ஏ.ஆர்.சி எனும் எமன் வடிவில் வந்து கொண்டிருக்கும் அபாயம்!
உங்களுக்கு
எல்.ஐ.சி என்றால் என்னவென்று தெரியும்.
எம்.என்.சி
என்றால் என்னவென்று தெரியும்.
கே.எப்.சி
என்றால் என்னவென்று தெரியும்.
ஏ.ஆர்.சி
என்றால் என்னவென்று தெரியுமா?
கடன்
வாங்கி அதைத் திருப்பிக் கட்டுவதற்குள் படாதபாடு பட்டவர்களுக்கு அநேகமாக ஏ.ஆர்.சி பற்றித்
தெரியும்.
நீங்கள்
ஒரு வங்கியிலோ அல்லது நிதி நிறுவனத்திலோ கடன் வாங்கியிருப்பீர்கள். பொருளாதார நெருக்கடி
காரணமாகவோ அல்லது நெருக்கடியான சூழ்நிலைகள் காரணமாகவோ அந்தக் கடனைக் கட்டுவதில் தாமதம்
ஏற்படும் போது உங்கள் அலைபேசிக்கோ, மின்னஞ்சலுக்கோ சம்பந்தமில்லாத ஒரு நிறுவனத்திடமிருந்து
கடனை விரைவில் கட்டுமாறு எச்சரிக்கையோ, மிரட்டலோ வரும்.
நியாயமாகப்
பார்த்தால் நீங்கள் கடன் வாங்கிய வாங்கியோ அல்லது நிதி நிறுவனமோதான் கடனை விரைவில்
கட்டுமாறு உங்களுக்கு தகவலையோ அல்லது நினைவூட்டலையோ வழங்க வேண்டும். ஆனால் சம்பந்தமில்லாத
நிறுவனம் ஒன்று உங்களுக்கு கடனைக் கட்டுவது குறித்து நினைவூட்டலோ, தகவலோ கூட அல்லாமல்
எச்சரிக்கையும் மிரட்டலையும் வழங்கினால் அந்த நிறுவனம்தான் ஏ.ஆர்.சி.
Asset
Reconstruction Company என்பதன் சுருக்கம்தான் ஏ.ஆர்.சி என்பதாகும்.
இங்கே
அடித்தால் அங்கே வலிக்கும் என்று திரைப்படங்களில் வில்லன்கள் வசனங்கள் பேசுவதைப் போலத்தான்
இதுவும்.
கடன்
வழங்கிய நிறுவனம்தானே கடனை வசூலிக்க வேண்டும். சம்பந்தமில்லாத நிறுவனம் ஒன்று கடனை
வசூலிக்க ஏன் களத்தில் இறங்க வேண்டும்? அதுவும் அதிரடியாக, அச்சுறுத்தும் வகையில் ஏன்
இறங்க வேண்டும்?
கடன்
கொடுத்தவர் கடனைக் கேட்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. சம்பந்தமில்லாத ஒருவர் வாங்கிய
கடனைக் கட்டி விடு என்று மிரட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது? இப்படியெல்லாம் உங்களுக்கு
இப்போது யோசிக்கத் தோன்றினால்… நீங்கள் ஏ.ஆர்.சியைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள
வேண்டிய நேரம் வந்து விட்டது என்று பொருள்.
தற்போது
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் போன்றவை கொடுத்த கடன் வசூலாகாவிட்டால், அந்தக் கடனை
விற்று விடுகின்றன.
கத்தரிக்காய்
விற்பதைக் கேட்டிருப்பீர்கள், பரங்கிக்காய் விற்பதைக் கேள்விபட்டிருப்பீர்கள். கடனை
விற்பதை இப்போதுதான் கேள்விபடுகிறீர்கள் என்கிறீர்களா?
இதை
எப்படிச் சொல்வது என்றால், முன்பெல்லாம் கடன் கொடுத்தவர் வசூலாகாத பட்சத்தில் ஒரு ரௌடியை
வைத்து மிரட்டுவார் இல்லையா? வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கூட கமல் செய்வார் இல்லையா?
இந்த
வேலையைத்தான் வசூலாகாத கடன்களை வசூலிக்க வங்கிகளும் நிதிநிறுவனங்களும் செய்கின்றன.
வங்கிகளின் வசூல்ராஜாக்கள்தான் இந்த ஏ.ஆர்.சி.
இன்னும்
அணுக்கமாகச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், வசூல்ராஜாக்களின் நிறுவனம்தான் ஏ.ஆர்.சி.
நாட்டில்
எது எதற்கெல்லாம் நிறுவனங்கள் உருவாகின்றன பார்த்தீர்களா?
இப்படி
நிறுவனங்களை உருவாக்கி வைத்திருப்பவர்களை ஏதோ சாதாரண பிழைப்பு கிடைக்காத ஆட்கள் என்று
நினைத்து விடாதீர்கள். இந்தியாவின் மிகப்பெரிய வணிக சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸே இப்படி
ஒரு நிறுவனத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. அந்த அளவுக்கு இது போன்ற நிறுவனங்கள் மூலமாகத்
தற்போது வருமானம் கொட்டத் தொடங்கியிருக்கிறது.
ஆகவே,
பொதுத்துறை வங்கியில்தானே கடன் வாங்கினோம். அவர்கள் மென்மையாக அணுகித்தான் கடன்களை
வசூல் செய்வார்கள் என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். அண்மையில் பொதுத்துறை வங்கிகளில்
ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியே தன் கல்விக்கடன்களை ரிலையன்ஸ் ஏ.ஆர்.சிக்கு விற்றிருக்கிறது.
இப்படி விற்றபின் அந்தக் கடன்களை வசூலிப்பது சம்பந்தமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து
தகவல் வரும் என்று நினைக்காதீர்கள். ரிலையன்ஸ் ஏ.ஆர்.சியிலிருந்துதான் கடன் வசூலிப்பது
சம்பந்தமான அனைத்துத் தகவல்களும் வரும்.
கடனை
வசூலிப்பதுதான் அவர்களுடைய வேலை என்பதால் கடனை வசூலிக்க அனைத்து விதமான சாம, பேத, தண்ட
முறைகளையும் ஏ.ஆர்.சி நிறுவனங்கள் கையாள்கின்றன. ஏனென்றால் இதில் புரளும் வருமானம்
அப்படி. வருடத்துக்கு 42,000 கோடி வரை கடன்களை வசூலிக்க வங்கிகளும், நிதி நிறுவனங்களும்
ஏ.ஆர்.சிக்குக் கொடுத்துச் செலவிடுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
தனியார்
ஏ.ஆர்.சி நிறுவனங்கள் போக, அரசாங்கமே தற்போது ஏ.ஆர்.சி நிறுவனங்களை உருவாக்கத் தொடங்கி
விட்டது. நேஷனல் அசெட் ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனி லிமிடெட் மற்றும் இந்தியா டெப்ட் ரிசொலிசன்
கம்பெனி லிமிடெட் என்பவையே அந்த நிறுவனங்கள். அரசாங்கம் டாஸ்மாக்கையே நடத்தும் போது
இதென்ன பெரிய ஆச்சரியம் என்கிறார்களா? அதுவும் சரிதான்.
அப்படியானால்
நீங்கள்தான் இனி கடன் வாங்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் கடன் வசூலிக்கும்
ஏ.ஆர்.சி நிறுவனங்கள் கடன்களை வசூலிக்க இன்ன முறையைத்தான் கையாளும் என்று சொல்வதற்கில்லை.
கடன்களை வசூலிக்க அவை எந்த அளவுக்கும் இறங்கி வேலை செய்யும்.
மின்னஞ்சல்
(இமெயில்), குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்), புலனம் (வாட்ஸ்ஆப்) என மிரட்டுவது, உருட்டுவது
என்பதைத் தாண்டி ஆன்லைன் மோசடி முறையிலும் கடன்களைக் கறக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
அது மட்டுமா? மகிந்திரா நிதி நிறுவனம் வழங்கிய கடனை வசூலிக்க சென்ற ஏ.ஆர்.சி நிறுவனம்
ஒன்று விவசாயியின் கர்ப்பிணி மகளை வாகனமேற்றியே கொன்றிருக்கிறார்கள்.
ஏ.ஆர்.சிக்கள்
கடனை வசூலிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதால் கடன் வாங்க நினைப்பவர்கள்தான்
கடன் வாங்குவதில் ஓர் எல்லையை நிர்ணயித்துக் கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
போலிருக்கிறது.
“வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.” (குறள், 435)
என்று
வள்ளுவர் அன்றே தெரிந்தே சொன்னார்தான் போலும்!
*****
No comments:
Post a Comment