19 Jan 2025

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர்.

தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

மனிதர்களின் பழக்கங்களை விளக்க நினைக்கும் போது, இதனாலோ என்னவோ புலவர்கள் தங்கள் விளக்கங்களுக்குத் தாவரங்களைத் துணை கொள்கிறார்கள்.

குறிப்பிட்ட வயதில் மனிதர்கள் வளர்வது நின்று விடலாம். பழக்கங்கள் அப்படியா? ஆயுள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. எனவே, பழக்கங்களைத் தாவரங்கள் துணை கொண்டு விளக்குவது சரியாகவே படுகிறது.  

மனிதர்கள் பழக்கங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

அதுவும் கெட்டப் பழக்கங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பழக்கங்கள் விதைகளையும் செடிகளையும் மரங்களையும் போன்றவை.

எந்த ஒரு பழக்கமும் முதலில் ஒரு விதையைப் போல விழுந்து முளைக்கத் தொடங்குகிறது.

ஒரு செடி மிகச் சிறியதாக இருக்கும் போது அதை எளிதில் பிடுங்கி விடலாம்.

அதுவே சற்று வளர்ந்த செடி என்றால், அதை கொஞ்சம் கஷ்டப்பட்டாவது பிடுங்கி விடலாம்.

அதுவே மரமாகி விட்டால் பிடுங்குவது கஷ்டந்தான் இல்லையா?

கெட்டப் பழக்கங்களும் அப்படித்தான்.

அது சிறிய அளவில் இருக்கும் போது, அதைப் பிடுங்கி எறிந்து சுலபமாக மாற்றி விடலாம்.

அதுவே சிலநாட்கள் பழகி விட்டால், கொஞ்சம் மெனக்கெட்டால் கஷ்டப்பட்டாவது பிடுங்கி எறிவதைப் போல மாற்றி விடலாம். அதுவே நீண்ட நாட்கள் பழகி விட்டால் மரத்தைப் பிடுங்கும் கதைதான்.

இதைத்தான் வள்ளுவர் இப்படி சொல்கிறார்,

“இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும காழ்த்த இடத்து.” (குறள், 879)

என்று.

நல்ல பழக்கங்களுக்கும் இது அப்படியே பொருந்தும்.

முதலில் பழகத் துவங்கும் போது ஒரு நல்ல பழக்கம் என்பது விதையைப் போல விழுந்து முளைக்கத் துவங்குகிறது. நாளாக நாளாகச் செடியாக வளர்கிறது. நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகும் போது மரமாகி விடுகிறது.

நல்ல பழக்கங்கள் நல்ல மரங்கள் போன்றவை. அவை நல்ல கனிகளைத் தரும் போது அவை மரங்களுக்கும் பெருமை தருகின்றன, சுற்றி இருப்பவர்களுக்கும் பயன் தருகின்றன.

நல்ல பழக்கங்கள் பெருமைக்குக் காரணமாகின்றன.

தனக்கும் மற்றவர்களுக்கும் பெரும் பயன் தருகின்றன.

அப்படியானால் கெட்ட பழக்கங்கள் நச்சு மரங்களா என்றால், அதற்கு வள்ளுவர் ஆம் என்றே பதில் உரைக்கிறார்.

“நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்

நச்சு மரம்பழுத் தற்று.” (குறள், 1008)

என்று சொல்லும் அவர்,

“பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்.” (குறள், 216)

என்று சொல்வதிலிருந்து, அவர் சொல்ல வருவது புலப்படுகிறதுதானே?!

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...