21 Jan 2025

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை)

-         விகடபாரதி

போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிறது. எதற்காக இந்த நீச்சல் – எதிர் நீச்சல் எல்லாம்? விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பெருநகரத்தில் இதை எப்படித் தவிர்க்க முடியும்? இங்கு எல்லாருக்கும் இப்படித்தான். வசதியைப் பொருத்து பேருந்தில் நீந்தலாம், ரயிலில் நீந்தலாம், டூ வீலரில் நீந்தலாம், காரில் நீந்தலாம். அவ்வளவுதான் வித்தியாசம். சைந்தவிக்கு ஆயாசமாகத்தான் இருந்தது. அபார்ட்மெண்டுக்குள் நுழைந்ததும் கதவு திறக்கும் சத்தத்தைச் சரியாக அவதானித்துக் கொண்டு பக்கத்து அபார்ட்மெண்டில் விளையாடிக் கொண்டிருந்த யாழினி ஓடி வந்தாள். அம்மா என்றபடி பின்புறம் தழுவிக் கொண்டாள். சைந்தவிக்கு அதில் ஒரு சந்தோசம் எப்போதும் ஒட்டிக் கொள்ளும். எல்லா பிள்ளைகளும் மம்மி என்று வந்து கட்டிக் கொள்ளும் பெருநகரக் கலாச்சாரத்தில் தன் மகள் அம்மா என்று வந்து கட்டிக் கொள்வதில் தனிப்பட்ட பெருமிதம் அவளுக்கு. எத்தனையாவது படிக்கிறே என்றால் மூன்றாம் வகுப்பு என்று சொல்வாள். சைந்தவியின் தயாரிப்புதான் அதுவும்.

என்னடா கண்ணு அப்பா இன்னும் வரலீயா என்ற கேள்விக்கு யாழினி உதட்டைப் பிதுக்கியதற்கு முன்பே அவளுக்கு உதயக்குமார் இன்னும் வரவில்லை என்பது தெரிந்திருந்தது.

அம்மா இன்னிக்கு உங்க கூட நிறைய பேசணும் என்றாள் யாழினி.

என்னோட யாழினி கூட பேசுறதுல நான் எப்போ குறை வெச்சேன் என்றாள் சைந்தவி.

இல்லம்மா இது வேற?

வேறயா? அப்படியென்ன புதுசா? அம்மா கை,கால், முகம் கழுவிட்டு வரட்டுமா?

ம் சீக்கிரம்.

வேக வேகமாக டீயையும் போட்டுக் கொண்டு வந்து அமர்ந்தாள் சைந்தவி.

யாழினி தயாரானாள். அம்மா எனக்கு மூணு விதமான கோல்.

கோல்ன்னா?

அதான் குறிக்கோள்.

அந்தக் கோளைத்தான் சொன்னீயா? அப்படின்னா?

அதாம்மா எய்ம்.

அப்படின்னா?

என்னமா நீ? லைப் டைம் டார்கெட்.

உன்னுடைய வாழ்நாள் இலக்குகள். அதானே?

அதேதாம்மா. எனக்கு மட்டும் ஏன்மா இப்படி டக்குன்னு தமிழ்ல வர மாட்டேங்குது?

அதெ விடு. ஒவ்வொண்ணா சொல்லு பார்ப்போம் என்றவள், இந்த அளவுக்கு இந்த நகரத்தில் யாழினி தமிழில் ஆர்வமாக இருப்பதே பெரிது என நினைத்தாள்.

மூணு விதமான இலக்குகள் அம்மா.

என்ன திடீர்ன்னு?

ரொம்ப கேள்விக் கேட்காதேம்மா என்றதும் சைந்தவி அமைதியானாள்.

மொதல்ல டாக்டரா ஆவப் போறேன். ரெண்டாவது என்னை விட பெரிய டாக்டரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். மூணாவது உங்களை எல்லாம் அமெரிக்காவுக்கு அழைச்சுகிட்டுப் போயிடுவேன்.

எதுவும் சொல்லாமல் சைந்தவி யாழினியையே உற்றுப் பார்த்தாள். இதற்கு என்ன காரணம் என்று அவளே சொல்லட்டும் என்று காத்திருந்தாள்.

எங்க மிஸ் இப்படித்தான் டார்கெட் வெச்சிக்கணும்ன்னு சொன்னாங்கம்மா. எல்லாரையும் இப்படி டார்கெட் பிக்ஸ் பண்ணச் சொன்னாங்க. நான் பிக்ஸ் பண்ண டார்கெட்டத்தான் ரொம்ப ரொம்ப அப்பிரிசியேட் பண்ணாங்க தெரியுமா.

சைந்தவிக்கு நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.

அவளுக்கும் மூன்று விதமான வாழ்நாள் இலக்குகள் இருந்தன. கிட்டதட்ட யாழினி வயதில் உருவானதுதான். அதை அவ்வளவு உடும்புப் பிடியாகப் பிடித்து வைத்திருந்தாள். அதில் முதலாவது டாக்டரைத்தான் கல்யாணம் செய்வேன் என்பது. இரண்டாவது அவர் அவளை விட மூன்று வயது அதிகமாக இருக்க வேண்டும் என்பது. மூன்றாவது ஒரே ஒரு குழந்தை அதுவும் ஆண் குழந்தையை மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது.

அநேகமாக சைந்தவி நினைத்தபடி நடந்திருக்க நிறைய வாய்ப்புகள் இருந்தன. அதற்கான சாத்தியக்கூறுகளை அவளே கொன்று போட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அவள் கும்பகோணம் கல்லூரியில் மூன்றாமாண்டு பி.எஸ்.ஸி மேதமேடிக்ஸ் படித்துக் கொண்டிருந்தாள். கணிதமேதை ராமானுஜம் படித்த அதே கல்லூரி. காலையில் கல்லூரிக்குள் நுழைந்ததும் முதல் வேலை அவர் படித்த வகுப்பறையைப் பார்த்து விட்டு மானசீகமாக வணங்கி விட்டுதான் வகுப்பறைக்குள் நுழைவாள். அப்போதே இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேதமேடிக்ஸில் சேர்வற்கு நுழைவுத் தேர்வை எழுதியிருந்தாள். அவளுடைய நல்ல நேரம் அங்கு சேர்வதற்கான கடிதமும் அவளுக்கு வந்ததிருந்தது. எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்த போது முதலாமாண்டு மேதமேடிக்ஸ் படிக்கும் சூர்யக்குமார், எக்ஸ்க்யூஸ் மீ சைந்தவி, இந்த இன்டெக்ரல் கால்குலஸ்ல ஒரு டவுட். சீனியர்கள்கிட்டெ கேட்டுப் பார்த்தேன். எல்லாரும் உங்களைத்தான் சொன்னாங்க. நீங்க ரொம்ப அவுட்ஸ்டேன்டிங்னாங்க. கொஞ்சம் கிளியர் பண்ண முடியுமா? புரபஸர்கிட்டெ கேட்குறதுக்கு ஒரு மாதிரியா இருக்கு என்று வந்தான்.

இவள் ஒரு விதமான முறையில் அந்தக் கணக்கிற்கான விடையை போட்டு முடித்ததும், அவன் வேறு ஒரு விதமான முறையில் போட்டு அந்தக் கணக்கிற்கான விடையைக் கொண்டு வந்தான். சைந்தவி ஒரு நிமிடம் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தாள். அவளுக்குத் தன்னை விட இந்தக் கல்லூரியில் யாரும் கணக்கில் விஞ்சியவர்கள் இருக்க முடியாது என்ற எண்ணம் இருந்தது. அந்த ஈகோ இப்போது முட்டிக் கொண்டு வந்தது.

அவளுக்கு இப்போது கோபம் வந்தது. அதான் தெரியுதுல்ல. பிறகு எதுக்கு வந்து கேட்டியாம் என்றாள்.

தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க இதோட ஸ்டெப்ஸை சொல்ல சொல்லத்தான் எனக்கு இப்படியும் போடலாம்ன்னு தோணுச்சு. சத்தியமா உங்களைப் பாக்குறதுக்கு முன்னாடி இந்த ஐடியாவே இல்ல. எனக்கே ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. நீங்க ரொம்பவே அவுட்ஸ்டாண்டிங்தான். சீனியர்ஸ் சும்மா சொல்லல. ரொம்ப தேங்க்ஸ்.

முகத்தைச் சுளித்துக் கொண்டு வேக வேகமாக நகர்ந்தவளுக்கு இரவெல்லாம் சூரியக்குமார் கனவில் வந்து கொண்டே இருந்தான். அவனுடைய நினைவை அகற்ற எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தாள். அகற்ற நினைக்க நினைக்க அவன் திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்தான். அவனை இனி பார்க்கவே கூடாது என்று நினைத்துக் கொண்டாள். அன்று நடந்த மேத்ஸ் கிளப் மீட்டில் அவனைப் பார்க்கும் படி ஆனது. ஆய்லரின் சூத்திரம் ஒன்றை அவன் அவ்வளவு எளிமையாக விளக்கியது அவளை ஆச்சரியத்தில் தள்ளியது. அன்றிலிருந்து அவள் கனவில் அவன் பல கணக்குகளை மிக எளிமையாக நடத்த ஆரம்பித்தான். ச்சே என்ன இது? ராமானுஜத்துக்குக் கூட கனவுல நிறைய கணக்குகளுக்கான தீர்வு கிடைச்சிருக்கு. எனக்கு இப்படி இருக்கே என்று அவள் அலுத்துக் கொண்டாள்.

யாரைப் பார்க்கக் கூடாது, யாரைச் சந்திக்கக் கூடாது, யாருடன் பேசக் கூடாது என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தாளோ அவனை இப்போதெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது, அவனை அடிக்கச் சந்திக்கக் கூடாதா என மனம் ஏங்கியது. அவன் அடிக்கடி வந்து ஏதாவது அவளிடம் சந்தேகம் கேட்கக் கூடாதா என்று தவித்துப் போனாள்.

அவளுக்கு மூன்றாமாண்டு பி.எஸ்.ஸி. முடிந்ததும் தரமணியில் இருக்கும் இந்தியன் இண்ஸ்டிட்யூட் ஆப் மேதமேடிக்ஸில் சேரும் ஆர்வம் போயிருந்தது. எம்.எஸ்.ஸியோடு இன்டக்ரேட்டட் பி.ஹெச்.டி. பண்ணுவதற்கான அருமையான வாய்ப்பு அது. அதுவும் மாதா மாதம் உதவித்தொகை வேறு.

அவளால் சூரியக்குமாரைப் பார்க்காமல் இருக்க முடியாது என்பது போலத் தோன்றியது. அதே கல்லூரியில் எம்.எஸ்.ஸி. மேதமேடிக்ஸ் சேர்ந்தாள். சிநேகிதிகள், பேராசிரியர்கள் எல்லாம் கூப்பிட்டுப் பேசினர். நல்ல வாய்ப்பை விட்டு விட்டு இங்கு ஏன் படிக்கிறாய் என்று அவளை அனுப்பி வைக்கப் பார்த்தனர். கல்லூரி முதல்வரே அழைத்துப் பேசினார். மகளின் போக்கு புரியாமல் அப்பாவும் அம்மாவும் குழம்பினர். சைந்தவி அதே கல்லூரியில்தான் படிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தாள். ஏன்னா இது ராமானுஜம் படித்த காலேஜ். இதெ விட்டுட்டு எப்படிப் போறது என்றாள்.

இவள் எம்.எஸ்.ஸி. இரண்டு ஆண்டுகளை முடித்ததும் சூரியகுமார் பி.எஸ்.ஸி. மேதமேடிக்ஸை முடிந்திருந்தான். பி.ஹெச்.டி.க்கான அருமையான வாய்ப்பு இப்போதும் சைந்தவிக்குக் காத்திருந்தது. சூரியக்குமார் அதே கல்லூரியில் எம்.எஸ்.ஸி. சேர்ந்தான். சைந்தவி பிடிவாதமாக அதே கல்லூரியில் கெஸ்ட் லெக்சரராகச் சேர்ந்தாள்.

அவளுக்கு கணக்கில் ஆராய்ச்சி செய்வதில்தான் ஆர்வம். ஆனால் டீச்சிங் புரபஷன்தான் பிடிக்கிறது என்றாள். பி.ஹெச்.டியை முடித்து விட்டு அதைப் பண்ணு என்று ஹெச்.ஓ.டி சொன்னதுக்கு இதுக்கு மேல டீச்சிங்கைத் தவிர வேறு எதையும் பண்ணணும்னனு தோணல என்றாள். ஆனால் அவள் தனிப்பட்ட முறையில் டோபாலஜியில் ஹாஸ்ட்ராப் ஸ்பேஸ் குறித்து ஒரு தீசிஸை எழுதிக் கொண்டிருந்தாள்.

எப்படியோ அங்கிருந்த பேராசிரியர்களிடம் பேசி, சூரியக்குமாருக்குத் தினமும் வகுப்பு வரும்படி அட்டவணையை அமைத்துக் கொண்டாள். அவனது எம்.எஸ்.ஸி. இரண்டாமாண்டின் கடைசி வகுப்பு முடிவடைந்ததும் அதற்கு மேல் முடியாது என்று அவனை அழைத்துக் காதலைச் சொன்னாள். சூரியக்குமார் இதை எதிர்பார்க்காததால் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து அப்படியே கல்லூரி வளாகத்தின் அந்தப் புல் தரையில் சப்பணமிட்டு அமர்ந்து விட்டான்.

ஏன் என்னைப் பிடிக்கலையா என்றாள் சைந்தவி.

நீங்க சீனியர். நான் ஜூனியர். நாட் ஒன்லி சீனியர். ஜூனியஸ். என்ன வேலை பண்ணி வெச்சிருக்கீங்க. எக்ஸாக்ட்லி போர் அன்ட் ஆப் இயர்ஸ். வேஸ்ட் பண்ணியிருக்கீங்க. எவ்ளோ அருமையான சான்ஸ்ஸ விட்டிருக்கீங்க. உங்க மேல கோபம் கோபமா வருது? ரியலி ஆர் யூ மேட்?

ஆமான்டா மேட்தான். ஒரு பொண்ணு இப்படி வந்து அதுவா காதலைச் சொன்னா இப்படித்தான்டா பேசுவீங்க. என்னால உன்னை நினைக்காம, உன்னைப் பார்க்காம முடியலடா. ப்ளீஸ் புரிஞ்சுக்கோடா.

தட்ஸ் ஓ.கே. இதெ ஏன் நீங்க நாலு வருஷத்துக்கு முன்னாடியே சொல்லல. இப்போ வந்து… அதான் கன்ப்யூஸ்டா இருக்கு.

ஏன் இப்போ சொன்னா ஏத்துக்க மாட்டீயா? என்னால சொல்ல முடியலடா. ஒடனே கால்குலேசன் போட்டு இப்போ எப்படின்னுல்லாம் கேட்காதடா. என்னவோ அப்போ அப்படித்தான். இப்போ இப்படித்தான்.

இல்லே எனக்குப் புரியுது. எனக்கும் ஒங்க மேல க்ரிஷ் இம்ப்ரெஸ்… அப்படியே நிறுத்திக் கொண்டான் சூரியக்குமார்.

ஏதோ சொல்ல வர்றறே சொல்லு.

நீங்க தப்பா நெனைச்சுப்பீங்கன்னு நினைக்கிறேன்.

அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல. சொல்லலன்னாத்தான் தப்பா நெனைச்சுக்குவேன்.

நான் இன்பாக்சுவேஷன்னு நெனைச்சிட்டேன்.

போடா மயிறு. அப்போ ஏன்டா நீ எங்கிட்டே வந்து முன்னாடி வந்து சொல்லல.

நீங்க என் சீனியர். அத்தோட லெக்சரரா வேற. நான் எப்படிச் சொல்ல முடியும்?

இப்போ என்ன சொல்றே?

இந்தப் பிராப்ளத்தெ நீங்களே சால்வ் பண்ணுங்க.

நான் ஒரு ரூட்ல சால்வ் பண்ணா, நீ வேற ரூட்ல சால்வ் பண்ணுவீயேடா?

ஒரு வேலைக்குப் போய்ட்டு மேரேஜ் பண்ணிக்கலாமா?

என்னோட ரூட்லயே சால்வ் பண்றீயே. வேலையெல்லாம் ரெடி. மெட்ராஸ்ல ஒரு ஐ.டி. கம்பெனியில்ல உனக்கும் எனக்கும் ஒரு வேலை ரெடியா இருக்கு.

நான் இன்டர்வியூ எல்லாம் அட்டென்ட் பண்ணாமலா?

லாஸ்ட் மன்த் ஒரு கேம்பஸ் இன்டர்வியூ நடந்துச்சே. ஞாபகம் இருக்கா?

நீங்களும் அந்தக் கேம்பஸ்ல கலந்துக்கிட்டீங்களா?

சைந்தவி தலையை ஆட்டினாள்.

அதன் பிறகு இருவரும் சென்னைக்கு வந்ததும், ஒன்றாக வேலை பார்த்ததும், காதல் புரிந்ததும், வீட்டில் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததும், ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டதும், யாழினி பிறந்ததும் அதன் பிறகு உறவுகள் வந்து ஒட்டிக் கொண்டதும் எல்லாம் சடுதியில் நடந்து முடிந்தது போல இருந்தது சைந்தவிக்கு.

என்னம்மா என்னோட பேசாம எதையோ யோசிச்சுக்கிட்டு இருக்கே என்றாள் யாழினி சைந்தவியின் மேல் ஒரு டெடி பியரைப் போல விழுந்து அவளை உசுப்பியபடி.

அதாவதுடா குட்டி, அம்மாவுக்கும் உன்னோட வயசுல உன்னைப் போல மூணு லட்சியங்கள் இருந்துச்சுடா.

யாழினிக்கு கண்கள் விரிந்தன.

மூணும் நிறைவேடிச்சுத்தானே? ஏன்னா எங்க மிஸ் சொன்னாங்க சின்ன வயசுலேர்ந்து அப்படி நினைக்கிற எதுவும் நிறைவேறிடும்ன்னு.

சைந்தவிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

சொல்லும்மா என்று யாழினி துரிதப்படுத்தினாள்.

இல்லடா செல்லம் என்றாள்.

அப்படின்னா அப்பா வரட்டும். உன்னோட அந்த மூன்று லட்சியங்களையும் நிறைவேத்தச் சொல்வோம் என்றாள் யாழினி சைந்தவியைக் கட்டிக் கொண்டு.

சைந்தவிக்கு ஒரு கணம் என்ன சொல்வதென்று புரியாமல் அவளை அறியாமல் அவளுக்குச் சிரிப்பு வந்தது. இனிமேல் சூரியக்குமார் நீட் தேர்வு எழுதி டாக்டராவதோ, அவனது வயதை அவளை விட மூன்று வயது குறைப்பதோ, ஒரே ஒரு குழந்தை அதுவும் ஆண் குழந்தை என்பதோ காலத்தை எப்படி பின்னோக்கி நகர்த்துவது என்று நினைக்க நினைக்க சிரிப்பு அதிகமாகிக் கொண்டே போனது. யாழினியையும் அவளைப் பார்த்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

நீ ஏன் இப்படிச் சிரிக்கிறே என்றாள் சைந்தவி.

அம்மா நீ ஏன் இப்படிச் சிரிக்கிறே என்றாள் யாழினி பதிலுக்கு.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...