16 Jan 2025

இரா. அறிவழகனின் ‘அரும்பவிழும் அந்தி’ கவிதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

இரா. அறிவழகனின் ‘அரும்பவிழும் அந்தி’ கவிதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என ஒரு நாளின் பொழுதுகளை ஆறு சிறு பொழுதுகளாகப் பிரிக்கிறது தமிழ்த்திணை மரபு.

இவ்வாறு (இந்த ஆறு) சிறுபொழுதுகளில் மருத நிலத்தில் பிறந்த அறிவழகன் தேர்ந்து கொண்டது முல்லை நிலத்திற்குரிய சிறுபொழுதான அந்தி எனப்படும் மாலைப் பொழுதை. இஃதைத் திணை மயக்கம் என்பதா? கவிஞர்களின் வழக்கம் என்பதா?

மாலையென்பது பிற்பகல் ஆறு மணியிலிருந்து 10 மணி வரை உள்ள காலமாகத் தமிழ் மரபு சுட்டினால், அந்தி என்பது மாலையின் கைக்குழந்தை என்பதைப் போல கதிர் மறைவை ஒட்டியக் காலமாக இலக்கியங்கள் சுட்டுகின்றன.

அந்தி என்பது அம் + தீ.

அம் என்பதை அழகு எனப் பொருள் கொண்டால், மறையும் கதிரவனின் தீயின் அழகை அழகிய தீயாகக் கொண்டு அந்தி எனக் கொள்வது அழகானது. அவ்வழகை உலையில் உருகும் பொன்னின் அழகு என,

“வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப” (அகநானூறு, 71)

என்று சங்க இலக்கியம் பாடுகிறது. இதைப் பாடியச் சங்கப்புலவரின் பெயரும் அந்தி எனும் அடையோடு அந்தி இளங்கீரனார் என வழங்கப்படுவதை எண்ணி வியப்பதா? தமிழ்ப் புலமையின் இயல்பே அஃதென ஏற்பதா?

அம் என்பதை ‘அம்முதல்’ எனும் பொருளில் மறைத்தல் அல்லது ஒளித்தல் எனப் பொருள் கொண்டால், மாலையில் மறையும் கதிரவனின் கதிரை மறைத்தலால் அப்பொழுதை அந்தி எனப் பொருள் கொள்ளும் வகையில்,

“விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப்

பசுங்கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி” (புறநானூறு, 376)

எனச் சங்க இலக்கியம் மறைக்காமல் எடுத்தியம்புவதையும் எண்ணி வியக்க வேண்டியிருக்கிறது.

ஆக, அந்தி என்பது சூரியன் மறையும் அழகிய மாலைப் பொழுது என்கிறது நம் இலக்கியம்.

அதுமட்டுமல்லாது, அந்தியில் மலரும் பூவொன்றுக்கு அந்தி என்பதை அடையாகச் சேர்ந்து அந்திமல்லி (அந்தி மந்தாரை) என வழங்கும் பெயர்ச்சிறப்பும் நம்மிடம் இருக்கிறது. முல்லை நிலத்தின் சிறுபொழுதான மாலையிலேயே முல்லை மலரும் மலர்கிறது. இவையெல்லாம் அந்திக்கு இயற்கையும் தமிழும் இணைந்து இயைந்து செய்துள்ள சிறப்புகள். அறிவழகனும் தம் கவித்தொகுப்பால் அந்திக்குச் சிறப்பு செய்கிறார்.

இப்படி சில மலர்கள் மட்டுமா சிறப்பான அந்த அந்தியில் மலர்கின்றன? அந்தியில் வேறென்ன மலர்கிறது என்பதை

“காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலரும்இந் நோய்.” (குறள், 1227)

என்று மூன்றாம் பாலும் பேசுகிறது.

காதலைப் போலக் கவிதையும் ஒரு நோய்தான் போலும். அது காலந்தோறும் மனிதர்களைத் தொற்றிக் கவிஞர்களாய் மாற்றிக் கொண்டே இருக்கிறது. கவிஞர்களும் அதற்காகக் காலந்தோறும் அரும்பி, கவியுணர்வில் போதாகி, கவித்தொகுப்புகளால் அந்நோயை மலர விடுகின்றனர்.

வேறெந்தப் பொழுதை விடவும் அந்திக்கு இருக்கின்ற தனிச்சிறப்பு இரவையும் பகலையும் சந்திக்க வைக்கும் கிறக்கமான தருணமாக அது அமைவதுதான். அந்தியின் சந்திப்பில் பகல் உறங்குகிறது, இரவு விழிக்கிறது. கவிஞர்களின் கற்பனையும் சிறகு விரிக்கிறது.

உடலானது உறக்கத்துக்குத் தன்னைத் தயாராக்கும் அந்தப் பொழுதில் உணர்வுகள் விழித்தெழுகின்றன. அந்த உணர்வுகள் உயிரை உலுக்கி எடுக்கின்றன. உயிரைக் கொல்லாமல் கொல்லவும் அந்த அந்திப் பொழுதில் உணர்வுகள் நேரம் குறித்து வைக்கின்றன. இதை அப்படியே சித்திரமாக,

“மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்

வேலைநீ வாழி பொழுது.” (குறள், 1221)

என்றெல்லாம் அந்தியைக் கண்டு, அதன் கொலைபாதகத்தைக் கவிநயம் கொண்டு சொல்லோவியமாக்கிய பாரம்பரியம் தமிழ் கவிஞர்களுக்கு உண்டு.

அந்திப் பொழுதானது காதலர்களையும் கவிஞர்களையும் ஏதோ செய்கிறது.

பகலில் அக்கம் பக்கம் பார்த்து பேசு, இரவில் அதுவும் பேசாதே என்பார்களே. அதனால்தான், இந்தப் பகலையும் இரவையும் சந்திக்க வைக்கும் அந்திப் பொழுதில் கவிஞர்கள் அந்தியோடு அவ்வளவு பேசி அளாவளாவுகிறார்கள் போலும்.

“உன்னை நினைத்து

எழுதிய

கவிதைகளால்

மனசுக்குள்

மணந்து

சிவக்கிறது

மருதாணி”

என்ற கவிதையை அறிவழகன் அந்த அந்திப் பொழுதில்தான் எழுதியிருக்க வேண்டும். இப்படித் தன்னை நினைத்து என்று இல்லாமல், உன்னை நினைத்து என்று தம் காதலரை நினைத்துத் துவங்குவதிலிருந்து இத்தொகுப்பில் காதல் அரும்புகள் அவிழத் தொடங்குகின்றன அறிவழகன் எனும் இக்கவியழகனுக்கு.

அறிவழகன் தன்னுடைய ஆதர்ச கவிஞராக வைரமுத்துவைக் குறிப்பிடுகிறார். அவரது திரைப்பயணம் “பொன்மாலைப் பொழுது – இது ஒரு பொன்மாலைப் பொழுது” என்று துவங்குகிறது. அதனாலேயே என்னவோ, அறிவழகனின் கவித்தொகுப்பும் ‘அரும்பவிழும் அந்தி’ என்று தம் ஆதர்ச கவிஞரின் வழியில் அந்தி மாலையிலிருந்து தலைப்பெடுத்துத் துவங்குகிறது.

தம் காதலருக்கு மருதாணி பறிக்கும் அந்த அந்தி வேளையில் அரும்பவிழும் செடிகளைக் கவனிப்பவருக்கு,

“அடுத்தப் பூவின்

அரும்பைச் சுமக்கும்

செடி”

கண்ணுக்குத் தெரிகிறது. வாடி உதிரும் பூக்களைச் சுமக்கும் அந்தச் செடிக்கு அரும்புவதும் பூவாவதும் வாடி உதிரும் என்பதுதெரிந்துதான் இருக்கிறது. ஆனாலும் அது சுமக்கிறது. ஏன் சுமக்கிறது? அதற்கான பெரும்பாடத்தை அந்தி அதற்குக் கற்றுத் தருகிறது. அந்த அந்திப் பொழுதில் பகலே உதிர்ந்து போகும் போது, அடுத்தடுத்து அரும்பியும், அரும்பி உதிரும் அரும்புகளைப் பற்றி அந்தச் செடி ஏன் கவலை கொள்ளப் போகிறது?

நாட்டில் அரும்புகளுக்கு மட்டுமா அப்படிப்பட்ட பிரச்சனை இருக்கிறது. மரங்களுக்கும் இருக்கின்றது.

செடிகளாய் இருக்கும் போதே பாடம் படித்து விட்டால், விருட்சங்களான பின்பு அவை ஏன் கவலைப்படப் போகின்றன?

“புதைந்து

முளைத்தன

விருட்சங்கள்,

காத்திருக்கின்றன

கோடரிகள்”

என எத்தனை கோடரிகளின் காம்புகள் அதே மரத்திலிருந்து தயாரானாலும், அத்தனை கோடரிகளுக்கும் வெட்டுவதற்கான மரங்களைப் பிரசவிக்க அந்த மரம் விதைகளோடு தயாராகத்தான் இருக்கிறது.

இப்படி மருதாணி – செடி – மரம் என அந்தியில் பார்த்து கவி முடித்து, இரவு உணவுக்குத் தயாராகும் போது அங்கும் ஒரு கவிதை பிறக்கிறது அறிவழகனுக்கு.

“இரை தேடி அலைந்த மீனை

இரையாக்கிய கொக்கு

இரவு விருந்தானது”

எல்லா மீன்களுமா கொக்குக்கு இரையாகும்? கொக்கிடம் சிக்காத மீன்கள் மனிதர்களிடம் சிக்குவதைக் காட்டுகிறார் இப்படி,

“புழுக்களின்

துடிப்பும்

தூண்டில்களின்

நடிப்பும்”

என்று. அது சரி! எல்லா மீன்களுமா தூண்டிலில் சிக்குகின்றன? கொக்குக்கும் இரையாகாமல், தூண்டிலிலும் சிக்காத மீன்களோ,

“தனித்து வாழும்

அடுக்கங்களில்

தொட்டில் மீன்களாய்

சுருங்கி விட்ட வாழ்க்கை”

என வாழ்க்கைப் பாடம் நடத்துவதைக் காட்டுகிறார்.

அந்தி – இரவு உணவு – அடுத்துப் படுக்கலாம் என்று பார்த்தால் அங்கும் ஒரு கவிதை படிக்கிறார்,

“பஞ்சு மெத்தை

வைத்திருப்பவனுக்கு

வராத தூக்கம்

வந்து

தொல்லை செய்கிறது

படுக்க இடமில்லாதவனை”

என்று. அட! என்னடா வாழ்க்கை இது என்று யோசிப்பதற்குள், அந்த யோசனையை பூசனை செய்யும் வகையில்,

“தெரிந்து தெளிவதற்குள்

முள்ளில் மரணிக்கிறது

வாழ்வு”

என்கிறார்.

“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.” (குறள், 339)

என்று உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையே வாழ்வு இறந்து பிறக்கிறது என்பார் வள்ளுவர். அறிவழகனுக்கு அந்த இடைவெளியானது தெளிவின்மைக்கும் தெளிவுக்கும் இடையே அமைந்து,

“தூர்ந்து போகாமல்

என் தங்கை அணிகிற

வேப்பங்குச்சிகளை”

என முள்ளில் மரணிக்கும் அளவுக்கு வாழ்வு ஏன் கொடுமையாகிறது என்பதற்கான காரணத்தை முள்ளாய் இதயத்திற்குள் செருகுகிறது. எத்தனை காலம் வேப்பங்குச்சிகளையே அணிந்து காலம் கடத்துவாள் தங்கை? அவளுக்கு மணம் செய்விக்க வேண்டுமே. அதற்கு அண்ணனாய் அவரிடம் என்ன இருக்கிறது என்பதையும் கவலைத்துவம் தோய கவித்துவமாய்,

“எங்கள் ஊர்களில்

தாலிக்கான

தங்கம்

மண்ணில் விளைகிறது

மஞ்சளாய்”

என்கிறார். மருத நிலத்தில் பிறந்த அறிவு நிறைந்த கவியழகனுக்கா இப்படி ஒரு சோதனை என்றால், அந்த வேதனையையும்

“ஒன்றாய்

இரண்டாய்

ஓராயிரமாய்

விழுகின்ற நெல்மணிகள்

முறங்களின் தூற்றுதலில்

பறக்கின்றன

அடகுக்கடை நோக்கி”

எனச் சில பத்தாண்டுகளாகத் தொடரும் சோக வரலாற்றைக் காட்டி, தம் கவிதைகள் வெறும் கற்பனை மட்டுமன்று, தற்கால காவிரிகடைமடைப்பகுதியின் காட்சி சித்திரம்  என்று எடுத்தியம்புகிறார். இப்படி கடந்து, கரைந்து கொண்டிருக்கிறது அவரது அந்திப் பொழுது.

அந்தி மயங்கிய இரவில் இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால், காதலரோடு புலத்தல் நேரிடாதா? அதையும் கவிதையாலேயே சமாளிக்கிறார் இப்படி,

“நீ பேச மறுத்த

சண்டையிலும்

என்னோடு பேசுகிற

உன்கால் கொலுசு.”

என்று. காதல் பிணக்கைத் தீர்த்து விட்ட பின்பு, சமூகப் பிணக்கைக் கவிதை மூலம் கணக்குப் போட்டுப் பார்க்கிறார்.

“கைபேசிகளின்

கலிகாலத்தில்

மனிதனில் எப்படி

சான்றோன் வருவானென…?”

எனக் கவலைப்பட்டபடியே,  

“காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தான்கண்ட வாறு” (குறள், 849)

எனும்படியான

“பித்தர்களைத் தெளிவிக்க

மீண்டும் பிறந்து

வாரும் வள்ளுவரே”

என்று அழைப்பு விடுக்கிறார் அறிவழகன். இவ்வளவு தூரம் வந்தக் கவிஞர் அரசியல் பேசாமல் போனால்தான் ஆச்சரியம்.

“பிச்சைகளுக்காய்

அடிக்கிற

சாட்டைகளின் அலறலில்

பதற்றப்படுகின்றன

உருமிகள்”

என அரசியல் சாட்டையையும் உருவி விடுகிறார். காவி பூசிய களங்கத்திற்கு எதிராக வள்ளுவரே ஆவியாக எழுந்து சாட்டை எடுத்தது போல அமைந்து விடுகின்றன அவ்வரிகள். இவ்வளவு தந்தும் கவிஞனுக்கு இந்தச் சமூகம் தருவது என்னவென்று யோசித்துப் பார்ப்பவர்,

“பசிக்கிற

பொழுதெல்லாம்

கிடைக்கிற சொற்கள்

என்னைத்

தின்கின்றன”

என்கிறார்.

பாரதியை, பிரமிளை என்று இந்தச் சமூகம் அப்படித்தானே பசிக்குத் தின்ன கொடுத்தன. அதை நினைத்துக் கவிகள் தோன்றாமலா இருந்து விடுவார்கள்?

“தின்று

துப்பிய விதை

அழுவதில்லை

மீண்டும்

தின்னத் தருகிறது

ஒரு கனியை”

என்பது போலப் பாவேந்தராய், பெருஞ்சித்திரனராய், அறிவழகனாய்த் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கான நம்பிக்கை எங்கு பிறக்கிறது. அரும்பவிழும் அந்திப் பொழுதில் மலரும் – வளரும் நிலவிடமிருந்தே பிறக்கிறது. நிலவுக்கும் அந்திக்காவலன் என்ற பெயர் இருக்கிறதல்லவா! அந்த அந்திக்காவலனிமிருந்து நம்பிக்கைக்காவலனாய் வாழ்விற்கான நம்பிக்கை,

“பிறை நிலா

வானம்

கற்றுத் தருகிறது

தேய்ந்த பிறகும்

வளரும் வித்தையை”

என்பதாகப் பிறக்கிறது. அந்த நம்பிக்கையோடு வளமாக வாழவேண்டிய வாழ்க்கைத் தேர்வில் கவிஞர்கள் தோற்கலாம். ஆனால் அவர்கள் படைத்த கவிதைகள் தோற்பதில்லை. தோல்விகளைத் தோற்கடிக்கவே கவிஞர்கள் கவிதைகளைப் படைக்கிறார்கள் என்பதை,

“தோல்வியை நினைத்தால்

ஆயிரம் வலிகள்

தோல்வியை

ஆராய்ந்தால்

ஆயிரம் வழிகள்”

என அறிவழகனின் வரிகள் காட்டுகின்றன. இப்படியாக அந்தியில் தொடங்கி விடியற்காலையின் சந்தி வருவதற்குள் அந்தி எப்படியெல்லாம் தாக்கத்தைத் தருகின்றன என்பதை முடிவுரையாக,

“அந்தியின் அரும்புகளும்

அரும்புகளின் அந்தியும்

மலர்கின்றன

காதலுக்கு விருந்தாகவும்

கவலைக்கு மருந்தாகவும்”

என்று கூறும் அறிவழகனை இனி, அறிவழகன் என்றும் அழைக்கலாம், அந்தியழகன் என்றும் அழைக்கலாம்.

நூல் வெளியீடு குறித்த விவரங்கள் :

நூலின் பெயர் : அரும்பவிழும் அந்தி,

ஆசிரியர் பெயர் : முனைவர் இரா. அறிவழகன்,

நூலின் விலை : ரூ. 100/-

வெளியீடு : மசிவன் பதிப்பகம், III/199, ஆ.கூடலூர், ஆயந்தூர், கண்டாச்சிபுரம் வட்டம், விழுப்புரம் மாவட்டம். அஞ்சல் குறியீட்டு எண் : 605 755

பதிப்பகத் தொடர்பு எண் : 94860 69548

*****

1 comment:

  1. எளியவனின் கவிதையை மிக அழகாக ரசித்து ருசித்து எழுதிய தங்களுக்கு நன்றி ஐயா. தங்களின் எழுத்துக்களால் என் கவிதை பெருமை அடைந்தது. அழகான நேர்த்தியான கட்டுரைகவிதையாகவே அமைந்திருக்கிறது

    ReplyDelete

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...