17 Jan 2025

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது.

ஒரு பெண்ணாகச் சுதந்திரமாகவும் துணிவாகவும் பயணித்துக் கொண்டிருந்த வாழ்க்கை அவருடையது. எந்தப் பெண்ணுக்கும் அப்போதும் சரி, இப்போதும் சரி கிடைக்காத வாழ்க்கை அது.

அவர் அறிந்திருந்த அறிவைப் போல, அவர் பெற்றிருந்த அனுபவங்களும் அதிகம். அவர் எல்லாமுமாக இருந்திருக்கிறார். எளியரோடு எளியராய், மன்னவர்களோடு சரி சமமாய் எனப் பலவிதமாக இருந்திருக்கிறார். கள்ளுண்டு களித்திருக்கிறார். நெல்லிக்கனி உண்டு நெகிழ்ந்திருக்கிறார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சகலமாகவும் இருந்திருக்கிறார். கடவுளோடு பேசியவராகவும் கடவுளையும் ஆற்றுப்படுத்தியவராக இருந்திருக்கிறார்.

ஒரு நாடோடியாக, அறிவுஜீவியாக என இரண்டுமாக இருப்பது எல்லாருக்கும் கைவந்து விடாது. அது ஔவைக்கே கைவந்திருக்கிறது.

அந்த அனுபவத்தில் அவர் பாடுகிறார்,

“கற்றதுகைம் மண்ணளவு கல்லாதது உலகளவென்று

உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த

வெறும்பந் தயம்கூற வேண்டாம் புலவீர்

எறும்புதன் கையாலேஎண் சாண்.”

கல்விக்குக் கடவுளாகக் கூறப்படும் கலைமகளே நாள்தோறும் கற்றுக் கொண்டிருக்க, சில நூல்களை மட்டும் படித்து விட்டு மேதாவி என்று யாரும் தன்னை மார் தட்டிக் கொள்ள வேண்டாம் என்கிறார் ஔவை.

இதை யார் சொன்னாலும் சரிதான். அதுதான் உண்மையும் கூட. ஆனால், ஔவை சொல்வதில்தான் அதற்கான தனிச் சிறப்பே அடங்கியிருக்கிறது. இரண்டடியால் வள்ளுவர் உலகை அளந்தார் என்றால், ஔவை அதிலும் ஓரடியைக் குறைத்து ஆத்திசூடியால் உலகை அளக்கிறார். அந்த ஔவையும் இந்த ஔவையும் ஒன்றா, வேறா என்றால் துணிவோடும் சுதந்திரத் தினவோடும் ஒலிக்கும் குரலில் எல்லா ஔவையும் ஒன்றாகவே இருக்கிறார்கள்.

எண்சாண் உடம்பு உங்களுக்கு மட்டும் இருக்கிறது என மார்தட்டிக் கொள்ள என்ன இருக்கிறது? எறும்புக்குக் கூட அப்படித்தான் உடல் இருக்கிறது.

சில நூல்களைக் கற்று யார் வேண்டுமானாலும் மேதாவியாகி விடலாம். அதிலென்ன சிறப்பு இருக்கிறது? யார் வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டு இருக்கிறார்களோ அதில்தான் சிறப்பே அடங்கியிருக்கிறது என்பதுதான் ஔவை இதன் மூலமாகக் கூற வரும் செய்தி.

பள்ளிகளுக்கு விடுமுறை என்பதும், கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதும், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை என்பதும் நிறுவனமயமாக்கிக் கொண்டு நாமாக ஏற்படுத்திக் கொண்ட ஏற்பாடுகள். கற்றலுக்கு எப்படி விடுமுறை விட முடியும்? அதனால்தான்,

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்”

என்று உலகநீதி பேசுகிறார் உலகநாதர்.

கல்வி என்பது ஆழம் காண முடியாத கடல். கடலில் இருக்கும் மீன்கள் எவ்வளவு வேண்டுமானாலும் நீந்தி நீந்தி அதன் ஆழங்களைக் கண்டு கொண்டே இருக்கலாம்.

கல்வி என்பது எல்லை இல்லாத வானம். பறவைகள் எவ்வளவு வேண்டுமானாலும் சிறகசைத்து சிறகசைத்து அதன் பறக்கும் எல்லைகளை விரித்துக் கொண்டே போகலாம்.

“கல்வி கரையில கற்பவர் நாள் சில” (நாலடியார், 135)

என தமிழ் இலக்கியம் கல்விக்கான அறம் சொல்வதில் கற்போருக்கான பேருண்மை இருக்கிறது.

கல்லாதவரைக் ‘களர் நிலம்’ என்றும் ‘விலங்கு’ என்றும் வள்ளுவம் உரைத்த பின், கற்றவர் ஆன பின் தொடர்ந்து கல்லாதவரை, ‘எறும்பு’ எனக் கூட அல்லாது, அதற்கும் கீழே என்று சொல்ல வருகிறாரோ ஔவை?!

*****

No comments:

Post a Comment

அவனவன் கிரகம்!

அவனவன் கிரகம்! இந்த ஜோதிடர்கள் ஒவ்வொருவரும் எம்எஸ், எம்டி டாக்டர்களைத் தாண்டி சம்பாதிக்கிறார்கள். ஜோதிடர் ஆவதற்கான நீட் தேர்வு குறித்து அற...