5 Feb 2025

குழந்தைகளைத் தங்கமே பவுனே என்று ஏன் கொஞ்சுகிறார்கள்?

குழந்தைகளைத் தங்கமே பவுனே என்று ஏன் கொஞ்சுகிறார்கள்?

தாய்மார்கள் குழந்தைகளைத் தங்கமே, பவுனே என்று செல்லம் கொஞ்சுவதில் அர்த்தம் இருக்கிறது.

அந்த அர்த்தத்தின் பின்னணியைப் பின்வரும் தகவல் விளக்கும்.

இந்தியப் பெண்களிடம் 24,000 டன் தங்கம் உள்ளது.

இது உலக அளவில் 11 சதவீதம் ஆகும்.

இந்தியாவில் இருக்கும் தங்கத்தில் 40 சதவீதம் தென்னிந்தியப் பெண்களிடம் உள்ளது.

இதில் தமிழ்நாட்டுப் பெண்களிடம் இருப்பது 25 சதவீதம் ஆகும்.

இதனால் தாய்மார்கள் குழந்தைகளைத் தங்கம் என்று செல்லம் கொஞ்சுவதில் எந்தத் தவறும் இல்லை என்று சொல்லத் தோன்றுகிறதுதானே?

செல்லம் கொஞ்சும் போது தங்கம் ஆகுபெயராகி விடுகிறது. அதிலும் பவுன் என்பது தங்கத்திற்கு ஆகி வரும் அளவையாகு பெயர்.  இது எட்டு கிராம் தங்கத்தைக் குறிக்கிறது.

மெட்ரிக் அளவைகள் வந்து விட்டப் பிறகும் தங்கம் 8 கிராம் கொண்ட பவுனாகவே இன்றும் நடைமுறையில் கணக்கிடப்படுகிறது.

முன்பு தோலா, கழஞ்சு போன்ற தங்க அளவை முறைகள் இருந்திருக்கின்றன.

11.7 கிராம் தங்கத்தை ஒரு தோலா எனக் குறிப்பிடுகிறார்கள்.

கழஞ்சு என்பது ஐந்து கிராம் தங்கம்.

ஒன்றரைக் கழஞ்சு ஒரு பவுன் தங்கம்.

பிஸ்கட் தங்கம் என்பது 16 பவுன் கொண்ட 24 கேரட் தூய தங்கமாகும், என்றாலும் 24 கிராம் தூய தங்கத்தை நீங்கள் 10 கிராம் அளவிலான தங்க பிஸ்கட்டுகளாகவும் வாங்கலாம். தற்போது 24 கேரட் தூய தங்கம் எதுவாக இருந்தாலும் அது பிஸ்கட்டாகக் கருதப்படுகிறது.

தங்கத்தின் அளவைகள் இப்படி இருந்தாலும், இந்தியாவில் ஒருவர் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம் என்பதற்கும் கட்டுபாடுகள் இருக்கின்றன.

மணமான பெண்கள் 500 கிராம் வரையிலும், மணமாகாத பெண்கள் 250 கிராம் வரையிலும், ஆண்கள் மணமானாலும் ஆகாவிட்டாலும் 100 கிராம் வரையிலும் தங்கம் வைத்துக் கொள்ளலாம்.

அதற்கு மேல் தங்கம் வைத்திருந்தால் அத்தங்கம் உங்களிடம் இருப்பதற்கான சரியான வருவாய் வழிக் காரணங்கள் இருக்க வேண்டும். அதாவது அது உங்கள் பரம்பரைச் சொத்தாக இருக்க வேண்டும் அல்லது முறையான வழியில் உழைத்து ஈட்டிய வருமானத்தில் வாங்கியதாக இருக்க வேண்டும். அப்படிச் சரியான காரணங்கள் இல்லாமல் போனால், அதற்கான வருமான வரியை அபராதத்துடன் கட்ட வேண்டியிருக்கும்.

எது எப்படி இருப்பினும் குண்டுமணி தங்கமேனும் உங்களிடம் இருப்பது நல்லது. அதற்குக் கெளரவமான காரணமும் இருக்கிறது.

ஒரு தங்க மோதிரம் அணிந்திருப்பவரின் மதிப்பு சபையில் உயர்வாகத்தான் இருக்கிறது. கூடவே தங்கச் சங்கிலியும் அணிந்திருந்தால் இன்னும் உயர்வாகிறது. இது ஓர் இந்திய மனோபாவம் என்றும் சொல்லலாம். மனிதர்களை மனிதர்களாக மதிப்பிடுவதை விட, அவர்களை அவர்களிடம் இருக்கும் தங்கத்தைக் கொண்டு மதிப்பிடும் மனோபாவம் இது.

சில நேரங்களில் மற்றவர்களின் மனோபாவத்திற்கு ஏற்பவும் வாழ வேண்டியதாகத்தானே இருக்கிறது! சில நேரங்களிலா, பல நேரங்களில் அப்படித்தான வாழ வேண்டியிருக்கிறது என்கிறீர்களா? அதுவும் உண்மைதான்.

இந்த உண்மையுடன் இன்னோர் உண்மையையும் சொல்ல வேண்டும் என்றால் அவசரத்துக்கு உற்ற நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவுவதைத் தாண்டித் தங்கம் ஓடோடி வந்து உதவும்.

தங்கம் இருந்தால் அதை அடகு வைத்தோ, விற்றோ சுலபமாக அவசரத் தேவைக்கான பணத்தை ஏற்பாடு செய்து கொள்ளலாம். ஏனென்றால், தங்கம்தான் உண்மையான பணம். ஒரு நாட்டின் பணம் அந்த நாட்டில் மட்டும்தான் செல்லுபடியாகும். தங்கம் அப்படியல்ல. எல்லா நாட்டிலும் செல்லுபடியாகும் உண்மையான பணம் அதுதான்.

உங்கள் நாட்டின் பணத்தைக் கொண்டு நீங்கள் உங்கள் நாட்டில்தான் பிழைக்கலாம் என்றால், தங்கத்தைக் கொண்டு நீங்கள் எந்த நாட்டிலும் பிழைக்கலாம். தங்கள் பிள்ளைகளும் இப்படி எந்த நாட்டில் சென்றாலும் சாமர்த்தியமாகப் பிழைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகக் கூட தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைத் தங்கமே என்றும் பவுனே என்றும் செல்லம் கொஞ்சுவதை வழக்கமாக வைத்திருக்கலாம் இல்லையா!

எவ்வளவு அர்த்த புஷ்டியோடு செல்லம் கொஞ்சுவதிலும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் நம் தாய்மார்கள்!

*****

No comments:

Post a Comment

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்!

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்! அண்மைக் காலத்தில் எக்ஸ் தளத்தில் பரபரப்பான இரண்டு சொல்லாடல்கள் ‘திரும்பிப் போ’ என்பத...