12 Feb 2025

12 லட்ச ரூபாய் வருமான வரி விலக்கின் பின்னணி என்ன?

12 லட்ச ரூபாய் வருமான வரி விலக்கின் பின்னனி என்ன?

01.02.2025 அன்று எட்டாவது முறையாக நாட்டின் வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வருமான வரி இல்லை என்று அறிவித்துள்ளார். அத்துடன் வருமான வரிக்கான நிலைக்கழிவாக ரூ. 75,000 /- உம் அறிவித்துள்ளார். இதனால் ஆண்டு வருமானம் ரூ. 12,75,000/- வரையிலான தொகைக்கு வருமான வரி கிடையாது.

இப்படி ஒரு வருமான வரி சலுகையை மாத சம்பளதாரர்கள் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மாதச் சம்பளம் ஒரு லட்சம் வரை பெறுபவர்களை நிதியமைச்சரின் இந்த அறிவிப்பு ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்றால் அதில் மிகையேதும் இல்லை. முன்பு இந்த வருமான வரிச் சலுகை ஏழு லட்ச ரூபாயாக இருந்தது, தற்போது ஒரே தாவலில் 12 லட்சமாக மாறியுள்ளது 80 சதவீதத்துக்கு மேலான உயர்வாகும்.

இதனால் மாத சம்பளதாரர்களுக்கு நன்மை கிடைத்திருக்கிறது. நாட்டிற்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது?

இந்த வருமான வரி வரம்பு உயர்வால் அரசுக்குக் கிடைத்து வந்து 3 லட்சம் கோடி வரி வருமானம் 2 லட்சம் கோடியாகக் குறைகிறது. அதாவது, ஒரு லட்சம் கோடி ரூபாய் வரி வருமானம் பாதிக்கப்படுகிறது.

இதை அரசு எப்படி ஈடு செய்யும்? அரசின் வரி வருவாய்களில் வருமான வரி முக்கிய பங்கு வகிக்கிறது. 22 சதவீத வரி வருமானம் வருமான வரியிலிருந்து அரசுக்குக் கிடைக்கிறது. அதில் மூன்றில் ஒரு பங்கு இனி குறையும் என்றால் அரசு இப்படி ஒரு முடிவை எப்படி எடுத்தது? ஏன் எடுத்தது?  அதன் பின்னணிகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

வருமான வரியின் வரம்பை உயர்த்துவதால் மிச்சமாகும் தொகையை மக்கள் செலவு செய்வார்கள் என்று அரசு எதிர்பார்க்கிறது. அப்படிச் செலவு செய்தால் அச்செலவுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மூலம் அரசுக்கே அது திரும்ப வாய்ப்பிருக்கிறது.

அதாவது மிச்சமாகும் வரித்தொகையில் மக்களைச் செலவு செய்ய வைக்க முடியும் என்று அரசு நம்புவதன் வெளிப்பாடு இது. இது ஒரு வகை அமெரிக்க மனோபாவம்தான்.

ஏன் அரசு மக்களைச் செலவு செய்வதற்கு, அவர்களின் கைகளில் இப்படிப் பணத்தைப் புரள விட வேண்டும்?

தற்போதைய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் குறியீட்டில் முக்கிய பங்கு வகிப்பவை நுகர்வும், பெருநிறுவனங்களின் வளர்ச்சியும்தான்.

அண்மைக் காலமாக நாட்டு மக்களின் நுகர்வு குறைந்து வருகிறது. மக்களின் நுகர்வு குறைந்தால் பெருநிறுவனங்களின் உற்பத்தித்திறனில் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் பெருநிறுவனங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

நுகர்வு குறைவும், பெருநிறுவனங்களின் வளர்ச்சிப் பின்னடைவும் பொருளாதார மந்த நிலைக்கான அறிகுறிகள். அப்படியான அறிகுறிகள் நாட்டில் தெரியத் துவங்கி விட்டன. இதை மாற்றிப் பொருளாதாரத்தை முடுக்கி விடும் நோக்கில்தான் இவ்வித வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

வருமான வரியில் வழங்கப்படும் இச்சலுகைகளை எப்படியும் சரக்கு மற்றும் சேவை வரியாகவோ, ஒரு வேளை சுற்றுலாவுக்காக மக்கள் செலவு செய்தாலும் சுங்கச்சாவடி கட்டணங்களாகவோ வசூல் செய்து விட முடியும் என்ற நம்பிக்கை அரசுக்கு இருப்பதாகவே தோன்றுகிறது.

அப்படியானால் எப்படி இருந்திருக்கலாம், இந்த வருமான வரிச் சலுகை என்றால், முன்பு பழைய வருமான வரி முறையில் இருந்தது போல இவ்வளவு சேமித்தால் அந்தச் சேமிப்புக்கு வரிச்சலுகை என்பதாக இருக்கலாம். அப்படி இருந்திருந்தால் மக்களின் சேமிப்பு மானோபாவமாவது வளர்ந்திருக்கும். இப்போது மக்களின் நுகர்வு மனோபாவமே வளர வாய்ப்பிருக்கிறது. அப்படி வளர்ந்தால்தானே பெருநிறுவனங்களின் வளர்ச்சிக்கான சந்தை உருவாகும்.

என்றாலும் வரிச்சலுகைக்காகத்தான் சேமிக்க வேண்டுமா என்ன? வரிச்சலுகை இல்லையென்றாலும் சேமிப்பதும், சேமித்ததைப் பாதுகாப்பாக முதலீடு செய்வதும் நல்ல விசயம்தானே. மக்கள் அதைச் செய்யலாம்.

மிச்சமாகும் வரித்தொகையைச் சேமித்து முதலீடு செய்வது மக்களுக்கு நன்மை தரும். ஒரு வேளை செலவு செய்தால் அது மீண்டும் வரியாகி அரசுக்கு நன்மை தரும். எந்தப் பக்கம் என்றாலும் அது ஏதோ ஒரு வகை நன்மையில் முடிகிறது. இப்போது அந்த நன்மை யாருக்கு என்பதற்கான பதில் நம் ஒவ்வொருரிடமும்தான் அடங்கியிருக்கிறது.

*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...