ஆனாலும் ‘சார்’ என்பது அதிகார மிடுக்கோடு சம்பந்தப்பட்ட ஒரு சொல்தான்.
‘சார்’
என்ற பெயரில் விமல் நடித்த படம் ஒன்றும் வந்திருக்கிறது. ‘சார்’ என்பதைப் பெருமை செய்திருக்கிறது.
‘பிடி
சார்’ என்று ஹிப்ஹாப் தமிழா நடித்த படமும் ‘சார்’ என்ற பெயரில் வந்திருக்கிறது. இதவும்
‘சார்’ஐப் பெருமைப்படுத்திய படம்தான்.
ஆனால்,
இந்த ‘சார்’ என்ற சொல்லின் மேல் போர் தொடுப்பது போல வந்தது டிசம்பர் 23, 2025. சென்னை,
கிண்டி, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அந்தத் தினத்திலிருந்து
‘யார் அந்த சார்?’ என்ற வாசகம் புறப்பட்டு இரு பெரும் கட்சிகளும் இரு சிறும் கட்சிகளாக
ஆனதுதான் மிச்சம்.
கொஞ்ச
நஞ்ச மரியாதையையும் 13 வயது பள்ளி மாணவியின் கூட்டுப் பாலியல் விவகாரத்தில் ஆசிரியர்கள்
சிக்கிய கிருஷ்ணகிரி சம்பவத்தால் பறிபோனது.
ஆங்காங்கே
கொஞ்ச நஞ்சம் ஒட்டியிருக்கும் மரியாதையையும் தூத்துக்குடி சம்பவம், திருவள்ளூர் சம்பவம்,
தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சம்பவம், திருவண்ணாமலை சம்பவம், திருப்பூர் சம்பவம்,
திருச்சி சம்பவம் என்று பல சம்பவங்கள் காலி செய்து விட்டன. நிலைமை இதே வேகத்தில் போனால்,
எல்லா மாவட்டங்களின் பெயரிலும் சம்பவம் நடந்து விடுமோ என்ற அச்சமும் எழாமலில்லை.
நிலைமையின்
தீவிரத்தை உணர்ந்து, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட துறைகள்
அறிவிக்கின்றன. விரைவில் நடவடிக்கை எடுப்பதற்கான வரைவு அறிக்கைகள் வெளியாகும் என அதிகார
மையங்களும் அறிவிக்கின்றன.
போகிறப்
போக்கைப் பார்த்தால் மரியாதைக்குரிய வஞ்சப் புகழ்ச்சி சொல்லாக ஆகி விடுமோ ‘சார்’ என்ற
சொல்?
அப்படியாவது
‘சார்’ போய் ’ஐயா’ வந்தால் மகிழ்ச்சிதான்.
யார்
அந்த சார்? என்று கேட்டாலும் யார் ‘சார்’ஐ விட விரும்புவார்கள் ‘சார்’?
என்னதான்
பெரிய ‘சார்’ என்றாலும் சிறந்தோர் சீறும் போது அவர் உய்யார் என்கிறார் வள்ளுவர்.
“இறந்தமைந்த சார்புடையர்
ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.” (குறள்,
900)
அதற்குத்
தீர்வு சொல்வது போல,
“சார்புணர்ந்து
சார்புகெட ஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும்
நோய்.” (குறள், 359)
என்றும்
சொல்கிறாரோ பேராசான்?!
*****
No comments:
Post a Comment