சீமான் ஏன் பெரியாரை எதிர்க்கிறார்?
எதிர்ப்பிலேயே
வாழ்ந்தவர் பெரியார். அவருக்கு எதிர்ப்புகள் புதிதல்ல. இறந்தும் அவர் எதிர்ப்புகளை
எதிர்கொண்டு வருகிறார் என்பதுதான் பெரியாரின் சிறப்பு.
சீமான்
ஏன் பெரியாரை எதிர்க்கிறார்? பெரியார் உயிருடன் இல்லை என்பதும் ஒரு காரணம்தான்.
பெரியாரைத்
தன் தாத்தா என்றவர் சீமான். தாத்தாவை இப்போது பேரன் எதிர்க்கிறார்.
பெரியாரை
விமர்சித்தவர்களையெல்லாம் சீமான் விமர்சித்திருக்கிறார். இப்போது பெரியாரைச் சீமான்
விமர்சிப்பதாகக் கொள்ள முடியாது. பெரியார் மீது தன்னுடைய காத்திரமான எதிர்ப்பைப் பதிவு
செய்கிறார்.
தன்னுடைய
பெரியார் மீதான எதிர்ப்பைப் புள்ளி அளவிலான விமர்சனம் என்றும் சீமான் குறிப்பிடுகிறார்.
இது எதிர்ப்பிலிருந்து பின் வாங்குவதா என்பதும் யோசிப்பிற்குரியது.
தன்னை
விட அண்ணாவும் கலைஞரும் ஆயிரம் மடங்கு பெரியாரை விமர்சித்திருப்பதாகச் சீமான் குறிப்பிடுகிறார்.
விமர்சிப்பது வேறு, எதிர்ப்பது வேறு. அதுவும் தரக்குறைவாக எதிர்ப்பது முற்றிலும் வேறு.
பெரியாரைத்
திட்டுவதாக இருந்தால் தன்னுடைய கட்சியில் சேர்ந்தவர்களை வெளியேறி விடுங்கள் என்று அறிவித்தவர்
சீமான். இப்போது அவரே திட்டுகிறார் என்றால், அவரே அவரது கட்சியிலிருந்து அவரை வேறியேற்றிக்
கொள்ள முடியுமா?
ஒருவரை
எதிர்க்கும் போது அவருக்கான அனுதாபம் சேர்ந்து விடாதபடி மாற்று ஆளுமைகளை முன் வைப்பது
அரசியல் சாணக்கியம். சீமான் பெரியாருக்கு மாற்றாக வ.உ.சிதம்பரனாரை, வேலுநாச்சியாரை,
பூலித்தேவரை முன்நிறுத்துகிறார். அவர்களைத் தன் பாட்டன் பாட்டியர் என்கிறார். தர்க்க
ஒழுங்கோடு பார்க்கும் போது அன்று தாத்தா என்று சொன்ன பெரியாரை இன்று சீமான் எதிர்ப்பார்
என்றால், பாட்டன், பாட்டியர் என்று சொல்வோரையும் அவர் பிற்காலத்தில் எதிர்ப்பாரா என்ற
கேள்வி எழுகிறது.
பெரியாரின்
கொள்கைகைளைத் தனது கொள்கைகளாகக் கொண்டு பயணித்த ஒருவர் இப்படி தடம் மாற காரணங்கள் என்ன
இருக்க முடியும்?
அரசியல்
நோக்கர்கள் இரு காரணங்களை வலுவாக முன் வைக்கிறார்கள்.
முதல்
காரணம்,இப்போதுள்ள தமிழக அரசியல் நிலைமையில் திராவிடத்தை எதிர்த்து அல்லது ஆதரித்து
என்று இரு வகைகளில்தான் அரசியல்செய்ய வேண்டியிருக்கிறது. திராவிடத்தை ஆதரித்து என்றால்
அதன் முக்கிய ஆணிவேர் பெரியாரிடமிருந்து தொடங்குவதால் பெரியாரிடமிருந்துதான் தொடங்க
வேண்டும். அப்படிச் செய்து பார்த்து, அது வேலைக்கு ஆகாது என்று உணர்ந்த காரணத்தால்
எதிர்நிலைபாட்டைச் சீமான் எடுத்திருக்கலாம்.
மற்றொரு
காரணம், வலுவான ஒன்றை எதிர்க்கும் போது, பலமான கவனத்தைப் பெற முடியும் என்பது. தமிழகத்தைப்
பெரியார் மண் என்று சொல்வதைச் சீமான் ஏற்கிறார். இல்லையென்றால் பெரியாரே அவரைப் பொருத்த
வரையில் மண்தான் என்று சொல்ல மாட்டார். பெரியாரை எதிர்ப்பது அவருக்குப் பலமான பிம்பத்தைப்
பெற்றுத் தரும்.
பொதுவெளியிலும்
சீமானின் நிலைப்பாட்டைக் கூர்ந்து அவதானிப்பவர்கள் பின்வரும் கருத்துகளை முன் வைக்கிறார்கள்.
அது
என்னவென்றால், பெரியாரை எதிர்ப்பது என்பது இந்துத்துவாவை ஆதரிப்பது என்பதாக.
மற்றுமொரு
பார்வை என்னவென்றால், திராவிடத்திலிருந்து தமிழ்த் தேசியத்தை நோக்கி நகர்த்தும் சீமானின்
முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.
அது
அப்படித்தானா என்றால், எப்போதிலிருந்து சீமான் பெரியார் எதிர்ப்பைக் கைக்கொள்கிறார்
என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
விஜய்யின்
தமழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பிக்கப்பட்ட பிறகு இப்படி அவர் பேசத் துவங்கியிருப்பதை
நோக்க வேண்டியிருக்கிறது. விஜய் திராவிடத்தையும் தமிழ்த் தேசியத்தையும் இரு கண்கள்
என்று கூறியதிலிருந்து அதற்கு மாறான கருத்தை முன் வைக்கத் துவங்கினார் சீமான். அப்படி
ஆரம்பித்த அவர், தற்போது பெரியார் எதிர்ப்பில் வந்து நிற்கிறார். ஒரு வகையில் விஜய்யை
விட தனித்து அரசியல் செய்வதற்கான ஒரு பிம்பத்தை உருவாக்குவதற்காகவும் சீமான் இதைக்
கைக்கொண்டிருக்கிறாரா என்ற சந்தேகத்தையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.
பெரியார்
எதிர்ப்பு குறித்து சீமான் கூறும் கருத்துகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது.
பெரியாரை ஆதரித்துப் பேசியது உண்மைதான் என்றும், தற்போது தலைவலிக்கிறது, மாத்திரை போடுகிறேன்
என்றும் அவர் கூறுகிறார். போடும் மாத்திரை பக்க விளைவுகளை உருவாக்காமல் இருக்க வேண்டும்
என்பதுதான் இப்போதுள்ள மாத்திரைகள் குறித்த பொதுவெளியின் கவலை.
அதே
நேரத்தில் அவரது கட்சியிலேயே, சீமானின் பெரியார் எதிர்ப்புக் கருத்துகளை அவருடைய சொந்தக்
கருத்துகள் என்றும் அவை கட்சியின் கருத்துகள் அல்ல என்று எழுந்திருக்கும் அலைகளையும்
அவர் கவனிக்க வேண்டும்.
பெரியாரை
எதிர்ப்பதைத்தான் தன்னுடைய வேலை என்று கிளம்பியிருக்கும் சீமான் குறித்து என்ன சொல்வது?
“செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.” (குறள், 26)
என்ற
குறளை,
செயற்கரிய செய்வார் பெரியார் என்று
மாற்றினாலும் அது பெரியாருக்குப் பொருந்தும். பெரியாரை எதிர்க்க வேண்டும் என்றால்,
அதாவது பெரியாரை மிஞ்ச வேண்டும் என்றால் அது சாமானியப்பட்ட காரியம் அன்று. பெரியாரின்
பேச்சு மற்றும் எழுத்துச் செயல்பாட்டைக் கொண்டு மட்டும் அவரை எதிர்க்க முடியாது. அவரது
களச்செயல்பாடு என்பது அவரது பேச்சு, எழுத்தைத் தாண்டிய வீர்யமானது.
சொல்லாடுவது
போன்றதன்று களமாடுவது.
பேச்சோடும்
எழுத்தோடும் களமாடியதாலே அவர் பெரியார். பெரியார் என்றால் வெறும் பேச்சு மட்டுமென்றால்,
பெரியாரை எதிர்ப்பதற்கான வேலையே சீமானுக்கு வந்திருக்காது.
இத்துடன்
பெரியார் கூறியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
“நான் ஒரு மொட்டை மரம். கல்லடி பட்டாலும்
இழக்க ஒன்றும் இல்லை. நான் நின்றால் நெடுஞ்சுவர். வீழ்ந்தால் குட்டிச்சுவர். நான் பொது
மக்களுக்காக எதையும் செய்கிறேன். புகழ், இகழ் எது வந்தாலும் ஒன்றுதான். என் நோக்கம்
நன்மைதான்.” இப்படித்தான் எதிர்ப்புகளைப் பற்றிச் சொல்கிறார்
பெரியார்.
அத்துடன்,
“என்னுடைய செயல்பாடுகளில் தவறுகள் இருக்கலாம்.
அதற்கு என்னுடைய அறிவுக்குறைவோ, அனுபவக் குறைவோ காரணமாக இருக்கலாமே தவிர நாணயக்குறைவு
காரணமாக இருக்காது.” என்றும் சொல்கிறார்.
அரசியல்
யுத்தத்தில் யாரும் யாரையும் எதிர்க்கக் கூடாது என்று சொல்ல முடியாது. ஆனால், எதிர்ப்புக்கான
காரணங்கள் மிக வலுவாக இருக்க வேண்டும். முன்னுக்குப் பின் முரணாக எதிர்க்கும் போது,
அது ‘அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை’ என்ற வாசகத்தை நினைவூட்டிச்
செல்கிறது. அது போல அரசியலில் நிரந்தர ஆதரிப்பவர்களும் இல்லை, எதிர்ப்பவர்களும் இல்லை
என்றாகி விடக் கூடாது அல்லவா!
*****
No comments:
Post a Comment